Last Updated : 28 Sep, 2018 11:39 AM

 

Published : 28 Sep 2018 11:39 AM
Last Updated : 28 Sep 2018 11:39 AM

சறுக்கலில் ஒரு சாதனை

தென் கொரியாவின் நேம்வோன் நகரில் அண்மையில் 18-வது ஆசிய ரோலர் ஸ்கேட்டிங் சாம்பியன்ஷிப் போட்டி நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்ற சென்னையைச் சேர்ந்த சுஜனிதா, குயார்டட் பிரிவில் வெண்கலப் பதக்கத்தையும் ஜோடி நடனப் பிரிவில் நான்காவது இடத்தையும் பெற்று சாதனை படைத்திருக்கிறார். இந்தியாவிலிருந்து முதன் முறையாக சர்வதேச அளவில் பரிந்துரைக்கப்பட்ட குழு என்னும் பெருமையும் இவர் அங்கம் வகிக்கும் குழுவுக்குக் கிடைத்திருக்கிறது.

பள்ளித் தோழி ஒருவரால் சுஜனிதாவுக்கு 2009-ல் விளையாட்டாக அறிமுகமானது ஸ்கேட்டிங். அப்போது அவருக்கு 9 வயதுதான். மாவட்ட அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் வெள்ளிப் பதக்கம் வென்றது, அவரது விளையாட்டு ஆர்வத்துக்குத் தூண்டுகோலாக அமைந்தது. தொடர்ந்து தேசிய அளவில் நடந்த ஸ்கேட்டிங் போட்டியில் தனிநபர் நடனம், ஜோடி நடனம் ஆகிய இரு பிரிவுகளிலும் வெற்றியைச் சுவைத்தார் சுஜனிதா.

அடுத்து இந்தியாவின் சார்பாக தாய்லாந்தில் நடந்த ஆசிய ஐஸ் ஸ்கேட்டிங் போட்டியில் பங்கெடுத்தார். 2013-ல் சீன தைபேயில் நடந்த உலக ரோலர் ஸ்கேட்டிங் போட்டியில் இந்தியாவின் சார்பாக பங்கேற்றார். தேசிய அளவில் நான்கு பதக்கங்களை வென்றிருக்கும் இவர், கடந்த ஆண்டு சீனாவில் நடந்த உலக ரோலர் விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் சார்பாகப் பங்கேற்றார். கடந்த 10 ஆண்டுகளில் மாவட்ட, தேசிய, சர்வதேச அளவில் 60-க்கும் மேற்பட்ட பதக்கங்களை வென்றிருக்கிறார் சுஜனிதா.

சுஜனிதாவுக்குக் கடந்த எட்டு ஆண்டுகளாக ஸ்கேட்டிங் பயிற்சியாளராக இருப்பவர் பவன் குமார் அகுலா. நடனப் பயிற்சி அளிப்பவர் ஃபாசில். இத்தாலியின் புகழ்பெற்ற ஆண்ட்ரூ கண்டோல்ஃபியிடமும் சுஜனிதா நடன நுணுக்கங்களைக் கற்றுத் தேர்ந்திருக்கிறார். இவருடன் ஜோடியாக நடன ஸ்கேட்டிங் செய்பவர் பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் ஆதித்யா.

சவாலே சமாளி

சுஜனிதாவின் காலில் சக்கரம் எப்படிச் சுற்றிக்கொண்டே இருக்கிறதோ, அதுபோலவே வாயிலிருந்து திரைப் பாடல்கள் முதல் லேடி காகா பாடும் பாப்வரை சரளமாக ஒலிக்கிறது. இந்த விளையாட்டில் சுஜனிதா எப்படி சாதித்தார்?

"அர்ஜுனா விருது பெற்ற ரோலர் ஸ்கேட்டிங் வீரர் அனூப் குமார்தான் என்னுடைய வழிகாட்டி. இந்த விளை யாட்டை வெளியி லிருந்து பார்ப்பதற்கு மிகவும் ரம்மியமாக இருக்கும். அழகாக இருக்கும். ஆனால், இந்த அழகுக்குப் பின்னால் நிறைய சவால்கள் உண்டு.

அத்தகைய சவால்களைக் கடந்துதான் நானும் வந்திருக்கிறேன். கடந்த ஆண்டில் பயிற்சியின் போது, கால்முட்டியில் பலமாக அடிபட்டது. போட்டி நெருங்கிவிட்ட நிலையில் அந்த வலியுடனேயே போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றேன். இந்தியாவில் ஸ்கேட்டிங் போன்ற விளையாட்டு களுக்கு ஏற்ற பயிற்சித் தளங்கள் அதிகம் வேண்டும். குறிப்பாக, உள்விளையாட்டுப் பயிற்சித் தளங்கள் தேவை.

இதுபோன்ற வசதிகளை அரசு ஏற்படுத்திக் கொடுத்தால் இன்னும்  பலர் இந்த விளையாட்டில் திறமையை வெளிப்படுத்துவார்கள். ஸ்கேட்டிங்கில் தேசிய அளவிலும் சர்வதேச அளவிலும் வெற்றி பெறும் வீரர்களுக்கு அரசு ஊக்கம் அளித்தால் இன்னும் நிறையப் போட்டிகளில் சாதிப்பதற்கான உத்வேகத்தை அது அளிக்கும்" என்கிறார் சுஜனிதா.வெண்கலப் பதக்கத்தோடு சுஜனிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x