Last Updated : 11 Aug, 2018 12:33 PM

 

Published : 11 Aug 2018 12:33 PM
Last Updated : 11 Aug 2018 12:33 PM

வங்கிக் கடனை மாற்றுகிறீர்களா?

ரிசர்வ் வங்கி கடனுக்கான ரெப்போ ரேட்டை இரு மாதங்களில் இரண்டாவது முறையாக 25 புள்ளிகள் உயர்த்தியுள்ளது. இதனால் வீட்டுக் கடன் உயர வாய்ப்புள்ளது. சில வங்கிகள் வீட்டுக் கடனை உயர்த்துவதாகவும் அறிவிப்பை வெளியிட்டுள்ளன. உங்களது வீட்டுக் கடன் இருக்கும் வங்கிகளும் இம்மாதிரியான சந்தர்ப்பங்களில் வீட்டுக் கடனை உயர்த்தினால், இருப்பதில் வீட்டுக் கடன் வட்டி குறைவாக உள்ள வங்கிக்கு உங்களது கடனை மாற்றலாம்.

ஒரு வங்கியிலிருந்து இன்னொரு வங்கிக்கு வட்டிக் கடனை மாற்றுவதற்குச் சில நடைமுறைகள் உள்ளன. அதே நேரம் அது சிரமமான விஷயமும் அல்ல.

கடனை மாற்றுவது எப்படி?

முதலில் உங்களது வீட்டுக் கடன் உள்ள வங்கிக்குச் சென்று ‘கடன் பரிமாற்றக் கோரிக்கை’யை விண்ணப்பமாகக் கொடுக்க வேண்டும். அந்தக் கோரிக்கையைப் பரிசீலித்து பிறகு, வங்கி, உங்களது நிலுவைத் தொகையைக் குறிப்பிட்டு ஓர் அறிக்கையை அளிக்கும். அத்துடன் ஒப்புதல் கடிதம் அளிக்கும்.

அல்லது தடையில்லாச் சான்றிதழ் அளிக்கும். இந்த ஆவணங்களை, மாற்றப்படவுள்ள வங்கியில் சமர்ப்பிக்க வேண்டும். அந்த அறிக்கையை மாற்றப்படவுள்ள அந்த வங்கி பரிசீலித்து, திருப்தியாக இருக்கும்பட்சத்தில் கடன் மாற்றத்துக்கு ஒப்புதல் அளிக்கும். பழைய வங்கியில் நிலுவையிலுள்ள உங்களது கடனை வங்கி முடித்துவைக்கும். இந்த நடைமுறைக்குப் பிறகு சொத்து தொடர்பான சொத்துப் பத்திரங்களைப் புதிய வங்கியிடம் ஒப்படைக்க வேண்டும்.

கடனை மாற்றுவது லாபமா?

மாதத் தவணைத் தொகை குறையும் என்பது வீட்டுக் கடனை மாற்றுவதில் உள்ள முதல் லாபம். இப்படிக் கடனை மாற்றும்போது உங்களது கடன் புள்ளிகள் (Credit Score) அதிகரிக்க வாய்ப்புள்ளது. கடனை மாற்றுவதன் மூலம் நீங்கள் கடனைச் செலுத்துவதில் காட்டும் அக்கறையின் அடிப்படையில் உங்கள் கடன் புள்ளிகள் உயரும். வாடிக்கையாளர் சேவையில் அக்கறை காட்டும் வங்கிகளைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்புள்ளது.

கடனை மாற்றுவதில் உள்ள சிரமங்கள்

கடனை மாற்றுவது என்பது புதிய கடனுக்கு விண்ணப்பிப்பது போன்ற நடைமுறைகளைக் கொண்டதுதான். வங்கிக் கடனுக்கான விண்ணப்பம் நிரப்புவதிலிருந்து, ஆவணங்கள் கொடுப்பது வரை அதே நடைமுறையைக் கொண்டது.

கடனுக்கான செயல் கட்டணத்தைப் (Processing Fee) புதிதாகச் செலுத்த வேண்டியிருக்கும். சில வங்கிகள் சலுகை அளிக்க வாய்ப்புள்ளது. சொத்துப் பத்திரங்களைப் புதிய வங்கிக்கு மாற்றுவதற்கான பத்திரப்பதிவு செலவையும் மீண்டும் செய்ய வேண்டியிருக்கும். அதனால் இந்தக் காரணங்களையும் ஒப்பிட்டுப் பார்த்து வங்கிக் கடனை மாற்ற வேண்டும்.

கடன் மாற்றுவதற்குத் தேவையான ஆவணங்கள்

# பூர்த்தி செய்யப்பட்ட கடன் விண்ணப்பப்படிவம்

# விண்ணப்பதாரரின் புகைப்படம்

# புகைப்படத்துடன் கூடிய அடையாளச் சான்று

# முகவரிச் சான்று

# வயதுச் சான்றிதழ்

# வருமானச் சான்று

# மாதத் தவணைத் தொகை பிடிக்கப்படும் வங்கியின் 12 மாத கால வங்கிப் பரிவர்த்தனை நகல்

# சொத்து ஆவணங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x