Last Updated : 13 Apr, 2019 11:10 AM

 

Published : 13 Apr 2019 11:10 AM
Last Updated : 13 Apr 2019 11:10 AM

கட்டிடங்களின் கதை 15: உலகின் உயரமான கனவுப் பாலம்

பொதுவாக கான்கிரீட் பாலம், தொங்கும் பாலம், மரப் பாலம் போன்ற பாலங்களைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்போம்.  ஆனால், கண்ணாடிப் பாலம் உண்மையில் புதிதுதான்.

அப்படியான கண்ணாடிப் பாலம் சீனாவின் ஹுனான் மாகாணத்தில் உள்ள ஜாங்ஜியாஜீ என்னும் உயரமான மலைப் பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

ஜாங்ஜியாஜீ தேசியப் பூங்காவின் மலையில் தொடங்கும் இந்த கண்ணாடிப் பாலம் ஹுனான் மாகாணத்தில் உள்ள மலையில் முடிவடைகிறது. இந்தப் பாலத்தின் தரைப்பகுதி முழுவதுமே கண்ணாடிகளால் அமைக்கப்பட்டுள்ளது.

கடந்த 2016-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தக் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்டபோது உலகின் மிக உயரமான கண்ணாடிப் பாலம் இதுதான். உலகின் மிக நீண்ட பாலம்மும்கூட. ஆனால், தற்போது ஹீபி மாகாணத்தில் உள்ள கண்ணாடிப் பாலம்தான் உலகின் உயரமான, நீளமான கண்ணாடிப் பாலமாக உள்ளது.

 தரைமட்டத்திலிருந்து 300 மீட்டர் உயரத்திலும், இரு மலைக்கு இடையே 430 மீட்டர் நீளத்திலும் இந்தப் பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்தக் கண்ணாடிப் பாலத்துக்காக மொத்தம் 39 மில்லியன் டாலர் செலவிடப்பட்டுள்ளது.

திகில் அனுபவம்

இந்தப் பாலத்தில் ஒரே நேரத்தில் 800 பேர் நடந்து செல்ல முடியும்.இந்த அதிசயத்தக்க கண்ணாடிப் பாலத்தை வடிவமைத்தவர் உலகப் புகழ்பெற்ற கட்டிடக்கலை வடிவமைப்பாளர் ஹய்ம் டோட்டன். இவர் இஸ்ரேலைச் சேர்ந்தவர். இந்தக் கண்ணாடிப் பாலத்தின் இருபுறங்களிலும் பிரம்மாண்டமான நான்கு தூண்கள் அமைக்கப்பட்டுள்ளன.

பாலத்தின் தரைத்தளத்தைத் தவிர்த்து மற்ற பகுதிகள் அனைத்தும் இரும்பால் இணைக்கப்பட்டுள்ளன. வடிவமைப்பு கட்டமைப்பு சார்ந்து பத்து உலக சாதனைகளை இந்தக் கண்ணாடிப் பாலம் படைத்துள்ளது.

இந்தக் கண்ணாடிப் பாலத்தில் மொத்தம் 120 டெம்பர் கண்ணாடிகள் பொருத்தப்பட்டுள்ளன.இந்தக் கண்ணாடிகள் ஒவ்வொன்றும் மூன்று அடுக்குக் கனமும் இரண்டு அடுக்குத் தடிமனும் கொண்டவை. முந்நூறு அடி உயரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்ணாடிப் பாலத்தின் வழியே நடந்துகொண்டே ஜாங்ஜியாஜீ தேசியப் பூங்காவின் பள்ளத்தாக்கின் அழகை ரசிக்க முடியும்.

அதேநேரத்தில் வாழ்நாளில் மறக்க முடியாத திகிலான அனுபவத்தை இந்தக் கண்ணாடிப் பாலத்தில் நடக்கும்போது சுற்றுலாப் பயணிகள் உணர்வார்கள். இந்தப் பாலத்தில் நடந்து செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குத் துணியிலான சிறப்புக் கால் உறை வழங்கப்படுகிறது.

இந்தக் கால் உறை அணிந்து கொண்டு நடப்பதால் கண்ணாடிகளில் கீறல் ஏற்படுவதைத் தடுக்கவும் பயணிகள் வழுக்கி விழாமலும் இருக்க முடியும். அதேபோல் இப்பாலத்திலிருந்து 285 அடி உயரத்திலிருந்து பங்கீ ஜம்பிங் சாகசத்தில் ஈடுபட முடியும்.

இதுவே உலகத்தில் மிக உயரமாக பங்கீ ஜம்பிங் சாகச இடமாகக் கருதப்படுகிறது. மேலும், இந்தக் கண்ணாடி பாலம் முடியும் இடத்தில் மூன்று ஊஞ்சல்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த ஊஞ்சல்களில் விளையாடுவது அந்தரத்தில் பறப்பதுபோல் உள்ளது.

சுத்தியில் அடித்தாலும் உடையாது

இந்தக் கண்ணாடிப் பாலம் திறக்கப்பட்ட முதல் நாளே  ஏழாயிரம் சுற்றுலாப் பயணிகள் பாலத்தைக் கண்டு ரசிக்க குவியத் தொடங்கினார்கள். பாலம் திறக்கப்பட்ட பதிமூன்று நாட்களிலேயே எண்பதாயிரம் சுற்றுலாப் பயணிகள் வருகை தந்தனர். எதிர்பார்க்காத அளவுக்குச் சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை குவியத் தொடங்கியதால் பாலம் சிறிது நாட்கள் மூடப்பட்டது.

 ஆயிரக்கணக்கான பயணிகள் இந்தக் கண்ணாடிப் பாலத்தைப் பயன்படுத்தியதால் கண்ணாடிகளுக்கு ஏதேனும் பாதிப்பு ஏற்பட்டதா என ஆய்வு செய்யப்பட்டது. மேலும், பாலத்தைக் காணவரும் சுற்றுலாப் பயணிகளுக்கான கார் பார்க்கிங் வசதிகள், நுழைவுக் கட்டணம், பயணிகளுக்கான சேவை ஆகியவை சரிசெய்யப்பட்டன. பின்னர் 2016 –ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30-ம் தேதி ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் மீண்டும் திறக்கப்பட்டது.

இந்தக் கண்ணாடிப் பாலத்தின் பாதுகாப்பைச் சோதிக்கும் விதமாகச் சுற்றுலாப் பயணிகளிடம் மிகப் பெரிய சுத்தியல் கொடுக்கப்பட்டு பாலத்தின் கண்ணாடிகள் மீது அடிக்கப்பட்டது. ஆனால், பலமுறை சுத்தியால் அடித்தும் கண்ணாடிகளுக்கு எந்தப் பாதிப்பும் ஏற்படவில்லை.

 அதேபோல் கண்ணாடிப் பாலம் எந்த அளவுக்கு எடை தாங்கும் என்பதைச் சோதித்துப் பார்க்க அந்தப் பாலத்தில் எஸ்யூவி கனகர கார் ஓட்டிப் பார்க்கப்பட்டது.

இந்தக் கண்ணாடிப் பாலத்தைக் கண்டு ரசிக்க சீன  அடையாள அட்டை இருந்தால் மட்டும்தான் டிக்கெட் பதிவுசெய்ய முடியும்.இதன் காரணமாக சீனாவுக்கு வரும் சுற்றுலாப் பயணிகள் டிராவல் ஏஜென்சிகள் மூலமாக டிக்கெட்கள் முன்பதிவு செய்யக் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

அதேபோல் உழைப்பாளர் தினமான மே 1- 3, சீனாவின் தேசிய விடுமுறை நாட்களான அக்டோபர் 1-7 ஆகிய  தேதிகளில் மட்டும் கண்ணாடிப் பாலத்துக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தென் கலிபோர்னியா பல்கலைக்கழகத்தில் முதுகலைக் கட்டிடவியல் படித்துள்ளார் ஹய்ம் டோட்டன்.  கட்டிடக்கலைக்கு ஒரு புதிய மொழியை உருவாக்கிய ஹய்ம் டோட்டன்  கவிஞர், தத்துவவியலார், கல்வியாளர் எனப் பன்முக ஆளுமை. டோட்டன் என்ற பெயரில் செயல்பட்டுவரும் இவருடைய நிறுவனம் உலக அளவில் பல்வேறு விருதுகளைப் பெற்றுள்ளது.

“ஜாங்ஜியாஜீ கண்ணாடிப் பாலம் மேகங்களில் இசைக்கான கனவு, வானத்துக்கும் பூமிக்கும் இடையே வானில் நடனமாடும் ஒரு கனவு, இந்தப் பாலம் கனவுகளுக்கான ஒரு கட்டிடம்” என்கிறார் ஹய்ம் டோட்டன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x