Published : 19 Jan 2019 11:49 AM
Last Updated : 19 Jan 2019 11:49 AM

அழகு, ஆரோக்கியம், ஆத்தங்குடி டைல்ஸ்

காரைக்குடி என்றாலே செட்டிநாடு வீடுகள், கோயில்கள், வித விதமான உணவு எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். அவற்றில் ஒன்று, ஆத்தங்குடி டைல்ஸ்.

காரைக்குடி அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் ஆத்தங்குடி. அங்கு மனிதர்களின் உழைப்பால் இயந்திரங்கள் துணை இல்லாமல் முழுக்க முழுக்க கலை நயத்துடன் சிமெண்ட், ஜல்லி, நிறத்துக்காக ஆக்சைடுகள் கலந்து செய்யப்படுவது ஆத்தங்குடி டைல்ஸ். 60-70 ஆண்டுகள் வரை நன்றாக உழைக்கக் கூடியது.

இவற்றை பாலிஷ் செய்யத் தேவையில்லை. இதன் வண்ணமும் வடிவமும் பார்ப்பவர்கள் விழிகளையும் மனதையும் கொள்ளைகொள்பவை. பலப்பல வடிவங்களில் பல வண்ணங்கள் சேர்த்து உருவாக்க படுகின்றது.  ஏறத்தாழ 4,000 டிசைன்கள் உள்ளன. இந்த வகை கற்கள் எட்டு, பத்து, பனிரெண்டு அங்குலங்களில் தயாரிக்கப்படுகின்றன. பலரின் கடின முயற்சிக்குப் பின்னால் இந்தக் கற்கள் உருவாக்க படுகின்றன.

முதல் நிலையில் ஆத்தங்குடி டைலுக்கான அலங்காரவடிவ அச்சை கண்ணாடி மீது வைப்பார்கள். கண்ணாடி மீது வைத்தால் பளபளவென்று இருக்கும். அச்சு பிரிவுகளைக் கொண்டதாக இருக்கும். உதாரணமாக ஒரு பூ வடிவ அச்சு என்றால் பூவின் இதழ்களுக்கான பிரிவுகள் தனித் தனியே பிரிந்து காணப்படும். ஒவ்வொரு பிரிவையும் சிறிய தடுப்பு பிரிக்கும். இதனால் அந்தப் பிரிவுக்குள் வண்ணக் கலவையை ஊற்றும்போது அவை ஒன்றுசேர்ந்துவிடாமல் தனித் தனியே இருந்து பூ வடிவை உண்டாக்க வழிசெய்யும். இந்த வண்ணக் கலவையை அந்த அச்சின் பிரிவுகளில் ஊற்றுவார்கள்.

முன்பக்கத்துக்குத் தேவையான வேலைப்பாடு முடிந்தபின்னர் அச்சில் பின்பக்கத்தில் உலர்ந்த மணல், சிமெண்ட் கொண்ட கலவையைக் கொண்டு நிரப்புவார்கள். பின்னர் அதன் மீது ஈரமான மணல், சிமெண்ட் கலவையை வைத்துப் பூசுவார்கள். பின்பு அதைச் சமன் செய்து டிசைன் நன்றாக அதில் பிடிப்பதற்கு அழுத்தம் கொடுப்பார்கள். இவை நன்றாக உலர்ந்த பிறகு தண்ணீரில் குறைந்தது இரண்டு நாட்கள் அதிகபட்சம் ஐந்து நாட்கள் ஊறவைப்பார்கள்.

இந்தப் பதப்படுத்துதல் நிறைவேறிய பிறகு டைல் பதிப்புக்கு உகந்ததாகத் தயாராகிவிடும். செட்டிநாடு வீடுகளில் மட்டும்தான் இந்த வகை டைல்  பெரும்பாலும் பயன்படுத்தப்பட்டது. ஆனால் இப்போது நகர்ப்புற மக்கள் பெரும்பாலானோர் ஆத்தங்குடி டைல்ஸை விரும்புகிறார்கள். அதற்குக் காரணம் செராமிக் டைல்ஸ் பதித்த வீடுகளில் இருப்போருக்கு 40 வயதை தொட்டவுடன் மூட்டுவலி ஆரம்பித்து விடுகிறது. அதனால் மாற்று வழி தேட ஆரம்பித்து விட்டனர்.

வெயில் காலத்தில் குளிர்ச்சியையும் குளிர்காலத்தில் வெது வெதுப்பையும் தரும் க்ரானைட் பயன்படுத்தலாம் என்றால் பட்ஜெட் சிறுது அதிகம் என்பதால், அனைவரும் பயன்படுத்த முடியாத சூழ்நிலை. மார்பிளைப் பயன்படுத்தலாம் என்றால் குளிர்காலத்தில் அதிகக் குளிர்ச்சியை வெளிபடுத்தும் என்பதால் பலரும் அதை விரும்பவில்லை. ஆத்தங்குடி டைல்ஸ் குளிர்ச்சியும் இல்லாமல் வெப்பமாகவும் இல்லாமல் சமமாக இருப்பதாலும் விலையும் குறைவு என்பதாலும் பலரும் இதை விரும்புகின்றனர். ஒருநாளைக்கு அதிகபட்சம் 200-500 டைல்ஸ் மட்டுமே தயாரிக்க முடியும் என்பதால் ஆத்தங்குடி டைல்ஸ் பதிக்கமுடிவு செய்தவுடன் தங்களது விருப்பத்துக்கு ஏற்ப ஆர்டர் கொடுத்தால் மிகவும் நேர்த்தியாக கலைநயத்துடன் செய்து தருவார்கள்.

- கிருத்திகா முருகேசன்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x