Last Updated : 23 Feb, 2019 12:35 PM

 

Published : 23 Feb 2019 12:35 PM
Last Updated : 23 Feb 2019 12:35 PM

வீட்டுக் கடன் வாங்க எந்த வங்கியைத் தேர்ந்தெடுக்கலாம்?

நிஜமாக ஒரு சொந்த வீடு வாங்க வேண்டுமென்றால் அது பலருக்கும் மலைப்பான விஷயம்தான். பொதுவாக நடுத்தர மக்களின் மிகப் பெரிய முதலீடு என்பது ஒரு வீடு வாங்குவதுதான். மிகக் குறைவானவர்கள்தாம் வீடு வாங்குவதற்கான முழுத் தொகையையும் சேமிப்பாக வைத்திருப்பார்கள். ஆக, வங்கிக் கடன் என்பது சொந்த வீடு வாங்குபவர்களுக்கு இன்றியமையாததாகிவிட்டது.

எந்த நிதி நிறுவனத்தில் வீட்டுக் கடன் வாங்கப் போகிறோம் என்பது முக்கியமான ஒரு விஷயமாகி விடுகிறது. சரியான வங்கியைத் தேர்ந்தெடுக்க இந்தக் கட்டுரை உங்களுக்கு உதவக்கூடும்.

சில வங்கிகள் கூவிக் கூவி வீட்டுக் கடன், தங்கநகைக் கடன் அளிக்க முன்வருவது உண்மைதான். காரணம் வீடோ நகைகளோ அடமானமாக இருப்பதால் கடன் வாராக்கடன் ஆகிவிட்டாலும் கவலை இல்லை. இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான கோணம், எவ்வளவு வட்டி செலுத்த வேண்டியிருக்கும் என்பதுதான். காரணம் ஒரு வங்கியைவிட இன்னொரு வங்கியில் அரை சதவிகிதம் வட்டி அதிகம் என்றால்கூடச் செலுத்த வேண்டிய தொகை மிக அதிகமாக இருக்கக் கூடும்.

சிலர் அப்பாவித்தனமாகத் தேசியமயமாக்கப்பட்ட எல்லா வங்கிகளிலும் வீட்டுக்கடனுக்கான வட்டி விகிதம் ஒரே அளவுதான் என்று நினைத்துக் கொண்டிருக்கிறார்கள். அப்படியொன்றும் அவசியமில்லை.

எனவே, வீட்டுக்கடன் வாங்கும்போது தெரிந்த வங்கி என்பதை மட்டும் பார்க்காமல் இரண்டு, மூன்று வங்கிகளில் விசாரித்துப் பாருங்கள்.

புதிதான ஒரு வங்கிக்குச் சென்று வீட்டுக் கடன் வாங்க வேண்டுமென்றால் ‘இப்போது நீங்கள் எந்த வங்கியில் கணக்கு வைத்திருக்கிறீர்கள்? அங்கேயே ஏன் நீங்கள் வீட்டுக் கடனை வாங்கக் கூடாது?’’ என்று கேட்பார்கள். “அங்கு அதிக வட்டி விகிதம்’’ என்பது போன்ற உண்மையான காரணத்தை நீங்கள் கூறுவதில் தவறில்லை. (அவர்கள் கேட்கும் கேள்விக்கான காரணம் இதுதான். ஏற்கெனவே அங்கு ஏதாவது கடன் வாங்கிவிட்டு அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்தாமல் விட்டதால்தான், உங்களுக்கு அவர்கள் வீட்டுக் கடன் கொடுக்க மறுக்கிறார்களோ என்ற சந்தேகம்தான் அது).

தவிர, நீங்கள் உண்மையை மறைத்தாலும் அது விரைவிலேயே வெளிவந்து விடும். காரணம் சிபில் (CIBIL). CIBIL என்பது ஒரு மதிப்பெண். எந்த வங்கியில் கடன் வாங்கினாலும் அது சரியாகத் திருப்பிச் செலுத்தப்படுகிறதா அல்லது வாராக்கடன் ஆகி விடுகிறதா என்பதையெல்லாம் சம்பந்தப்பட்ட வங்கி உள்ளிட்ட நிதி நிறுவனங்கள் உடனே CIBIL அமைப்புக்குத் தெரியப்படுத்தும்.

ஒவ்வொருவருக்கும் அவர்களது கடந்த காலக் கடன் செலுத்திய நேர்மையை உணர்த்தும் வகையில் ஸ்கோர் வழங்கப்படும். இந்த ஸ்கோர் 300லிருந்து 900 வரை இருக்கலாம். எவ்வளவுக்கு எவ்வளவு நீங்கள் 900 என்பதை நெருங்குகிறீர்களோ அவ்வளவுக்கு அவ்வளவு உங்கள் வீட்டுக் கடன் விண்ணப்பம் ஏற்றுக் கொள்ளப்பட வாய்ப்பு அதிகம். பொதுவாக சிபில் ஸ்கோர் 700 அல்லது அதற்கு அதிகமாக இருந்தால் வங்கிகள் கடன் வழங்கத் தயங்குவதில்லை. வங்கிகள் நம்மைத் தேர்வு செய்வது இருக்கட்டும், நாம் எந்த வங்கியைத் தேர்ந்தெடுப்போம் என்பதற்கு மீண்டும் வருவோம்.

CIBIL என்றால் Credit Informtion Bureau of India Limited என்பதன் சுருக்கம். நீங்கள் மிக அதிக சிபில் ஸ்கோர் பெற்றவராக இருந்தால் கொஞ்சம் குறைவான வட்டி விகிதத்தில் எனக்கு வீட்டுக்கடன் தரலாமே என்று கூறிக்கூட வங்கியிடம் சில சலுகைகளைப் பெறலாம்.

வட்டி விகிதத்தில் இரண்டு விதம் உண்டு. ஒன்று, நிரந்தர வட்டி. அதாவது கடனைத் திருப்பிச் செலுத்தும் வகையில் மீதம் இருக்கும் தொகைக்கு ஒரே குறிப்பிட்ட சதவீதத்தைத்தான் வட்டியாகச் செலுத்த வேண்டி இருக்கும். இது சுமார் 8 சதவீதம் என்று இருப்பது வழக்கம். மற்றொன்று மாறுபடும் வட்டி விகிதம். சந்தைக்குத் தகுந்தாற்போல் இந்த வட்டி விகிதம் மாறிக்கொண்டிருக்கும். அதிகமாகலாம், குறையலாம்.

இந்த இரண்டில் எது நமக்கு நன்மையானது என்பதை ஒரே வார்த்தையில் விடையாக அளித்துவிட முடியாது. தவிர இப்போதெல்லாம் கணிசமான வங்கிகள் நிரந்தர வட்டி விகிதத்தை நீக்கிவிட்டன.

பொதுவாக அரசுடைமை யாக்கப்பட்ட வங்கிகள் EMI தொகை மற்றும் கால நிர்ணயத்தில் சாதகமாக இருக்கும். தனியார் வங்கிகள் வட்டி விகிதத்திலும், தொடக்கத்தில் சீக்கிரமே வீட்டுக் கடன் தொகையை உங்களுக்கு அளித்து விடும் என்பதுபோன்ற தூண்டிலை வீசும். நீங்கள் கவனத்துடன் செயல்பட்டு தேர்வு செய்ய வேண்டும்.

சில வங்கிகள் ஆவணங்களைச் சரிபார்ப்பதற்கும் கடன் நடைமுறைக்கும் தனியாகக் கட்டணம் வசூலிக்கும் (Documentation and Processing fee). இது கணிசமாகவும் இருக்க வாய்ப்பு உண்டு. வீடு வாங்குகையில் நம் சேமிப்பை அது துடைத்துப் போட்டுவிட வாய்ப்பு அதிகம் என்பதால், இது போன்ற வங்கிக் கட்டணங்கள்கூட நமக்கு அப்போது பெரிய தொகையாகப் படும். மாதத் தவணைகளை உரிய நாளில் செலுத்தா விட்டால் எந்த வகை அபராதம் எவ்வளவு சதவீதம் போடப்படும் என்பதையெல்லாம் முதலிலேயே கேட்டு அறிந்து கொள்ளுங்கள்.

நீங்கள் வாங்கும் வீட்டின் மதிப்பில் எவ்வளவு சதவீதம் வங்கியிலிருந்து கடனாக வழங்கப்படும் என்பதை ஒப்பிடுங்கள். இதை LTV (Loan to Value) விகிதம் என்பார்கள். எந்த வங்கியிலிருந்து வீட்டுக் கடனைப் பெறலாம் என்று யோசிக்கும்போது இடையில் ஏதாவது பணம் கைக்கு வந்தால் முன்னதாகவே வீட்டுக்கடனை அடைத்துவிட முடியுமா? அப்படி அடைக்க முற்பட்டால் அதற்காக வங்கி ‘அபராதத் தொகை’ (Pre closure fee) விதிக்குமா? மறைமுகக் கட்டணங்கள் உண்டா?  இன்ஷுரன்ஸ் திட்டங்கள் நமக்கு ஏற்றாற்போல் உள்ளனவா என்பன போன்றவற்றில் எல்லாம் கவனம் செலுத்துங்கள். இப்படிப் பலவற்றையும் சீர்தூக்கிப் பார்த்து வங்கியைத் தேர்ந்தெடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x