Last Updated : 24 Aug, 2018 09:22 AM

 

Published : 24 Aug 2018 09:22 AM
Last Updated : 24 Aug 2018 09:22 AM

ஆசிய விளையாட்டுப் போட்டி 2018: பதினாறு வயதில் பரவசத் தங்கம்!

பதினெட்டாவது ஆசிய விளையாட்டுப் போட்டிகள் இந்தோனேசியத் தலைநகர் ஜகர்தா மற்றும் பலெம்பாங்கில் அமர்க்களமாகத் தொடங்கி நடைபெற்று வருகின்றன. வழக்கம்போல் பதக்கப் பட்டியலில் சீனா முன்னிலை பெற்றுவருகிறது. இந்த முறை இந்தியா பதக்கப் பட்டியலில் எந்த  இடத்தைப் பிடிக்கும், எத்தனை தங்கப் பதக்கங்களைப் பெறும் என்பதுதான்  கேள்விகளாக எதிரொலித்துக்கொண்டிருக்கின்றன.

இந்தியா ஆதிக்கம் செலுத்தக்கூடிய மல்யுத்தம், துப்பாக்கிச் சுடுதல் போன்ற போட்டிகளிலிருந்து பதக்கங்களை வெல்லத் தொடங்கியிருக்கிறது. புதன்கிழமைவரை நான்கு தங்கப் பதக்கங்களை இந்தியா தன் கணக்கில் சேர்த்திருக்கிறது. தங்கப் பதக்கங்களை வென்ற நால்வருக்குமே இதுதான் ஆசிய போட்டியில் கிடைத்த முதல் தங்கம்.

பஜ்ரங் புனியா (மல்யுத்தம்)

ஆசியப் போட்டியில் முதல் தங்கம் பெற்றுக்கொடுத்துப் பதக்க வேட்டையைத் தொடங்கி வைத்தவர் பஜ்ரங் புனியா. ஆண்களுக்கான 65 கிலோ எடை ஃப்ரீஸ்டைல் பிரிவில் 3 இந்திய வீரர்கள் தொடக்கத்திலேயே வெளியேற, பஜ்ரங் புனியா இறுதிப் போட்டிக்கு முன்னேறினார். இறுதிப் போட்டியில் ஜப்பானைச் சேர்ந்த தைசி டகாடனியை  எதிர்கொண்டார். இந்தப் போட்டி பரபரப்பாக இருந்தது.

முதலில் பஜ்ரங் புனியா 6 - 4 என முன்னிலை பெற்றார். அதன்பின் 6 - 6 என இருவரும் சமநிலை பெற்றனர். இதனால் போட்டியில் பதற்றம் தொற்றிக்கொண்டது. பின்னர் 8 - 6  என முன்னிலை பெற்ற பஜ்ரங், இறுதியில் 11 - 8  என்ற புள்ளிகள் கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தைத் தனதாக்கினார்.

இந்த வெற்றியின் மூலம் பஜ்ரங் புனியா முன்னணி வீரர்களின் பட்டியலில் இணைந்திருக்கிறார். இந்த ஆண்டு மட்டும் 65 கிலோ ஃப்ரீஸ்டைல் பிரிவில் இரண்டு முறை தங்கப் பதக்கம் வென்று தன்னை சாம்பியன் என்று நிரூபித்திருக்கிறார். முதலாவது தங்கம் இந்த ஆண்டு ஆஸ்திரேலியாவின் கோல்ட் கோஸ்ட் நகரில் நடைபெற்ற காமன்வெல்த் போட்டி மூலம் கிடைத்தது. இப்போது ஜகர்தாவில் நடைபெறும் ஆசியப் போட்டியில் இரண்டாவது தங்கம் கிடைத்திருக்கிறது.

ஹரியாணாவில் சிறிய கிராமத்தில் பிறந்த பஜ்ரங் புனியா, ஏழு வயதிலேயே மல்யுத்தம் ஆடத் தொடங்கிவிட்டார். அவரது குடும்பமே பஜ்ரங்கின் வெற்றிக்காக உழைத்தது. அதற்கான பலன் இப்போது கிடைத்ததில் ஒட்டுமொத்தக் குடும்பமும் குதூகலத்தில் உள்ளது. கடந்த சில ஆண்டுகளாகவே மல்யுத்தத்தில் முன்னேறிவரும் பஜ்ரங், ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லும் வாய்ப்புக்காகக் காத்திருக்கிறார்.  

சவுரப் சவுத்ரி (துப்பாக்கிச் சுடுதல்)

ஒவ்வொரு பெரிய சர்வதேச விளையாட்டுத் தொடரிலும் துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் புதிதாக இந்திய வீரர், வீராங்கனைகள் சாதிப்பது வாடிக்கை. அந்த வகையில் இந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் 16 வயதான சவுரப் சவுத்ரி சாதித்திருக்கிறார்.

 10 மீட்டர் ஏர் பிஸ்டல் பிரிவில் தங்கம் வென்று அசத்தியிருக்கிறார் சவுரப். தொடக்கத்தில் இந்தப் போட்டி பரபரப்பில்லாமல்தான் தொடங்கியது. ஆனால், போகப் போக ஜப்பான் வீரர் டோமோயுகி மட்சுடா சவுரப் சவுத்ரிக்குக் கடும் போட்டியைத் தந்தார். இக்கட்டான தருணத்தில் நேர்த்தியாக விளையாடிய சவுரப், 240.7 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பிடித்து இந்தியாவுக்குத்  தங்கப் பதக்கத்தை உறுதிசெய்தார். இந்தத் தொடரில் குறைந்த வயதில் தங்கப் பதக்கம் வென்ற வீரர் இவரே. 

ஆசிய விளையாட்டுப் போட்டி துப்பாக்கிச் சுடுதல் பிரிவில் இந்தியா இதுவரை பெற்றதில் ஐந்தாவது தங்கப் பதக்கம் இது.

உத்தரப்பிரதேசத்தின் மீரட்டில் உள்ள கலீனா கிராமத்தைச் சேர்ந்தவர் சவுரப். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த இவர்,  அப்பாவுக்குத் துணையாகத் தான் உண்டு தன் வேலை உண்டு என்றுதான் இருந்திருக்கிறார். சிறு வயதில் பிளாஸ்டிக் துப்பாக்கியைப் பிடித்து விளையாடியதோடு சரி, இவருக்கும் துப்பாக்கிக்குமான நெருக்கம். கடந்த 2015-ம் ஆண்டில்தான் சவுரப்புக்குத் துப்பாக்கிச் சுடுதல் போட்டி அறிமுகமானது.

அந்த விளையாட்டு மீது ஆர்வம் கூடியதால், துப்பாக்கிச் சுடும் பயிற்சியில் சேர்ந்து முறையாகக் கற்கத் தொடங்கினார். அடுத்தடுத்துப் போட்டிகளில் பங்கேற்க ஆரம்பித்த சவுரப் பதக்கங்களைக் குவிக்கத் தொடங்கினார்.  ஜெர்மனியில் நடைபெற்ற ஜூனியர் உலகக் கோப்பையிலும் சவுரப் தங்கம் பதக்கம் வென்றுள்ளார்.

இதனால், ஆசியக் கோப்பையில் சாதிப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. அந்த எதிர்பார்ப்பை ஏமாற்றாமல் சீனியர் பிரிவில் பங்கேற்று தங்கப் பதக்கம் வென்று  நிரூபித்திருக்கிறார்.

வினேஷ் போகத் (மல்யுத்தம்)

பஜ்ரங் புனியாபோலவே மல்யுத்தம் மகளிர் 50 கிலோ ஃப்ரீ ஸ்டைல் பிரிவில், வினேஷ் போகத் தங்கப்பதக்கம் வென்று அசத்தினார். ஆசிய விளையாட்டுப் போட்டிகளில் இந்தியாவின் சார்பில் தங்கம் வென்ற முதல் மல்யுத்த வீராங்கனை இவரே. இதேபோல துப்பாக்கிச் சுடுதல் 50 மீ ஏர் பிஸ்டல் பிரிவில் ரஹி செர்னோபேட் தங்கப் பதக்கம் வென்றார். தற்போது பதக்கப் பட்டியலில் 4 தங்கப் பதக்கங்களுடன் 6-வது இடத்தில் இருக்கிறது இந்தியா. செப்டம்பர் 2-ம் தேதிவரை ஆசியப் போட்டி நடக்க இருப்பதால், பதக்கப் பட்டியலில் இந்தியா முன்னேறும் என்று நிச்சயம் எதிர்பார்க்கலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x