Last Updated : 23 Jun, 2018 10:21 AM

 

Published : 23 Jun 2018 10:21 AM
Last Updated : 23 Jun 2018 10:21 AM

தெரு வாசகம்: நெல்லையின் திருக்குறள் பாலம்

 

வ்வொரு நகரமும் தனக்கென்று ஓர் அடையாளத்தைத் தன்னுள் வைத்துள்ளது. ஆக்ராவுக்கு தாஜ்மகால், சென்னைக்கு எல்.ஐ.சி, திருச்சிக்கு மலைக்கோட்டை, மதுரைக்கு மீனாட்சி அம்மன் கோவில் என நீளும் அந்த அடையாளங்களின் பட்டியலில் திருநெல்வேலியின் ஈரடுக்குப் பாலத்துக்கும் சிறப்பான இடம் உண்டு. நெல்லையப்பர் கோயில், சுலோச்சனா சம்பத் முதலியார் பாலம் எனப் பல வரலாற்றுச் சிறப்புமிக்க இடங்கள் நெல்லையின் அடையாளங்களாக உள்ளன. 1973-க்குப் பிறகு எழுந்த இந்த ஈரடுக்குப் பாலம் முந்தைய அடையாளங்களுடன் ஒன்றாக மாறிவிடாமல் நெல்லையின் தனி அடையாளமாக உருவெடுத்துவிட்டது.

நெல்லையில் அமைந்திருக்கும் இந்தப் பாலம்தான் இந்தியாவிலேயே முதன்முதலாகக் கட்டப்பட்ட ஈரடுக்குப் பாலம். நெல்லைச் சந்திப்பில் உள்ள தண்டவாளத்தைக் குறுக்கே கடப்பதால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்கவும் போக்குவரத்து நெரிசலைத் தவிர்க்கவும் இப்பாலம் கட்டப்பட்டது. ஆசியாவிலேயே ரெயில் பாதையின் குறுக்கே அமைக்கப்பட்ட முதல் இரட்டை அடுக்கு மேம்பாலம் என்ற பெருமைக்குரிய சிறப்பு இந்தப் பாலத்துக்கு உண்டு.

1969-ல் அன்றைய முதல் அமைச்சர் மு. கருணாநிதியால் அடிக்கல் நாட்டப்பட்ட இந்த மேம்பாலம் 1973-ம் ஆண்டில் 47 லட்சம் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. அதே ஆண்டில் நவம்பர் மாதம் 13 அன்று முதல்வர் மு. கருணாநிதி இந்த மேம்பாலத்தைத் திறந்துவைத்தார். திருக்குறள் போன்று இரண்டு அடுக்குகளைக் கொண்டு கம்பீரமாக அமைக்கப்பட்டுள்ளதால் இப்பாலத்துக்குத் திருவள்ளுவர் பாலம் என்று கலைஞர் பெயர் சூட்டினார்.

இந்தியாவின் மற்ற மாநிலங்களுடன் ஒப்பிடும்போது தமிழகத்தில் உட்கட்டமைப்பு சிறந்த முறையில் வடிவமைக்கப்பட்டிருக்கும். குறிப்பாகச் சாலைகள். தமிழகத்தில் சாலையால் இணைக்கப்படாத குக்கிராமமே இல்லை. இன்றைக்குத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. பாலங்கள் கட்டப்படுவது சடுதியில் நிகழ்ந்துவிடுகிறது. ஆனால், 1973 அப்படியான காலம் அல்ல. ஆனால் அப்போதே இந்த ஈரடுக்குப் பாலத்தை, அதுவும் நான்கு ஆண்டுகளுக்குள் அவர் கட்டி முடித்தது மகத்தான சாதனைதான்.

நெல்லைச் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கும் நெல்லைச் சந்திப்பு பேருந்து நிலையத்துக்கும் அருகில் இருக்கும் எஸ்.என். ஹைரோட்டில் இந்த இரட்டை அடுக்கு மேம்பாலம் இருக்கிறது. ‘திருவள்ளுவர்’ பெயரைத் தாங்கியுள்ள இந்த மேம்பாலம் நெல்லை ஜங்சனையும் டவுனையும் இணைக்கிறது. குற்றாலத்துக்குச் செல்ல விரும்புவோரும் நெல்லையப்பர் கோயிலுக்குச் செல்ல விரும்புவோரும் இந்தப் பாலத்தைக் கடந்துதான் செல்ல வேண்டும்.

இந்தப் பாலம் 800 மீட்டர் நீளமும் 8 மீட்டர் அகலமும் கொண்டது. இந்தப் பாலத்தை 25 குறுக்குத் தூண்கள் தாங்கிப் பிடித்து நிற்கின்றன. அந்த 25 தூண்களில், 13 தூண்கள் வில் வளைவாக 30.30 மீ அகலத்தில் உள்ளன. எஞ்சிய 12 தூண்கள் 11.72 மீ அகலம் கொண்ட தாங்கிகளாக உள்ளன. இந்தத் தூண்களின் மேல் பரத்தப்பட்டிருக்கும் சிமெண்டு சிலாபுகளால் இந்தப் பாலத்தின் மேற்பரப்பு கட்டமைக்கப்பட்டுள்ளது. ஒவ்வொரு சிமெண்டு சிலாபும் 31 மீட்டர் நீளமும் 600 டன் எடையும் கொண்டதாகும். இந்தப் பாலத்தின் முதல் அடுக்கில் சைக்கிள்களும் இருசக்கர மோட்டார் வாகனங்களும் லகுரக வண்டிகளும் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன. மேல் அடுக்கில் பஸ், லாரி போன்ற கனரக வாகனங்கள் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளன.

பாலம் கட்டப்பட்டு 27 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பாலத்தில் பழுது ஏற்பட்ட காரணத்தால் அது மூடப்பட்டது. ஒரு கோடியே 45 லட்சம் செலவில் இப்பாலம் சீரமைக்கப்பட்டுப் போக்குவரத்துக்காக மீண்டும் 2000-ல் திறந்து விடப்பட்டது. புனரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு 17 ஆண்டுகள் நிறைவுபெற்ற நிலையில் பாலம் தற்போது மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்தப் பாலத்தின் கீழ்ப் பகுதி தற்போது ஆக்கிரமிப்புகளால் பிதுங்கி வழிகிறது. கீழ்ப் பாலம் சந்திப்பு பகுதியுடன் இணையும் இடத்தில் சாலை முறையாகப் பராமரிக்கப்படாததாலும், கழிவுநீர் ஓடைகள் அமைக்கப்படாததாலும் மழைநீர் தேங்குவது வாடிக்கையாகிவிட்டது. பருவமழை பெய்யும்போதெல்லாம் பாலத்தின் கீழ்ப் பகுதியில் மழைநீர் தேங்கி கழிவுநீர்க் குட்டையாக மாறுகிறது. திருநெல்வேலியின் பெருமைக்குரிய அம்சங்களில் ஒன்றாகத் திகழும் ஈரடுக்கு மேம்பாலம் போதிய பராமரிப்பு இல்லாமல் மழைநீர், பிளாஸ்டிக் கழிவுகள் தேங்கி நோய் பரப்பும் இடமாக மாறியுள்ளது.

மழைநீர் எளிதாக வழிந்தோடும் வகையில் கழிவுநீர் ஓடை அமைக்க வேண்டும் என்றும் தேங்கி இருக்கும் கழிவுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்றும் பாலத்தின் பழுதினை உடனடியாகச் செப்பனிட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் நீண்ட நாட்களாக விழிப்புணர்வு பிரச்சாரம் மேற்கொண்டு வருகின்றனர். திருநெல்வேலி மாவட்டத்தின் வரலாற்றுச் சின்னங்களுள் ஒன்றாகக் கருதப்படும் இப்பாலத்தின் தடுப்புச் சுவர்களில் வண்ண படங்களை வரைந்து அதன் கம்பீரத்தை நிலை நாட்ட பொதுமக்களும் முயல்கின்றனர். நெல்லையின் பெருமைக்குரிய அடையாளம் அதே பெருமையுடன் நிலைக்க வேண்டும் என்பதே திருநெல்வேலிக்காரர்களின் விருப்பம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x