Last Updated : 02 Jun, 2018 10:44 AM

 

Published : 02 Jun 2018 10:44 AM
Last Updated : 02 Jun 2018 10:44 AM

உங்கள் அடுக்ககத்தில் நீச்சல் குளம் இருக்கிறதா?

 

பி

ரம்மாண்ட அடுக்ககங்களில் அளிக்கப்படும் வசதிகளில் ஒன்றாக நீச்சல் குளமும் இருக்கிறது. பொருளாதாரத்தில் உயர்நிலையில் இருப்பவர்கள் ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பு வீட்டை வாங்குவதற்கு முன்பு அங்கு ஜிம் வசதி இருக்கிறதா, நீச்சல்குளம் இருக்கிறதா என்பதையெல்லாம் விசாரிக்கிறார்கள் (ஆனால் அப்படியொரு அடுக்ககத்தை வாங்கி அங்கு குடியேறியபின் அதில் எத்தனை சதவிகிதம்பேர் நீச்சல்குள வசதியைப் பயன்படுத்துகிறார்கள் என்பது கேள்விக்குறிதான்).

உறுதியான உடல் அமைப்பு உருவாக நீச்சல் துணை புரிகிறது. தண்ணீர் நம் தோலின் மேல் தொடர்ந்து அழுத்தம் அளிப்பதால், தோல் பளபளப்படைகிறது. வயிற்றுப் பகுதியின் மேல் உண்டாகும் நீரின் அழுத்தத்தால் ஜீரண உறுப்புகள் சீராக இயங்குகின்றன. இதனால்தான் நீச்சலடித்து முடித்தவுடன் அகோரப் பசி ஏற்படுகிறது. மலச்சிக்கல் பிரச்சினைக்கும் நீச்சல் நல்ல தீர்வாகிறது. எந்த வகை உடல் வலியாக இருந்தாலும் - முக்கியமாக முதுகு வலிக்கு - அற்புத நிவாரணி நீச்சல்! ஆக வீட்டு வளாகத்துக்குள் நீச்சல் குளம் இருப்பது மிகவும் நல்ல விஷயம்தான்.

ஒரு வீடோ, அடுக்ககமோ அதற்கு உரியவர்களிடம் ஒப்படைக்கப்படுவதற்கு முன்னால் உரிய முனிசிபல் அதிகாரிகள் அதற்குத் தடையில்லாச் சான்றிதழ் வழங்க வேண்டும். ஆனால் அடுக்கக நீச்சல் குளம் தொடர்பான விஷயங்களில் அனுமதி வழங்குவதற்கு முன் நீச்சல் குளத்தின் கட்டுமானம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து அரசு அதிகாரிகள் போதிய கவனம் செலுத்துகிறார்களா என்பது கேள்விக்குறி.

நீச்சல் குளத்துக்கு பாதுகாப்பாளர் ஒருவரை நியமிப்பதுண்டு. ஆனால் வாயில் காவலர்கள் விடுப்பு எடுத்துக் கொண்டால் நீச்சல் குளப் பாதுகாப்பாளரை வாயில் காவல் பணிக்கு அனுப்பிவிடுகிறார்கள். இதுபோன்ற நடவடிக்கைகள் தவிர்க்கப்பட வேண்டியவை. இப்படி உங்கள் அடுக்கக வளாகத்தில் நடந்தால் உங்கள் அடுக்கக சமூக நலச் சங்கத்தின் கவனத்துக்கு அதை உடனடியாகக் கொண்டு வந்து சரிசெய்யுங்கள். மேலும் நீச்சல் குளத்தை முறையாகப் பராமரிக்க வேண்டும். குப்பைகள் ஏதாவது இருக்கும்பட்சத்தில் சரியாக ஆட்களைக் கொண்டு அதைச் சுத்தப்படுத்த வேண்டும்.

உங்கள் குழந்தைகள் நீச்சல் குளத்துக்குச் செல்கையில் கூடவே பொறுப்பான ஒருவரும் செல்ல வேண்டும். நேரம் வீணாகுமே என்று நினைக்க வேண்டாம். புத்தகத்தையோ லேப்டாப்பையோ எடுத்துச் சென்று நீச்சல் குளத்துக்கு வெளியே அமர்ந்தபடி உங்கள் வேலையையும் கவனித்தபடி குழந்தையையும் கண்காணியுங்கள். எட்டு வயதைவிடக் குறைந்த குழந்தை என்றால் முழுக் கவனமும் குழந்தைமீதுதான் இருக்க வேண்டும்.

நீச்சல் குளம் என்பது நீச்சல் குளமாக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும். அது சுற்றுலாவுக்கான இடம் அல்ல. அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் பலரும் சேர்ந்து சாப்பிடுவது, குடிப்பது போன்ற காரியங்களைத் தவிர்க்க வேண்டும். நீச்சல் குளத்தைச் சுற்றி சைக்கிளிங் செய்வது, சறுக்கு விளையாட்டில் ஈடுபடுவது போன்றவற்றைத் தவிர்க்கலாம். வழுக்கி நீச்சல் குளத்துக்குள் விழுந்து விடலாம்.

பாதுகாப்பு விதிகளைப் பற்றி போஸ்டர் போல அச்சிட்டு நீச்சல் குளத்தின் அருகே வைப்பது நல்லது. சிலர் நிறைய நேரம் ரயிலில் பயணம் செய்திருப்பார்கள். அல்லது நீண்ட தூரத்துக்குக் காரோட்டிக் கொண்டு வந்திருப்பார்கள். அப்படி வந்த கையோடு அவர்களில் சிலர் தண்ணீரைப் பார்த்த மாத்திரத்திலேயே நீச்சலடிக்கத் தயாராகி விடுவார்கள். இது தவறு. நீச்சலடிப்பதற்கு முன் சில நிமிடங்களாவது ஓய்வெடுத்துக் கொள்வதும், பிறகு ஓரிரு நிமிடங்களுக்கு மெதுவாக ஓடுவதும் நல்லது. வயிறு முட்ட சாப்பிட்டிருந்தால் அதற்கடுத்து இரண்டு மணி நேரமாவது நீச்சலடிப்பதைத் தவிர்ப்பது நல்லது.

காற்றின் வெப்பமும், நீரின் வெப்பமும் மிகவும் வேறுபாடு கொண்டவையாக இருந்தால் அது இதயத்தைப் பாதிக்கும். மேலும் நீர் எவ்வளவுக்கெவ்வளவு குளிர்ச்சியாக இருக்கிறதோ அந்தளவுக்கு தசைப் பிடிப்பு அதிகமாக எற்படும். களைப்பும் சீக்கிரம் ஏற்படும். பொதுவாக 26 டிகிரி சென்டிகிரேடைவிடக் குறைந்த வெப்பம் கொண்ட நீரில் நீச்சலடிக்க வேண்டாம்.

வெளியூர்களிலுள்ள உறவுக்காரர்கள், நண்பர்கள் எல்லாம் உங்கள் வளாக நீச்சல் குளத்துக்குள் அழைத்து வந்து கொட்டம் அடிக்க வேண்டாம். சக அடுக்கக உரிமையாளர்களின் உணர்வுகளுக்கு மதிப்பு கொடுங்கள். உங்கள் விருந்தினர்கள் நீச்சல் குளத்துக்குப் போனால் நீங்களும் கூடச் செல்ல வேண்டும் என்பதைக் கட்டாயமாக்கிக் கொள்ளுங்கள். உங்கள் குழந்தைகளுக்கு நீச்சல்குள விதிகளைச் சொல்லிக் கொடுங்கள்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x