Last Updated : 03 Mar, 2018 12:58 PM

 

Published : 03 Mar 2018 12:58 PM
Last Updated : 03 Mar 2018 12:58 PM

தெருவாசகம்: தாமரைப் பூ நகரம்

பா

ண்டிய ராஜ்ஜியத்தின் தலைநகராக விளங்கிய மதுரை மாநகரின் பல வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வுகளுக்கு மௌன சாட்சியாக வறண்டோடும் வைகை நதி இன்றும் தன் உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு நகரின் நடுவே தவழ்கிறது. இருக்காதா பின்னே. சினம் கொண்ட கண்ணகியின் கோபத்தில் கொழுந்துவிட்டு எரிந்த நெருப்பையே அணைத்த நதியல்லவா அது.

சங்கம் வளர்த்த மதுரையின் சிறப்புகளைப் பட்டியலிட்டால் பக்கங்கள் போதாது. மீனாட்சி அம்மன் கோயில், திருமலை நாயக்கர் அரண்மனை, மதுரை மல்லி, ஆயிரம் கால் மண்டபம், அழகர் மலை, கோனார் மெஸ், ஜிகர் தண்டா என்று அதன் அடையாளங்களாக நீளும் பட்டியலின் நீளம் மிக அதிகம். அவற்றுள் ஒன்றுதான் அதன் நகரமைப்பு.

CHITHRAI தெற்குச் சித்திரை வீதி,right

மதுரை நகரின் வடிவமைப்பும் கட்டமைப்பும் தெருக்களும் கட்டிடங்களும் பண்டைய காலத் தமிழ் நாகரிகத்தின் பெருமைக்குச் சான்றுகளாக இன்றும் திகழ்கின்றன. மதுரை நகரம், வழிபாட்டு மையமாக விளங்கும் மீனாட்சி அம்மன் கோயிலைச் சுற்றித்தான் உருவாக்கப்பட்டுள்ளது. இந்த நகரின் அமைப்பு தனித்துவம் வாய்ந்த ஒன்று. ஏனென்றால், மற்ற நகரங்களைப் போன்று இதன் தெருக்கள் நேர்க்கோட்டில் அமையாமல், சதுர வடிவில் அடுக்கடுக்காகச் சுற்றும்வண்ணம் வடிவமைக்கப்பட்டிருக்கும். இந்த அமைப்பானது மதுரையை ஆண்ட நாயக்கர்களுள் முதல் நாயக்கரான விசுவநாத நாயக்கரால் (கி. பி. 1159–64) உருவாக்கப்பட்டது.

நகரின் மையமும் அதைச் சூழ்ந்துள்ள தெருக்களும் விரிந்த தாமரை மலரின் தோற்றத்தை ஒத்தவை எனப் பழந்தமிழ் இலக்கியங்கள் கூறுகின்றன. நகரத்தின் மையம், பூமத்திய ரேகைகளின் அச்சுடன் பொருந்தும் வண்ணம் அமைந்துள்ளது, வானிலிருந்து பார்க்கும்போது கோயிலின் நான்கு வாசல்களின் வழியாக அந்த ரேகைகள் நீள்வதுபோல் தோன்றுகின்றன.

கழுகுப் பார்வையில் இந்த அமைப்பு தன் அழகின் மூலம் நம் மனதைக் கொள்ளையடித்துச் செல்லும். புதிதாக அங்குச் செல்லும் ஒரு சுற்றுலாப் பயணி அந்தத் தெருக்களில் ஏதோ ஒன்றில் நடக்க ஆரம்பித்தால் சுமார் ஒரு மணி நேரத்துக்குள் தொடங்கிய இடத்தையே அவர் வந்தடைவார்.

கோயில் பிரகாரத்திலும் அதைச் சுற்றி அமைந்துள்ள தெருக்களிலும் திருவிழாக்கள் இன்றும் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்படுகின்றன. அதில் நடக்கும் தேரோட்டத்தைக் காண கூடும் கூட்டம் மதுரையின் பாரம்பரியம் உயிர்ப்புடன் இருப்பதைக் காட்டுகிறது.

அங்குள்ள வீதிகளுக்கு ஆடி, சித்திரை, ஆவணி மூல, மாசி என்று தமிழ் மாதங்களே பெயர்களாகச் சூட்டப்பட்டுள்ளன. கோயிலைச் சுற்றி முதல் அடுக்கிலிருக்கும் வீதி ‘ஆடி வீதி’ என அழைக்கப்படுகிறது. அது முற்றிலும் ஆன்மிக வழிபாட்டுக்குரிய வீதி. முன் காலத்தில் இந்தத் தெருவுக்குள் உயர்சாதியினர் மட்டுமே செல்ல முடியும். அந்த ஆடி வீதியைச் சுற்றி சித்திரை வீதி, மாசி வீதி, ஆவணி மூல வீதி போன்ற வீதிகள் அடுத்தடுத்து உள்ளன.

சில தெருக்களின் பெயர்கள் அங்கு வசிக்கும் மக்களின் தொழில்சார்ந்து அமைந்துள்ளது. உதாரணத்துக்கு, வளையல் வியாபாரிகள் இருப்பது ‘வளையல்காரர் தெரு’, தங்கநகை வியாபாரிகள் இருப்பது ‘நகைக்கடைத் தெரு’, பாத்திர வியாபாரிகள் இருப்பது ‘பாத்திரக்காரத் தெரு’, வெற்றிலை வியாபாரிகள் இருப்பது ‘வெத்தலக்கடை தெரு’.

நாடு சுதந்திரம் அடைவதற்கு முன்பு பாரதியார் மதுரையில் ஆசிரியராக வேலை பார்த்துள்ளார். அப்போது அவர் நடந்து சென்ற தெரு ‘பாரதியார் உலா வீதி’ என்று அழைக்கப்படுகிறது. இந்தத் தெரு மதுரையில் உள்ள வீதிகளில் முக்கியமான ஒன்றாக இன்றும் கருதப்படுவது ‘பாரதியார் உலா வீதி’.

பழங்காலத்தில் உயர்சாதியினர் கோயிலுக்கு அருகில் உள்ள தெருக்களிலும், ஏழை மற்றும் பிற்பட்ட படிநிலை மக்கள் தொலைவில் உள்ள தெருக்களிலும் குடியிருந்தனர். 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் வருகை, தொழில் துறையில் ஏற்பட்ட வளர்ச்சி, நகரமயமாதல் ஆகியவற்றின் காரணமாக மதுரை நகரின் அமைப்பில் மாறுதல்கள் ஏற்பட்டன. அந்த மாறுதல்கள் காரணமாகக் கோட்டைச் சுவர் அகற்றப்பட்டுப் புதிய தெருக்கள் உருவானதால் தற்போது அனைத்துப் படிநிலை மக்களும் ஒன்றிணைந்து வாழ்கின்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x