Last Updated : 20 Oct, 2018 11:59 AM

 

Published : 20 Oct 2018 11:59 AM
Last Updated : 20 Oct 2018 11:59 AM

கட்டிடங்களின் கதை 04: ஒரு கல்... ஒரு கண்ணாடி

இன்றைக்குச் சுவர்களுக்கு பதில் நவீன கட்டிடக் கலையை பிரதிபலிக்கும் வண்ணம் கண்ணாடிகள் பொருத்தப்படுகின்றன. இம்முறை இன்றைக்குப் பரவலான பயன்பாட்டில் இருக்கிறது. இதற்கு முதல் விதையைத் தூவியவர் பிலிப் ஜான்சன் என்ற கட்டிடக் கலைஞர்தான்.

அமெரிக்காவில் உள்ள நியூ கானானில் இயற்கை சூழ்ந்த மலைப்பகுதியின் நடுவே இவர் கட்டிய கண்ணாடி வீடுதான் (Glass House) இன்றைய கண்ணாடிக் கட்டிடங்களுக்கு முன்னோடி.

குருவுக்குக் கவுரவம்

பிலிப் ஜான்சன் தன்னுடைய குருவான லுத்விக் மிஸ் வான் டெர் ரோஹேவை கவுரவிக்கும் விதமாக இந்தக் கண்ணாடி வீட்டை வடிவமைத்தார். மலைகள் சூழ்ந்த நியூ கானான் பகுதியில் ஜான்சனுக்கு சொந்தமான 49 ஏக்கரில் இந்தக் கண்ணாடி வீட்டை வடிவமைத்தார் அவர். இன்றைய சூழ்நிலையில் சுவர்களுக்குப் பதில் கண்ணாடிகளை பொறுத்தி கட்டிடம் கட்டுவது சுலபமான விஷயமாக உள்ளது. ஆனால் அறுபது ஆண்டுகளுக்கு முன்னர் இதுபோன்ற கட்டிடங்களைக் கட்ட போதிய உபகரணங்கள் இல்லை.

இதன் காரணமாகவே இந்தச் சிறிய கண்ணாடி வீட்டை கட்ட அவருக்கு 4 ஆண்டுகள் பிடித்தன. 1945-ல் தொடங்கிய இதன் கட்டிடப் பணி 1949-ல்தான் நிறைவடைந்தது. இதில் முக்கியமான மற்றொரு விஷயம் என்னவென்றால் பிலிப் ஜான்சன் வடிவமைத்த முதல் கட்டிடம், இந்த கண்ணாடி வீடு என்பதுதான்.

செவ்வக வடிவப் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த வீடு முழுவதும் கண்ணாடிகளால் சூழப்பட்டுள்ளது. வீட்டின் ஒரத்தில் அமைக்கப்பட்டுள்ள பெரிய தூண்தான் இந்த வீட்டுக்குப் பக்கபலமாக உள்ளது. இந்தத் தூணின் ஒருபுறம் கழிவறையும் மற்றொருபுறம் கணப்பு அடுப்பும் உள்ளது.

சுவர்களுக்குப் பதிலாகப் பொருத்தப்பட்டுள்ள கண்ணாடிகள், எஃக்கால் இணைக்கப்பட்டுள்ளன. இதனால் பல ஆண்டுகள் கடந்தும் இந்தக் கண்ணாடி வீடு தற்போதும் பலமாக உள்ளது. அதேபோல் அப்போது பயண்படுத்தப்பட்ட நாற்காலிகள், மேஜை, கலைப்பொருட்கள் ஆகியவை தற்போதும் இந்த வீட்டில் உள்ளன.

உயிரோட்டமான கட்டிடம்

இந்தத் தெளிவான கண்ணாடிகள் வெளிப்புற அழகின் உயிரோட்டத்தை வீட்டுக்குள்ளும் பிரதலிப்பதாக இந்த வீடு வடிவமைக்கப்பட்டுள்ளது. குறிப்பாக இந்தக் கண்ணாடி வீட்டைச் சுற்றியுள்ள ஓக் மரங்கள், புல்வெளி, மேடு பள்ளமாக உள்ள மலைச்சரிவு ஆகியவை இந்த வீட்டுக்கு வரும் சுற்றுலாப் பயணிகளின் கண்களுக்கு இயற்கையோடு ஒன்றிணைந்திருப்பது போன்ற உணர்ச்சியைத் தருகிறது.

அதேபோல் இரவு நேரத்தில் நீள வானில் நட்சத்திரங்கள் மின்ன இந்தக் கண்ணாடி வீட்டில் வசிப்பது என்பது பால்வெளி மண்டலத்தில் இருப்பதுபோன்ற உணர்வைத் தரும். ஒவ்வொரு பருவ நிலையையும் இயற்கையின் ஊடாகவே இணைந்து பார்க்கும் புதுமையான அனுபவத்தை இந்தக் கண்ணாடி அங்கு வருபவர்களுக்குத் தருகிறது.

கண்ணாடி வீட்டின் தரையில் பதிக்கப்பட்டுள்ள சிகப்பு செங்கற்கள் ஹெர்ரிங்போன் (Herringbone pattern) முறையில் பொருத்தப்பட்டுள்ளது. படுக்கை அறை, சமையலறை, நூலகம், ஹால் என ஒரு வீட்டில் இருக்கவேண்டிய எல்லா அம்சங்களும் இந்தக் கண்ணாடி வீட்டில் உள்ளது.

இந்த கண்ணாடி வீட்டைச் சுற்றி விருந்தினர்கள் தங்கும் விடுதி, கலைக்கூடம், சிற்பக்கூடம், பிலிப் ஜான்சனின் அலுவலகம், செங்கலால் கட்டப்பட்ட மற்றொரு வீடு என பிலிப் ஜான்சன் தன்னுடைய எண்ண ஒட்டங்களைப் பிரதிபலிக்கும் விதமாக அப்பகுதியில் மொத்தம் 14 கட்டிடங்களை அவர் வடிவமைத்துள்ளார்.

நவீன கட்டிடக் கலைக்கு வித்திட்ட இந்தக் கண்ணாடி வீடு 1997-ம் ஆண்டு அமெரிக்க அரசால் தேசிய வரலாற்றுச் சின்னமாக அறிவிக்கப்பட்டது. இந்தக் கண்ணாடிக் கட்டிடத்தைப் பார்க்க வருடத்துக்கு ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வருகைத் தருகிறார்கள்.

அமெரிக்காவின் சிறந்த கட்டிட கலைஞரான பிலிப் ஜான்சன் ஒகையோ (ohio) நகரில் 1906-ம் ஆண்டு பிறந்தவர். வரலாறு, தத்துவவியல் துறையில் பட்டம் பெற்றவர் ஜான்சன். ஐரோப்பா நாடுகளுக்கு 1928-ம் ஆண்டு சுற்றுலா மேற்கொண்ட ஜான்சன் அந்நாட்டின் நவீன கட்டிடக் கலையால் ஈர்க்கப்பட்டார். இதையடுத்து ஹார்வர்ட் கல்லூரியில் சேர்ந்து கட்டிட வடிவமைப்பில் முதுகலை பட்டம் பெற்றார்.

முதன் முதலாக இந்தக் கண்ணாடி வீட்டை வடிவமைத்தார். அதுமட்டுமல்லாது நியூயார்க் நகரில் அமைந்துள்ள அபி அல்ட்ரிக் ராக்பில்லர் தோட்டம் (Abby Aldrich Rockefeller Sculpture Garden), தற்போது சோனி பிளாசா அமைந்துள்ள ஏடி அண்ட் டி கட்டிடம், மன்ஹாட்டன் நகரில் அமைந்துள்ள மாடிசன் அவென்யூ, போர்டு வொர்த் வாட்டர் கார்டன் போன்ற ஏராளமான கட்டிடங்களை அவர் வடிவமைத்துள்ளார்.

அமெரிக்க மக்களுக்கு நவீன கட்டிடக் கலையை அறிமுகப்படுத்தியவர் ஜான்சன். மியூசியம் ஆப் மாடர்ன் ஆர்ட்டின் முதல் இயக்குநராகவும் செயலாற்றியுள்ளார். 98 வயது வரை வாழ்ந்த பிலிப் ஜான்சன், தான் முதல் கட்டிய கண்ணாடி வீட்டில் தன் ஆண் துணையுடன் இறுதிக் காலம் வரை வாழ்ந்தார். அவருடைய இறப்புக்கு பிறகு 2007-ம் ஆண்டு அமெரிக்க அரசின் வரலாற்றுச் சின்னங்களைப் பாதுகாக்கும் அமைப்பு சார்பில் பொதுமக்கள் பார்வைக்குக் கண்ணாடி வீடு திறக்கப்பட்டது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x