Last Updated : 06 Jan, 2018 11:02 AM

 

Published : 06 Jan 2018 11:02 AM
Last Updated : 06 Jan 2018 11:02 AM

சொத்து ஆவணங்களில் புழங்கும் சொற்கள்

வீ

டு, மனை, நிலம் வாங்கும் பலரும் அதை முறையாகப் பதிவுசெய்தால்தான் அதற்குச் சட்டப் பாதுகாப்பு கிடைக்கும். இதற்காகக் குறிப்பிட்ட சொத்துக்கென்று ஆவணங்களைத் தயார் செய்தால் அதைப் பதிவுசெய்ய ஏற்றுக் கொள்ளப்படும். அதற்குச் சட்ட அங்கீகாரம் கிடைக்கும். இந்த நடைமுறை இன்று நேற்றல்ல, மன்னராட்சி காலத்திலிருந்தே இருந்து வருகிறது.

இந்த ஆவணங்களைச் சொத்துப் பரிமாற்றத்தில் ஈடுபடும் இரண்டு தரப்பினரும் முழுமையாகப் படித்துப் பார்த்துத் தேவையான திருத்தங்களைச் செய்துகொண்டு பத்திரப்பதிவு மூலம் ஆவணப்படுத்த வேண்டும். ஆனால், சொத்து தொடர்பான இந்த ஆவணங்களை எடுத்த எடுப்பிலேயே எல்லோராலும் படித்துப் புரிந்துகொள்ள முடியாது. சொத்து ஆலோசகர்களின் வழிகாட்டுதல் இல்லாமல் ஆவணங்களைத் தயாரிக்கவும் முடியாது. ஏனென்றால், இத்தகைய ஆவணங்களில் குறிப்பிடும் வார்த்தைகள் இன்னமும் பலருக்குப் புரியாத புதிர்களாக இருப்பதுதான்.

அப்படிச் சொத்து ஆவணங்களில் பயன்படுத்தும் புரியாத சில வார்த்தைகளும் அவற்றுக்கான விளக்கமும்.

பட்டா

ஒரு நிலம் யார் பெயரில் உள்ளது என்பதைக் குறிக்கும் வகையில் வருவாய்த் துறை அளிக்கும் ஆவணம்.

சிட்டா

குறிப்பிட்ட நிலத்தின் பரப்பளவு அதன் பயன்பாடு, யாருடைய கட்டுப்பாட்டில் உள்ளது என்பது தொடர்பான விவரங்கள் அடங்கிய வருவாய்த் துறை ஆவணம்.

அடங்கல்

நிலத்தின் பரப்பு, பயன்பாடு, கிராமத்தின் மொத்த நிலத்தில் இது எந்தப் பகுதயில் உள்ளது என்ற விவரங்கள் அடங்கிய வருவாய்த் துறை ஆவணம்.

புல எண்

நில அளவை எண்.

கிராம தானம்

கிராமத்தின் பொதுப் பயன்பாட்டுக்காக நிலத்தை ஒதுக்குவது.

தேவதானம்

கோவில் பயன்பாட்டுக்காகக் குறிப்பிட்ட நிலத்தைத் தானமாக அளித்தல்.

கிராம நத்தம்

ஒவ்வொரு கிராமத்திலும் குடியிருப்புப் பயன்பாட்டுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிலம்.

இனாம்தார்

பொதுத் நோக்கத்துக்காகத் தனது நிலத்தை இலவசமாக அளித்தவரை குறிக்கப் பயன்படுத்தும் சொல்.

விஸ்தீரணம்

நிலத்தின் பரப்பளவு. எல்லைகளைக் குறிப்பது.

ஷரத்து

பிரிவு.

இலாகா

துறை.

கிரயம்

நிலத்தை ஒருவருக்கு விற்பனை செய்வதை ஆவணப்படுத்துதல்.

இறங்குரிமை

வாரிசுரிமை.

வில்லங்கச் சான்று

ஒரு நிலத்தை ஒருவருக்கு விற்பனைசெய்த அதன் உரிமையாளர், அதனை மறைத்துவிட்டு, அதே நிலத்தை வேறு ஒருவருக்கு விற்பனை செய்வது மோசடி. இந்த விவரத்தை அறிந்துகொள்ள உதவும் பதிவுத்துறை ஆவணம்.

குத்தகை

ஒரு நிலத்தைப் பயன்படுத்தும் உரிமையைக் குறிப்பிட்ட காலத்துக்குச் சில நிபந்தனைகளுடன் அளிப்பது அல்லது பெறுவது.

தாய்ப் பத்திரம்

ஒரு குறிப்பிட்ட நிலம், இப்போதைய உரிமையாளருக்கு முன்னர் யாரிடம் இருந்தது என்பதை அறிய உதவும் முந்தைய பரிவர்த்தனை ஆவணங்கள்.

ஏற்றது ஆற்றுதல்

குறித்த வகை பொறுப்பை நிறைவேற்றுவதற்கு உறுதி அளித்தல்.

அனுபவ பாத்தியதை

நிலத்தைப் பயன்படுத்திக் கொள்ளும் உரிமை.

சுவாதீனம் ஒப்படைப்பு

நிலத்தின் மீதான உரிமையை ஒப்படைத்தல்.

ஜமாபந்தி

வருவாய்த் தீர்வாயம்.

நன்செய்நிலம்

அதிகப் பாசன வசதி கொண்டநிலம்.

புன்செய்நிலம்

பாசனத் தேவைக்கு மழையை நம்பியுள்ள நிலம்.

சமீப ஆண்டுகளில் பத்திரப்பதிவு ஆவணங்களில் இந்த வார்த்தைகளின் பயன்பாடு வெகுவாகக் குறைந்துவருகிறது. ஆனால், தாய்ப் பத்திரங்களில் இந்த வார்த்தைகள் இடம்பெறும்போது குழம்ப வேண்டியதில்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x