Published : 22 Sep 2018 10:56 AM
Last Updated : 22 Sep 2018 10:56 AM

வெறும் சுவர் அல்ல 01: வீடு, ஆசை, தேவை மற்றும் பிரச்சினை

நம் அனைவருக்கும் மகிழ்ச்சியுடன் சொந்த வீட்டில் இருக்க வேண்டும் என்ற ஆசை இருக்கிறது. ஆனால், வீடு கட்டும் வேலையைத் தொடங்கியதும் நாம் எதிர்பார்த்த மகிழ்ச்சி கிடைக்காமல் பெரும்பாலானவர்களுக்கு வருத்தம் மேலிடுகிறது.

நம்முடைய எதிர்பார்ப்பு நிறைவேறாத நேரத்தில் இப்படியான வருத்தம் வருகிறது. நேர்மறை எண்ணங்கள் எப்போதும் நிறைந்து வழிந்தோட வேண்டிய இடம் நம் வீடு. என்றாலும் வீடு கட்டும் வேலையில் சிரமங்களை எதிர்கொள்ளும்போது, ஒவ்வொரு கட்டத்திலும் வெவ்வேறு விதமான வருத்தங்களைக் கடந்து வர வேண்டிய சூழல் அமைகிறது.

இம்மாதிரியான சூழ்நிலைகளை எப்படி எதிர்கொள்வது என்பது அவசியம் எல்லோரும் அறிந்துகொள்ள வேண்டிய விஷயம்.

பொதுவாக ஒரு தொழில் / வியாபாரம் என்பது தேவையையோ ஆசையையோ பிரச்சினையையோ தீர்த்து வைப்பதாகும். ஆனால், வீடு கட்டுவது என்பது இந்த மூன்று அம்சங்களையும் உண்டாக்கக்கூடியது என வேடிக்கையாகச் சொல்வார்கள்.

வீடு என்பது உண்மையில் நம் தேவைகள், ஆசைகள், பிரச்சினைகள் ஆகியவற்றுக்கான ஒட்டு மொத்த தீர்வு எனலாம். இந்தத் தெளிவான எண்ணக் கோவையில் வீடு கட்டக் கூடிய ஒவ்வொருவரும் கட்டாயம் இருக்க வேண்டும் என்பது என் கருத்து.

வீட்டைக் கட்ட முடிவெடுத்த பின்னர் நாம் செயல்பட வேண்டிய விதம் குறித்து வரிசைக் கிரமமாக உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன். அது நிச்சயமாக உங்களுக்குப் பயனுடையதாக இருக்கும்.

நம் வீட்டைக் கட்டுவதற்காக எந்தவொரு பொறியாளரையோ கட்டிட வடிவமைப்பாளரையோ சந்திப்பதற்கு முன்பாக நாம் செய்ய வேண்டிய முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது; அது, ‘நம்மைத் தயார் செய்தல்’. இது அல்லாமல் அடிப்படையான மூன்று கேள்விகளை நம் வீட்டிலிருக்கும் அனைவரும் நமக்குள் எழுப்பிக்கொள்ள வேண்டும். அடிப்படையில் வீடு குறித்த அந்த மூன்று கேள்விகளை இங்கு தருகிறேன்.

1. வீட்டில் நம்முடைய தேவைகள் எவை?

2. நம் வீட்டில் எப்படிப்பட்ட வசதிகள் எல்லாம் இருக்க வேண்டும்?

3. எப்படிப்பட்ட விதவிதமான பிரச்சினைகள் நம் வீட்டில் இருக்கவே கூடாது ?

வீடு கட்டும்போது குடும்ப உறுப்பினர்கள் எல்லோரும் தங்கள் ஆசைகளையும் தேவைகளையும் பகிர்ந்துகொள்வது அவசியம். அப்படியில்லாமல் போனால் அழகாகக் கட்டப்பட்ட வீடு அந்தக் குறிப்பிட்ட உறுப்பினருக்குத் திருப்தி அளிக்காமல் போகலாம்.

ஏற்கெனவே குறிப்பிட்டதைப் போல வீடு என்பது நேர்மறை எண்ணங்கள் நிறைந்து வழிந்தோட வேண்டிய ஓர் அற்புதமான இடம். படிக்கும் பிள்ளைகள் உட்பட வீட்டின் அனைத்து உறுப்பினர்களும் நிறைவான எண்ணத்துடன் வீட்டுக்குள் நுழைய வேண்டும்.

தொடரும்...
கட்டுரையாளர், வலைப்பூ எழுத்தாளர், கட்டுமானப் பொறியாளரதொடர்புக்கு: senthilhoneybuilders@gmail.com

CapturePNG 

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x