Last Updated : 04 Aug, 2018 10:46 AM

 

Published : 04 Aug 2018 10:46 AM
Last Updated : 04 Aug 2018 10:46 AM

தெரு வாசகம்: குஜிலிப் பாட்டுத் தெரு

குஜிலி என்றவுடன் மனது ஏடாகூடமாகக் கற்பனைசெய்துகொள்ளும். அந்த அளவுக்கு அந்தச் சொல் தவறான ஒரு செயலைக் குறிக்கப் பயன்பட்டுவந்துள்ளது. தமிழ் சினிமா கிட்டத்தட்ட அதைப் பொதுவெளியில் உபயோகிக்கத் தகாத சொல்லாக்கிவிட்டது. என்றாலும் குஜிலி என்ற பெயரில் சென்னையிலும் திருச்சியிலும் தெருக்கள் உள்ளன. குஜிலி என்ற பெயரின் பின் இருக்கும் பொருளையும் குஜிலிக்கும் அந்தத் தெருக்களுக்கும் உள்ள தொடர்பையும் தேடிச் சென்றபோது கிடைத்த தகவல்கள் வியப்பை ஏற்படுத்தின.

பொதுவாக, குஜிலி தெருக்களில் வணிகம் செழித்திருந்துள்ளது. மக்கள் அதிக அளவில் கூடும் இடமாக அந்தத் தெருக்கள் இருந்துள்ளன. இந்தத் தெருக்களை மக்கள் ஒன்று கூடி வணிகம் புரியும் வணிக வீதி என்று மட்டும் சுருக்கிவிட முடியாது. குஜிலி என்ற பெயரும் அந்தப் பெயரைத் தாங்கி இன்றும் நம்மிடையே இருக்கும் அந்தத் தெருக்களும் வரலாற்றில் அந்த அளவு முக்கியத்துவம் வாய்ந்தவையாக உள்ளன.

திருச்சியின் குஜிலித் தெரு

திருச்சியில் இருக்கும் ‘நடு குஜிலித் தெரு’ காந்தி மார்க்கெட்டுக்கு அருகில் உள்ளது. திருச்சியின் மையத்தில் இருப்பதாலோ என்னவோ இந்தத் தெரு ‘நடு குஜிலித் தெரு’ என்று அழைக்கப்படுகிறது. புறவழி நெடுஞ்சாலைகளும் பெரிய கடைவீதி உள்ளிட்ட திருச்சியின் முக்கியமான சாலைகளும் சந்திக்கும் இடத்தில் இந்தத் தெரு உள்ளது. இந்தத் தெரு அமைந்திருக்கும் பகுதி திருச்சியின் முக்கிய வணிக மையமாக இன்றும் திகழ்கிறது.

சென்னையின் குஜிலித் தெரு

19-ம் நூற்றாண்டின் இறுதியில் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு அருகில் இருக்கும் கந்தசாமிக் கோவிலைச் சுற்றி குஜிலி பஜார் இருந்துள்ளது. பர்மாவிலிருந்து வந்து குடியேறியவர்களுக்கானது அது. 1960களில் பர்மாவிலிருந்து அங்கு குடியேறியதால், அன்று முதல் அது பர்மா பஜார் என்று அழைக்கப்படுகிரது.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பாக, வெள்ளைக்காரர்கள் காலத்தில் ‘தீவ்ஸ் பஜார்’ என்று அது அழைக்கப்பட்டது. இந்த ‘தீவ்ஸ் பஜார்’ பற்றி 1925-ம் ஆண்டு வெளியான ‘பஞ்சாமிர்தம்’ இதழில் எழுத்தாளர் அ.மாதவையா விரிவாக எழுதியுள்ளார். 1913-ல் வெளியான ’விஷ்ணு ஸ்தல மஞ்சரி' இதழில் “வேடிக்கை பார்ப்பதிலேயே மனம் செலுத்தாமல் அப்போதுக்கப்போது தங்களுடைய ஜேபியிலும் மடியிலும் வைத்திருக்கும் பணப் பைகளைக் கவனித்து வர வேண்டும். இவ்விடத்தில் முடிச்சவிழ்க்கும் பேர்வழிகள் அதிகம்'' என்று மயிலை கொ. பட்டாபிராம முதலியார் எழுதியுள்ளார்.

குஜிலி: பெயர்க் காரணம்

குஜிலி என்பது குஜராத்தி பெண்களைக் குறிக்கும் சொல் எனவும், குஜிலி என்பது உருதுமொழிச் சொல் எனவும் மாறுபட்ட கூற்றுகள் இருக்கின்றன. குஜிலி எனில் இந்தியில் தினவு அல்லது அரிப்பு என்று பொருள். பெரியவர் நூ. தா. லோ. சு. அவர்கள் அதை CHRYSTILE ASBESTOS அதாவது கல்நாரில் ஒரு வகை என்று அதைக் குறிப்பிடுகிறார். இந்தக் கனிமத்துக்கும் அந்த பஜாருக்கும் என்ன சம்பந்தம் என்று தெரியவில்லை.

குஜிலி பஜார்

குஜிலி பஜாரில் விற்கப்படும் பொருட்களில் முக்கியமானது பாட்டுப் புத்தகங்கள்தாம். பாட்டுப் புத்தகங்கள் என்றவுடன், சினிமா பாடல்கள் என்று எண்ண வேண்டாம். அவை வேறு ரகம். சொல்லப் போனால், அங்கு விற்கப்பட்ட பாடல்கள் குஜிலிப் பாடல்கள் என்றே அழைக்கப்பட்டன. இன்றைய புதுக்கவிதையைப் போன்றும் கானா பாடல்களைப் போன்றும் அது தனி பாணியில் அமைந்த ஒரு வித இலக்கியமாகவே இருந்தது.

குஜிலிப் பாடல்கள்

எந்தப் பொருள் புதிதாக அறிமுகமானாலும் அதைப் பற்றிப் பாட்டாக எழுதி இருக்கிறார்கள். நடப்பு நிகழ்வுகளும் சுடச்சுடப் பாட்டாக அன்று எழுதி விற்கப்பட்டுள்ளன. இந்தப் பாட்டுப் புத்தகத்தின் விலை வெறும் அரை அணாதான்.

இந்திய விடுதலைப் போராட்டத்தில் தலைவர்களின் கைதுகளை ‘அரெஸ்டு பாட்டு’ என்ற பெயரில் உடனுக்குடன் பாடல்களாக எழுதி விநியோகித்துள்ளனர். தேச பக்தர்களுக்கு எதிரானவர்கள் தரப்பிலிருந்து ‘இராஜ விசுவாசக் கும்மி’ போன்ற சில பாட்டுப் புத்தகங்களும் வெளி வந்திருக்கின்றன.

இன்று நம்மிடையே இருக்கும் கானா பாடல்களைப் போன்று குஜிலிப் பாடல்கள் அன்று மிகவும் பிரசித்திபெற்று விளங்கின. அந்தக் காலத்தில் நடந்த நிகழ்வுகள் அனைத்தையும் இந்தத் தெருமுனைக் கவிஞர்கள் பாடியிருக்கிறார்கள். 1960கள் வரைகூட இந்த வகைப் பாட்டுப் புத்தகங்கள் குஜிலி பஜாரில் கிடைத்து வந்தன.

எரிக்கப்பட்ட குஜிலிப் பாடல்கள்

மதராஸ் ரெயில் கலகம், கிண்டிரேஸ் பாட்டு, சிலோன் கலகச் சிந்து போன்ற குஜிலிப் பாடல்கள் அப்போது மிகவும் பிரபலமாக இருந்துள்ளன. காந்திச் சிந்து, பகத்சிங் சிந்து, மாப்ளாக் கலவரச் சிந்து போன்ற பாடல்களால் இந்த வகைப் பாடல்கள் ஆங்கிலேயர்களின் வெறுப்புக்கு ஆளானது. பல்லாயிரக் கணக்கான குஜிலிப் புத்தகங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஆங்கில அரசால் எரிக்கப்பட்டன.

உதாரணப் பாட்டு

குஜிலிப் பாடல்கள் எப்படி இருக்கும் என்பதற்கு, 1922 ஜூலை 22-ம் தேதி பாளையங்கோட்டை சிறையிலிருந்து ஓடிப்போன செம்புலிங்க நாடாரைப் பற்றிய பாட்டு ஒரு உதாரணம்.

‘செம்புலிங்கம் ஓடின சங்கதி சொல்ல வேண்டாமா

அதைப்பாட வேண்டாமா

ஊரில்கேள்க வேண்டாமா

மனங்கொள்ள வேண்டாமா

அணாக்கொடுத்து புஸ்தகம்வாங்கிப் பார்க்க வேண்டாமா

பார்த்துநல்ல குற்றங்குறை தெரிய வேண்டாமா’

இந்தக் குஜிலி வகைப் பாடல்கள், இப்போது தெருக்களின் பெயராக மட்டுமே நம்மிடையே உள்ளது. சபை நாகரிகம் கருதியோ என்னவோ, இன்று நாம் அந்தப் பெயரைப் பொதுவெளியில் சொல்லவே கூச்சப்படுகிறோம், அதன் பொருள் உணராமல்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x