Last Updated : 02 Jun, 2018 10:46 AM

 

Published : 02 Jun 2018 10:46 AM
Last Updated : 02 Jun 2018 10:46 AM

தெருவாசகம்: கோவையின் ரங்கநாதன் தெரு

 

பொ

ருளாதாரம் மிகுந்திருந்தால் இன்று எந்த நகரத்தாலும் சடுதியில் நவீனமயமாகிவிட முடியும். கோவை அப்படியான நகரம். அந்த நகரத்தின் நவீனம் முன்னேறிய நாடுகளின் நகரங்களுக்கு இணையாகக் கோவையை மாற்றியிருக்கிறது. உலகின் பெரு நகரங்களில் நிறைந்திருக்கும் நவீன அங்காடிகளும் விற்பனைக் கூடங்களும் (மால்கள்) திரையரங்குகளும் இன்று கோவையிலும் உள்ளன. சொல்லப்போனால், மற்ற நகரங்களில் இல்லாத வசதிகளும் இன்று கோவையில் உள்ளன. ஆனால் கோவையின் சிறப்பு இந்த நவீனமய வளர்ச்சியில் இல்லை, அது நவீனமயத்தின் அசுர வளர்ச்சியை மீறித் தன்னுடைய பாரம்பரியத்தை உயிர்ப்புடன் வைத்திருக்கும் அதன் பாங்கில் உள்ளது. கோவையின் அந்தச் சிறப்புக்கு வலு சேர்க்கும் தெருக்களுள் ஒன்றே உப்புக் கிணறு தெரு.

உப்புக்கிணறு தெருவை கோவையின் ரங்கநாதன் தெரு எனலாம். சென்னை தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இதுவும் வணிகத்துக்குப் பெயர்போனது. இந்தத் தெரு டவுன் ஹாலை ஒட்டி இருக்கும் சந்தைப் பகுதியில் உள்ளது. இது ராஜா தெருவுக்குச் செங்குத்தாகவும் ஒப்பணக்காரத் தெருவுக்கு இணையாகவும் உள்ளது. தள்ளுபடி கால விற்பனை என்ற ஒன்று இந்தத் தெருவுக்குத் தனியே கிடையாது. இங்கு விற்கப்படும் பொருட்களின் விலை எப்போதும் தள்ளுபடி கால விற்பனையைவிடக் குறைவாகவே இருக்கும். அடித்தட்டு மக்களும் நடுத்தர மக்களும் பெரும்பாலும் அவர்களுக்கு வேண்டியதை அந்தத் தெருவில் வாங்கிக் கொள்வது வாடிக்கை.

துணிக்கடைகளும் கட் பீஸ் கடைகளும் அந்தத் தெருவினுள் மிகுதியாக உள்ளன. எண்ணிக்கையில் அவற்றுக்கு அடுத்தபடியாக கவரிங் நகை கடைகளும் ஃபான்ஸி ஸ்டோர்ஸ்களும் உள்ளன. சில வைரநகை கடைகள் அந்தச் சிறு கடைகளின் கூட்டத்தில் ஒட்டாமல் தனித்து நிற்கின்றன. எப்போதும் இந்தத் தெருவில் விற்பனை கொடிகட்டி பறக்கும். அதுவும் பண்டிகைக் காலம் என்றால் கேட்கவே வேண்டாம். அப்போது கோவைவாசிகள் மட்டுமல்லாமல்,அருகிலிருக்கும் கேரள எல்லைப் பகுதியிலிருந்தும் மக்கள் மலைபோல் குவிந்து இருக்கும் துணிமணிகளை அள்ளிச் செல்வர்.

சுடிதாரைத் துணியாக வாங்குவோர் அதை எங்குத் தைப்பது என்று கையைப் பிசையத் தேவையில்லை. தி.நகரில் இருக்கும் ரங்கநாதன் தெருவைப் போன்று இங்கேயும் தையல்காரர்கள் நிறைந்து இருக்கின்றனர். அந்தச் தெருவில் இருக்கும் ‘ஓட்டேஜஸ்’ பில்டிங்கினுள் நுழைந்தால், துரித உணவகம் போன்று துரித தையலகங்கள் நிரம்பி வழிகின்றன. துணியை அவர்களிடம் கொடுத்த பத்தாவது நிமிடத்தில் அது சுடிதாராக உங்கள் கையில் திரும்பி வந்துவிடும். அதுவே பிளவுஸ் என்றால் சுமார் இரண்டு மணி நேரம் பிடிக்கும்.

மேலும், நீங்கள் வாங்கிய சுடிதாரின் அளவுகளில் ஏதேனும் மாற்றம் தேவைப்பட்டால் அதை உடனடியாக மாற்றித்தரும் ஆல்ட்ரேஷன் தையல்காரர்களும் அங்கு உள்ளனர். கல்லூரி மாணவிகளும் வேலைக்குச் செல்லும் இளம் பெண்களும் பெரும்பாலும் தங்கள் தோழிகளுடன் அங்குதான் ‘விண்டோ ஷாப்பிங்’ செய்கின்றனர். அதிக செலவின்றி, நிறைய நேரம் சுற்றி, அரட்டையடித்தபடியே பேரம் பேசி, கைநிறையைச் சாமான்களை வாங்கிச் செல்வது அவர்களின் வாடிக்கையாக உள்ளது. ஊக்குகள், ஹேர் பேண்டுகள் அலங்கார தலை மாட்டிகள் நகப்பூச்சுகள் போன்றவைதான் அவர்களால் பெரிதும் வாங்கப்படுகின்றன. அங்கு இருக்கும் இந்திரா ஸ்டோர்ஸ் இந்தப் அலங்காரப் பொருட்களுக்கு மிகவும் பெயர் போனது.

இன்று அந்தத் தெருவினுள் ஜாக்கிரதையாக நாம் செல்ல வேண்டியது அவசியம், அந்தத் தெருவினுள் நடந்து செல்லும்போது சட்டென்று நின்றுவிடக் கூடாது. மீறி நின்றால், பின்னால் வரும் நபரால் நாம் கீழே தள்ளப்படக்கூடும். அங்குள்ள கடைகளில் தொங்கும் வண்ணச் சேலையோ துப்பட்டாவோ நம் கவனத்தை கவர்ந்து இழுத்தால், இடம் வலம் திரும்பிப் பார்த்து, பின் அங்குச் செல்வது உடம்புக்கு நல்லது.

அந்தத் தெருவினுள் நடக்கும்போது, கடைகளுக்கு வெளியே காத்துக்கொண்டிருக்கும் சிறு பையன்களின் கண்களைப் பார்க்காமல் கடந்து செல்வது உசிதம். இல்லையென்றால், ‘அக்கா இங்க வாங்க, அண்ணா இங்க வாங்க, சுடிதாரா? சாரியா?’ என்ற வார்த்தைகள், நீங்கள் வீடு திரும்பிய பின்னும், பல நாட்கள் உங்கள் காதுகளில் ரீங்காரமிட்டுக் கொண்டு இருக்கும்.

ஜாஸ்மின் வாசனைத் திரவியம், முப்பது ரூபாய்க்கு செயின், கம்மல் செட், பத்து ரூபாய்க்கு கூலிங் கிளாஸ், பெல்ட், ரிவால்விங் பக்கிள்ஸ் என இங்குப் பல வகைப்பட்ட பொருட்கள் மலிவு விலையில் கிடைக்கின்றன. எந்திரன் திரைப்படம் வெளியான சமயம், இந்தத் தெரு வேறொரு விஷயத்துக்காக மிகவும் புகழ்பெற்று விளங்கியது. ஆம், எந்திரன் படத்தில் ஐஸ்வர்யா ராய் கையில் போட்டிருந்த மெஹந்தி டிசைன், அந்தத் தெருவில்தான் முதன் முதலாகப் பெண்களுக்குப் போட்டுவிடப்பட்டது.

கோவையில் வசிக்கும் இன்றைய தலைமுறையினருக்கு அந்த மெஹந்தி விஷயம் தெரியும். அந்தத் தெருவின் ஓரங்களில் இருக்கும் சிறு கடைகளும் அங்கு விற்கப்படும் பொருட்களும் தெரியும். ஆனால், முன்பு அங்கிருந்த உப்புத் தண்ணீர் கிணறோ அதனால்தான் அந்தத் தெருவுக்கு உப்புக்கிணறு தெரு என்று பெயர் வந்த விஷயமோ தெரிந்திருக்க வாய்ப்பு குறைவு.

படங்கள்: எம்.செந்தில்குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x