Last Updated : 01 Aug, 2015 11:59 AM

 

Published : 01 Aug 2015 11:59 AM
Last Updated : 01 Aug 2015 11:59 AM

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் வாங்கிவிட்டீர்களா?

அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கப்போகிறீர்களா? வீட்டின் விலையில் தொடங்கி வில்லங்கம், பெயர் மாற்றம் உட்பட எல்லாச் சந்தேகங்களையும் கட்டுநரிடம் (பில்டர்) பேசித் தீர்த்துக் கொண்டீர்களா? கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றிப் பேசினீர்களா? அந்தச் சான்றிதழைக் கொடுப்பதாகக் கூறினாரா கட்டுநர்? ஒரு கட்டுநர் இந்தச் சான்றிதழை வாங்கி வைத்திருந்தால் கட்டுமானத்தில் விதிமீறல்கள் இல்லை என்று உறுதியாக நம்பலாம்.

கட்டுமான நிறைவுச் சான்றிதழ் என்றால் என்ன?

ஒரு கட்டுமானம் நடைபெறும்போது உள்ளாட்சி அமைப்பினர், சி.எம்.டி.ஏ., டி.டீ.சி.பி. அதிகாரிகள் கட்டுமானத்தை ஆய்வு செய்வார்கள். கட்டுமானம் நடைபெறும்போது மட்டுமல்லாமல், கட்டுமானம் முழுமையாக முடிந்த பிறகும் ஆய்வு செய்வார்கள். அதிகாரிகள் தாமாக வந்து ஆய்வு செய்ய மாட்டார்கள். கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) கேட்டு விண்ணப்பிக்கும்போது வந்து ஆய்வு செய்வார்கள். கட்டுமானத்துக்கான திட்டத்தை வைத்துகொண்டு திட்ட அனுமதியின் படி வீடு அல்லது அடுக்குமாடி வீடு கட்டப்பட்டிருக்கிறதா என்றும் அங்குலம் அங்குலமாக ஆராய்வார்கள். திட்ட அனுமதியின் படியும், விதிமீறல் இல்லாமலும் கட்டப்பட்டிருந்தால் அளிக்கும் தடையில்லாச் சான்றிதழ்தான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) .

கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டின் அவசியம் என்ன?

புதிய வீட்டுக்குத் தேவையான பிற வசதிகளைச் செய்ய இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட் மிகவும் முக்கியம். அதாவது மின் இணைப்பு, குடிநீர் இணைப்பு, பாதாளச் சாக்கடை இணைப்பு கொடுக்க வேண்டும் என்றால் இந்தக் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை சம்பந்தப்பட்ட துறையில் சமர்பிப்பது முக்கியம். எனவே வீடுகளை விற்கும் கட்டுநர் இந்த கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டை வீடு வாங்குபவர்களுக்குக் கொடுக்க வேண்டும். கட்டுநர் தரவில்லை என்றாலோ, தருவதாக இழுத்தடித்துக் கொண்டிருந்தாலோ வீடு கட்டுமானத்தில் விதிமீறல்கள் இருக்கலாம் என்று அர்த்தம் கொள்ளலாம். எந்த விதிமுறை மீறலும் இல்லை என்றால் கட்டுநர் உடனே இந்தச் சான்றிதழைக் கொடுத்துவிடுவார்.

எப்படிப் பெறுவது இந்தச் சான்றிதழை?

ஒருவேளை புதிதாக ஒரு அடுக்குமாடிக் குடியிருப்பில் எல்லோரும் வீட்டில் குடியேறிய பிறகும் கம்ப்ளீஷன் சர்டிபிகேட்டைக் கட்டுநர் தரவில்லை என்றால், வீடுகளில் குடியிருப்பவர்கள் தங்களுக்குள் ஒரு அமைப்பைத் தொடங்கி உள்ளாட்சி அமைப்பிடம் சான்றிதழ் கேட்டு விண்ணப்பிக்கலாம். சாதாரணக் கட்டுமானமாக இருந்தால் அதற்கு இந்தச் சான்றிதழ் தேவையில்லை. புதிய இணைப்புகள் கொடுக்க வேண்டிய கட்டுமானம், அடுக்குமாடிக் கட்டுமானங்கள், உயர்ரக அடுக்குமாடிக் குடியிருப்புகள், தொழிலகக் கட்டுமானங்கள், 15.25 மீட்டர் அளவுக்கு மேல் உள்ள கட்டுமானங்களுக்கு சி.எம்.டி.ஏ. அல்லது டிடீசிபி-யிலிருந்து கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பெற வேண்டும்.

சான்றிதழுக்கு என்ன விதிகள்?

உதாரணமாக எந்த ஒரு திட்டக் கட்டுமானமாக இருந்தாலும் அதன் எஃப்.எஸ்.ஐ. விகித அளவுகளின்படிதான் கட்டவேண்டும் என்பது விதி. அதாவது பிரதான சாலை 100 அடியாக இருந்தால் 20 அடி அல்லது 25 அடி வீட்டைச் சுற்றிச் செட்பே விட வேண்டும்.

60 அடியாக இருந்தால் 15 அடி செட்பேக்கும், 30 அடியாக இருந்தால் 10 அடி செட்பேக்கும் விட்டு வீடு கட்ட வேண்டும். தமிழகத்தில் எஃப்.எஸ்.ஐ. 1.5 விகிதத்தில்தான் கட்ட வேண்டும் என்பது வரையறை செய்யப்பட்டுள்ளது. கட்டிடத்தின் உயரம் மேலே செல்லச் செல்ல மாடிப்படி, போர்டிகோ போன்ற பகுதிகளைச் சில கட்டுநர்கள் விதிகளை மீறிக் கட்டிடத்திற்கு வெளியே கட்டிவிடுவார்கள்.

இதையெல்லாம் ஆய்வு செய்யும்போது அதிகாரிகள் அளந்து பார்ப்பார்கள். விதி மீறல் இல்லாமல் கட்டுமானத்தைக் கட்டினால் சான்றிதழ் பெறுவதில் எந்தச் சிக்கலும் இருக்க்காது. விதி மீறப்பட்டிருக்கும் நிலையில் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate)தர அதிகாரிகள் மறுத்துவிடுவார்கள். இதற்காக மட்டுமல்ல, அடுக்குமாடிக் குடியிருப்பில் வீடு வாங்கும்போது, அதன் உறுதித்தன்மைக்குச் சில விஷயங்கள் முக்கியம். கட்டிடப் பணி நடக்கும்போது, ஒவ்வொரு கட்டித்திலும், பிளான்படி கட்டப்படுகிறதா, கட்டிடம் உறுதித்தன்மையோடு இருக்கிறதா என சி.எம்.டி.ஏ அல்லது டி.டி.சி.பி அதிகாரிகள் பரிசோதித்துச் சான்றளிப்பார்கள். எனவேதான் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) முக்கியத்துவம் பெறுகிறது.

அதேசமயம் பெரிய குடியிருப்புகளுக்கு வெறும் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) மட்டுமே போதாது. அஸ்திவாரம் தொடங்கியதிலிருந்து ஒவ்வொரு நிலையிலும் சான்றிதழ் வாங்குகிறார்களா எனப் பார்ப்பதும் நல்லது. வீடு என்பது மிகப் பெரிய கனவு; கஷ்டப்பட்டு உழைத்து, இ.எம்.ஐ. கட்டி வாங்கும் வீட்டில் விதிமீறலிருந்து; அதன் காரணமாகச் சிக்கல்கள் எழுந்தால் புது வீடு தந்த சந்தோஷம் துன்பத்தையும் தந்துவிடும். எனவே வீடு வாங்குபவர்கள் கட்டுமான நிறைவுச் சான்றிதழ் (Completion Certificate) பற்றி கேள்வி எழுப்பி முறையாக வாங்கி வைத்துக்கொள்வதே நல்லது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x