Last Updated : 20 Jul, 2018 11:54 AM

 

Published : 20 Jul 2018 11:54 AM
Last Updated : 20 Jul 2018 11:54 AM

டென்னிஸ் போர்!

ஒரே ஓர் அரையிறுதிப் போட்டி. 90 கேம்கள். 6 மணி நேரம். 36 நிமிடங்கள். மிக நீண்ட நேரம் நடந்த இரண்டாவது போட்டி என்று விம்பிள்டன் வரலாற்றில் இடம்பெற்றிருக்கிறது, கெவின் ஆண்டர்சன் மற்றும் ஜான் இஸ்னர் ஆகியோருக்கு இடையிலான டென்னிஸ் போட்டி. அது போட்டிகூட அல்ல… போர்!

ஆடவர் ஒற்றையர் பிரிவில் நோவக் ஜகோவிச், மகளிர் ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பர் ஆகிய இருவரும் 2018-ம் ஆண்டின் விம்பிள்டன் பட்டத்தை வென்றிருக்கிறார்கள். அவர்கள் இருவரும் திறமையானவர்கள்தாம். பல மாத உழைப்புக்குப் பிறகு, அவர்களுக்கு இந்த வெற்றி கிடைத்திருக்கிறது. எனினும், வெற்றியாளர்கள் கடந்துவந்த பாதையைவிடவும், தோல்வியடைந்தவர்களின் பயணம் மிகவும் சுவாரசியமிக்கது.

குறிப்பாக, கெவின் ஆண்டர்சன், ஜான் இஸ்னர் ஆகியோரின் தோல்வி, டென்னிஸ் விளையாட்டில் பல காலமாக எழுப்பப்பட்டுவரும் வேண்டுகோளை, இந்த முறை மிகவும் அழுத்தமாக ஒலிக்கச் செய்திருக்கிறது. ஐந்தாவது செட் விளையாடும்போது, குறிப்பிட்ட பாயிண்டுக்குப் பிறகு ‘டை பிரேக்கர்’ வையுங்கள் என்பதுதான் அது!

அந்த ஐந்தாவது செட்!

டென்னிஸ் போட்டிகளில், ஆடவர்கள், ஐந்து செட்களும் மகளிர், மூன்று செட்களும் விளையாட வேண்டும். ஒவ்வொரு செட்டுக்கும் ஆறு பாயிண்டுகள். யார் முதலில் ஆறாவது பாயிண்டை எடுக்கிறாரோ, அவர் அந்த செட்டைக் கைப்பற்றியவர் ஆவார். இப்படி, ஐந்து செட்கள்வரை யார் முன்னணியில் இருக்கிறாரோ, அவரே வெற்றியாளராகக் கருதப்படுவார். அப்படி இல்லாமல், இரண்டு வீரர்களும் ஆளுக்கு இரண்டு செட்களைக் கைப்பற்றியிருக்கும் பட்சத்தில், ஐந்தாவது செட் ஆட்டம் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். காரணம், அந்த செட்டில், எந்த வீரர், எதிராளியைவிட இரண்டு பாயிண்டுகள் முந்தி இருக்கிறாரோ, அவரே வெற்றியாளர்.

எனவே, ஐந்தாவது செட்டில் ‘சேஸிங்’ அதிகமாக இருக்கும். ஆரம்பத்தில் அது சுவாரசியமாக இருந்தாலும், நேரம் ஆக ஆக அந்த விளையாட்டைப் பார்ப்பவர்களே ‘யப்பா… சீக்கிரம் கடைய மூடுங்கப்பா..!’ என்று சொல்லும் அளவுக்குச் சோர்ந்துவிடுவார்கள். பார்வையாளர்களுக்கே அவ்வளவு சோர்வு இருக்கும்பட்சத்தில், அந்த வீரர் களைப் பற்றிச் சொல்லத் தேவையே இல்லை. அதனால்தான் இந்தப் போட்டி ‘போர்’ என்று கருதப்படுகிறது.

வருமா ‘டை பிரேக்கர்?’

இப்படி விளையாடும் நேரம் நீண்டுகொண்டே சென்றால், அது இதர போட்டிகளைப் பாதிக்கும். ஆண்டர்சன் – இஸ்னர் இடையிலான போட்டி இங்கிலாந்து நேரப்படி, மதியம் 1.10-க்குத் தொடங்கி இரவு 7.50-க்கு முடிந்தது. இதனால் நோவக் ஜகோவிச் – ரஃபேல் நடால் இடையிலான இரண்டாவது அரையிறுதிப் போட்டி தொடங்குவது தாமதமானது.

அந்தப் போட்டி இரவு 8.10-க்குத் தொடங்கி 11 மணிக்கு இடையில் நிறுத்தப்பட்டது. காரணம், விம்பிள்டனைப் பொறுத்தவரையில், இரவு 11 மணிக்கு மேல் விளையாட்டு நீளக் கூடாது என்பது விதி. எனவே, ஜகோவிச் – நடால் இடையிலான போட்டி, அடுத்த நாள் விட்ட இடத்திலிருந்து மீண்டும் தொடங்கப்பட்டது.

இந்தக் காரணங்களால்தாம், ஐந்தாவது செட் விளையாடும்போது 12 பாயிண்டுகளுக்கு மேல் ‘டை பிரேக்கர்’ விதியைப் பின்பற்றுங்கள் என்று கேட்கிறார்கள் வீரர்கள். ஆனால், போட்டியை நடத்துபவர்கள் கேட்டபாடில்லை. தற்போது, அமெரிக்க ஓபன் போட்டியில் மட்டுமே ஐந்தாவது செட்டில், 6 பாயிண்டுகளுக்கு மேல் ‘டை பிரேக்கர்’ கடைப்பிடிக்கப்படும் வழக்கம் இருக்கிறது.

இரண்டு சுவாரசியங்கள்

6 மணி நேரம்வரை தொடர்ந்து விளையாட வேண்டும் என்றால், அதற்கு ஏற்ற ‘ஃபிட்னஸ்’ இருந்தால் மட்டுமே சாத்தியம். அது அந்த இருவரிடமும் நிறையவே இருந்ததால்தான் இந்த வரலாறு படைக்கப்பட்டிருக்கிறது.

இந்த வரலாற்றில் இரண்டு சுவாரசியங்கள் உண்டு. முதலாவது, 97 ஆண்டுகளுக்குப் பிறகு, விம்பிள்டன் இறுதிப் போட்டிவரை வந்த முதல் தென்னாப்பிரிக்க வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார் கெவின் ஆண்டர்சன். அவருக்கு முன்பே, ப்ரையன் நார்ட்டன் 1921-ல், விம்பிள்டனில் இறுதிப் போட்டிவரை வந்தார். ஆனால் அது ‘ஓபன் எரா’வுக்கு முந்தைய காலகட்டம்!

இரண்டாவது, இதுபோன்ற ‘முதல் மிக நீண்ட நேரப் போட்டி’யை, இதே விம்பிள்டனில் விளையாடிய வீரர் யார் தெரியுமா..? ஜான் இஸ்னரேதான்!

2010-ல் நிக்கோலஸ் மஹட் எனும் வீரருடன் மோதிய முதல் சுற்றுப் போட்டி, 11 மணி நேரம் நடைபெற்றது.  ‘விம்பிள்டனில் இரண்டாவது மிக நீண்ட நேரப் போட்டியிலும் இடம்பிடித்த வீரர்’ என்ற வரலாற்றைப் படைத்த பெருமை, இஸ்னருக்கு என்றும் உண்டு!

‘போட்டி முடிந்த பிறகுதான் வீரர்கள் விளையாடத் தொடங்குகிறார்கள்’ என்று டென்னிஸில் ஒரு தத்துவம் உண்டு. அந்தக் கடுமையான அரையிறுதிப் போட்டிக்குப் பிறகு, ஆண்டர்சன் சொன்ன வார்த்தைகள்தாம், அவரை நம் மனத்தில் உயர்த்தி வைக்கின்றன.

“ஜான் இஸ் சச் ஏ கிரேட் கை!”

அப்போது திரையில், அந்த ஆட்டத்தின் செட் கணக்கு ஒளிர்ந்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x