Last Updated : 03 Mar, 2018 12:59 PM

 

Published : 03 Mar 2018 12:59 PM
Last Updated : 03 Mar 2018 12:59 PM

தங்கம், ரியல் எஸ்டேட்: எது சரியான முதலீடு?

ந்தியர்களின் தங்க மோகம் எப்போதும் குறைவதில்லை. இந்தியாவின் பாரம்பரிய வரலாற்றில் தங்க நகைகள் என்பது உயர்ந்த பொருளாதார நிலையின் அடையாளமாக நம்பப்படுகிறது. அத்துடன், ஒரு காலத்தில் தங்கத்தில் முதலீடுசெய்வதுதான் விவேகமானது என்றும் கருதப்பட்டது. ஆனால், சமீபத்தில் தங்கத்தின் விலையில் ஏற்பட்ட ஏற்ற இறக்கங்கள், அதில் முதலீடுசெய்வது சரியான தேர்வாக இருக்குமா என்று முதலீட்டாளர்களை யோசிக்கவைத்திருக்கிறது.

தங்கத்துக்கு மாற்றான முதலீடாக இந்தியர்கள் தற்போது ரியல் எஸ்டேட்டை நினைக்கிறார்கள். தங்கம், ரியல் எஸ்டேட் இரண்டில் எதில் முதலீடுசெய்வது சரியானதாக இருக்கும்? எந்தக் காரணிகளை வைத்து அவற்றை நிர்ணயிக்கலாம்?

எப்படித் தீர்மானிப்பது?

எதில் முதலீடு செய்வதென்பதை உங்களிடம் இருக்கும் முதலீட்டை வைத்தே தீர்மானிக்க வேண்டும். நிலத்தில் முதலீடு செய்வதற்கு பெரியளவிலான நிதி தேவைப்படும். வீடு வாங்கத் தேவைப்படும் மொத்த முதலீட்டில் 20 சதவீதத்தை முன்பணத்துக்காகச் (down payment) சேமிப்பிலிருந்து பயன்படுத்திக்கொள்வதும், மீதிப் பணத்துக்குக் கடன்வாங்குவதும் பொதுவான வழக்கமாக இருக்கிறது. அதுவே, தங்கத்தில் முதலீடு செய்வதற்குக் குறைந்த பணமே தேவைப்படும்.

லாபம்

லாபத்தைப் பொறுத்தவரை, வீட்டை வாடகைக்குவிடும்போது நிலையான வருமானமாகத் திரும்பக் கிடைக்கும். தங்கத்தில் முதலீடு செய்யும்போது, லாபம் சந்தையின் ஏற்ற இறக்கங்களைப் பொறுத்தே அமையும். நீண்டகால லாபத்தை எதிர்பார்ப்பவர்கள் ரியல் எஸ்டேட்டில் முதலீடுசெய்வது பொருத்தமானதாக இருக்கும். குறுகியகால முதலீட்டை எதிர்பார்ப்பவர்களுக்குத் தங்கத்தில் முதலீடுசெய்வது சிறந்த தேர்வாக இருக்கும்.

முதலீட்டின் தன்மை

அதிக அளவில் முதலீடு செய்யும் முதலீட்டாளர்கள் ஏற்ற இறக்கங்களைக் கணக்கில் எடுத்துகொள்ள வேண்டும். இந்த அம்சத்தில் ரியல் எஸ்டேட் முதலீடு நிலையானதாகக் கருதப்படுகிறது.

பணமாக்குதல்

முதலீடு செய்யும்போது தேவையான நேரத்தில் பணமாக்குவது எளிமையான முறையில் இருக்குமா என்பதைக் கணக்கில் எடுத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில், ரியல் எஸ்டேட்டில் அதற்கான சாத்தியம் குறைவு. தங்கத்தையும் பங்குச்சந்தை வர்த்தக நிதியையும் பணமாக்குவது எளிமையானது.

பொருளாதாரத்தின் மீதான தாக்கம்

தங்கம் மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படுகிறது. அதிகமான பணமதிப்பைக் கொண்ட நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்யும்போது இந்திய ரூபாயின் மதிப்பு குறைகிறது. அது அடிப்படைப் பொருட்கள், எரிபொருட்களின் விலையேற்றத்துக்கு வழிவகுக்கிறது. இதனால் அதிக அளவில் தங்கத்தில் முதலீடுசெய்வது இந்தியப் பொருளாதாரத்துக்கு எதிராகப் பார்க்கப்படுகிறது. ரியல் எஸ்டேட்டில் முதலீடு செய்யும்போது இதற்கு நேர் எதிராகப் பொருளாதாரம் வளர்ச்சியடைகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x