Last Updated : 01 Aug, 2015 12:29 PM

 

Published : 01 Aug 2015 12:29 PM
Last Updated : 01 Aug 2015 12:29 PM

உங்கள் மனை எங்கே இருக்கிறது?

முன்பெல்லாம் ஒருவர் மனை வாங்குகிறார் என்றால் அது வீடு கட்டுவதற்காகத்தான் இருக்கும். வீடு கட்டுவதும் அவ்வளவு லேசுப்பட்ட காரியம் அல்ல அந்தக் காலத்தில். பல வருடங்களாகக் கலந்து ஆலோசித்து சேமிப்புடன் கடனையும் வாங்கி ஒரு வழியாகத் தங்களுக்கென்று ஒரு கூடு கட்டுவார்கள். ஆனால் மனை வாங்குவது என்பது அப்படி இல்லை. ஒரு முதலீடாக ஆகிவிட்டது.

ஏனெனில் பத்து வருடங்களுக்கு முன் வாங்கிய வீட்டு மனையின் மதிப்பு இன்று நினைத்துப் பார்க்க முடியாத அளவில் உயர்ந்திருக்கிறது. அதாவது ஒரு லட்சம் ரூபாய்க்கு வாங்கிய நிலம் இன்றைக்குப் பல மடங்ககு உயர்ந்து ஏழு, எட்டு லட்சம் ரூபாய்க்கு விலை போகிறது. அதனால் மக்கள் அனைவரும் வீட்டு மனைகளில் முதலீடு செய்ய ஆர்வம் காட்டி வருகின்றனர். ஆனால் சமீபத்தில் தேக்கம் ஏற்பட்டுள்ளது.

மாதாந்திரச் சேமிப்புத் திட்டங்கள்

ஆனாலும் முழுமையாக ஓய்ந்துவிடவில்லை. நடுத்தர வர்க்கத்தினரும் வீட்டு மனைகள் வாங்கும் பொருட்டு இப்போது மாதாந்திரச் சேமிப்புத் திட்டங்களும் இப்போது நடைமுறையில் உள்ளன. தேனீக்களைப் போல மக்கள் சிறுகச் சிறுக சேமித்துத் தங்கள் எதிர்காலத்திற்கான முதலீடாக மனைகளை வாங்கிப் போடுகிறார்கள். அவ்வாறு மாதந்திரச் சேமிப்புத் திட்டங்களில் பெறப்படும் நிலங்கள் பெரும்பாலும் ஊருக்கு வெளியேதான் இருக்கும்.

தமிழ்நாட்டின் மிகச் சிறிய நகரங்களில் இருந்து மாநகரங்கள் வரை இந்தச் சேமிப்புத் திட்டம் மக்களிடையே வெகு பிரபலம். இம்மாதிரி மனைகளை வாங்குவது ஒருவிதத்தில் சரியானதுதான். ஓய்வு காலப் பொருளாதாரத் தேவைகளுக்கு இவை ஏற்புடையவையாக இருக்கும். வாரிசுகளுக்குப் பயன் தரும். ஆனால் இம்மாதிரி மனைகளை வாங்குவதில் நாம் அதிகக் கவனத்துடன் இருக்க வேண்டும்.

வீட்டு மனைப் பராமரிப்பு

வீட்டு மனை வாங்கிவிட்டோம் என நிறைவாக இருந்துவிடக் கூடாது. அதன் பிறகுதான் வேலை இருக்கிறது. பத்திரமும் முடிந்துவிட்டதே இனி என்ன வேலை இருக்கிறது எனக் கேட்கிறீர்களா? இருக்கிறது. நீங்கள் வாங்கிய உங்கள் மனையைப் பராமரிக்க வேண்டும்.

அதன் முன்பு வாங்கிய மனைக்கு பட்டா கோரிப் பெற வேண்டும். இப்போது பத்திரப் பதிவு மட்டும் போதாது. பட்டாவும் நிலத்திற்கு மிக அவசியம் எனத் தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது. பட்டா இல்லாதபட்சத்தில் வட்டாட்சியர் அலுவலகம் சென்று மனையைப் பதிவுசெய்த ஆவணங்களைக் காட்டி பட்டா கோரி விண்ணப்பித்துப் பெற வேண்டும்.

இறந்து போன தந்தை அல்லது தாய் பெயரில் மனை இருந்தால், பெயர் மாற்றம் செய்து நம் பெயருக்கு பட்டா மாற்றிக்கொள்ள வேண்டும். இதற்குத் தந்தை அல்லது தாயின் இறப்புச் சான்றிதழும் வாரிசு சான்றிதழும் தேவைப்படும். நாம் வாங்கிய மனை ஊருக்கு வெளியில் இருக்கும்பட்சத்தில் அந்த மனையைப் பராமரிப்பதில் அதிகக் கவனம் எடுத்துக்கொள்ள வேண்டும். மனையைச் சுற்றி கல் நட்டு, சுற்று வேலிகள் அமைத்துக் கொள்வது நல்லது.

அதுபோல ஒய்வு நேரம் கிடைக்கும்போது அடிக்கடி மனையைச் சென்று பார்க்க வேண்டும். சிலர் வாங்கிப் போட்டுவிட்டு ஆண்டுக் கணக்காக அந்தப் பக்கமே போகாமல் இருந்துவிடுவார்கள். கல்லும் நடவில்லை என்றால் உங்கள் மனையைப் பிரித்தறிவதே சிரமம். அதனால் குறைந்தது 4 மாதத்திற்கு ஒரு முறையாவது மனையைச் சென்று பார்த்துக் கொள்ளுங்கள். வேலி அமைத்து மனையின் உரிமையாளாரான உங்கள் பெயரையும் எழுதி வைத்துவிடுங்கள். இதனால் பிறர் ஆக்கிரமிப்பில் இருந்து மனையைப் பாதுகாக்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x