Last Updated : 20 Jul, 2018 11:51 AM

 

Published : 20 Jul 2018 11:51 AM
Last Updated : 20 Jul 2018 11:51 AM

‘நீல’ புரட்சி!

ஜூலை 14-ம் தேதியை, பிரான்ஸ் நாட்டில் ‘பாஸ்ட்டில் தினமா’கக் கொண்டாடுவது வழக்கம். பிரெஞ்சுப் புரட்சிக்கு வித்திட்ட ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம்’ எனும் முழக்கம் பிறந்த நாள். அதை ‘பிரெஞ்சு தேசிய தினம்’ என்றும் அழைக்கிறார்கள்.

இந்த ஆண்டு ஜூலை 14-ம் தேதி, பிரான்ஸ் தனது 229-வது தேசிய தினத்தைக் கொண்டாடியிருக்கிறது. அதற்கு அடுத்த நாள், அந்த நாட்டின் கால்பந்து வீரர்கள், பிரான்ஸுக்கு ‘ஃபிஃபா’ உலகக் கோப்பையைப் பரிசளித்திருக்கிறார்கள்.

தேசிய தினத்துக்கும் அந்தத் தேசத்தின் கால்பந்து அணி உலகக் கோப்பையை வெல்வதற்கும் என்ன சம்பந்தம் என்று கேட்கிறீர்களா? பிரெஞ்சுப் புரட்சியின் முழக்கம்தான் அந்தத் ‘தொடர்புக் கண்ணி’ என்கிறார்கள் விளையாட்டு விமர்சகர்கள்!

1998-ம் ஆண்டில்தான் பிரான்ஸ் முதன்முதலில் கால்பந்து உலகக் கோப்பையை வென்றது. அதற்கு முக்கியமாகச் சொல்லப்பட்ட காரணம்… அந்த அணியில் இருந்த பன்மைத்துவம்!

நீல நிற உடையணிந்த பிரான்ஸ் கால்பந்து வீரர்களை ‘லெ ப்ளூ’ என்று செல்லமாக அழைப்பது வழக்கம். அந்த நீல நிற உடையை பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த வெள்ளை நிறத்தினர் மட்டுமே அலங்கரிக்கவில்லை. ஆப்பிரிக்காவைச் சேர்ந்த கறுப்பர்களும், அரேபிய நாட்டைச் சேர்ந்த இஸ்லாமியர்களும் அலங்கரித்துள்ளனர். இதனால் அந்தக் கால்பந்து அணியை ‘பிளாக் – ப்ளாங்க் – பேர்’ (Black – Blanc – Beur) என்கிறார்கள் ரசிகர்கள்.

20 ஆண்டுகளுக்குப் பிறகு, அதே ‘பிளாக் – ப்ளாங்க் – பேர்’ கூட்டணி, கோப்பையை வென்றிருக்கிறது. கடந்த சில ஆண்டுகளாகத் தீவிரவாதத் தாக்குதலுக்கு உள்ளாகிவரும் பிரான்ஸ் நாட்டுக்கு, பன்மைத்துவத்தால் கிடைத்த இந்த வெற்றி… நல்ல ஆறுதல்!

பிரான்ஸ் – குரோஷியா இடையிலான இறுதிப் போட்டியைக் கொண்டாடும் வகையில், தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பிரெஞ்சு கல்வி நிலையங்கள் சிறப்பு ஒளிபரப்புக்கு ஏற்பாடு செய்திருந்தன.

சென்னையில் நுங்கம்பாக்கத்திலுள்ள ‘அல்லயன்ஸ் ஃபிரான்சேஸ் த மெத்ராஸ்’ நிறுவனத்தில், இளைஞர்கள் முதல் பெரியவர்கள்வரை பெரிய திரையில் இறுதிப் போட்டியைக் கண்டு மகிழ்ந்தனர். பிரான்ஸ் அணி போட்ட கோல்களின்போது எழுந்த விசில் சத்தத்தைவிடவும், குரோஷியா கோல் போட்டபோது கிடைத்த கைதட்டல்கள்தான் அதிகம். குரோஷியா அணியின் திறமைக்கு அதுவே சான்று.

போட்டியின் இடையிடையே, அந்த நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்ட கேக், ஜூஸ் உள்ளிட்ட ‘ஸ்நாக்ஸ்’ ஐட்டங்கள், போட்டியை ‘பார்ட்டி’யாக மாற்றின.

பிரான்ஸ் அணிக்கு மட்டுமல்ல… ரசிகர்களுக்கும் அது ‘கோ(ல்)லாகல’ நிகழ்வுதான்!

 படம்: ந.வினோத் குமார்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x