Last Updated : 29 Jun, 2018 11:22 AM

 

Published : 29 Jun 2018 11:22 AM
Last Updated : 29 Jun 2018 11:22 AM

எப்படி இருக்கிறது இன்ஸ்டாகிராம் டிவி?

ஒளிப்படப் பகிர்வு செயலியான இன்ஸ்டாகிராம், வீடியோவிலும் அடியெடுத்து வைத்திருக்கிறது. நீள் வீடியோக்களைப் பகிர்ந்து கொள்வதற்காகத் தனியே ‘ஐஜிடிவி’ செயலியை (http://tiny.cc/64y0uy)அறிமுகம் செய்துள்ளது. இணைய உலகில் வீடியோ சார்ந்த உள்ளடக்கத்துக்குத் தற்போது பிரகாசமான எதிர்காலம் இருப்பதாகச் சொல்லப்படும் நிலையில், இன்ஸ்டாகிராம் டிவி அறிமுகமாகியுள்ளது.

இன்ஸ்டாகிராமின் இந்தப் புதிய சேவை பற்றிப் பார்ப்பதற்கு முன் இரண்டு விஷயங்களைத் தெரிந்துகொள்ள வேண்டும். முதல் விஷயம், இன்ஸ்டாகிராமில் ஏற்கெனவே வீடியோக்களைப் பகிர்ந்துகொள்ளும் வசதி இருக்கிறதே, அப்படியிருக்க இதென்ன புதிய வசதி எனக் கேட்கலாம். இன்ஸ்டாகிராமில் இப்போதேகூட ஒளிப்படங்கள் தவிர வீடியோக்களையும் பகிரலாம்தான். ஆனால், ஒரு நிமிடம் வரையிலான வீடியோக்களை மட்டுமே பகிர முடியும்.

இப்போது வீடியோக்களுக்கு என்று இன்ஸ்டாகிராம் பிரத்யேகமாக அறிமுகம் செய்துள்ள ஐஜிடிவி, நீள் வீடியோக்களுக்கானது. ஆங்கிலத்தில் இதை ‘லாங்க்ஃபார்ம் வீடியோ’ என்கின்றனர். அதாவது 15 நொடி முதல் ஒரு மணி நேரம் வரையான வீடியோக்களை உருவாக்கி இந்தச் செயலியில் பகிரலாம். அத்துடன், இது முழுக்க முழுக்க வீடியோக்களுக்கானது.

இரண்டாவது விஷயம், இந்த அறிமுகம் யூடியூப்பின் போட்டி சேவை எனச் சொல்லப்படுகிறது. நிச்சயமாக, இது யூடியூப்புக்குப் போட்டிதான். ஆனால், யூடியூப் வேறு, ஐஜிடிவி வேறு. கூகுளுக்கு சொந்தமான யூடியூப், வீடியோ பகிர்வின் கோட்டையாக இருக்கிறது. விமியோ உள்ளிட்ட வீடியோ சேவைகள் போட்டியாக இருந்தாலும், இன்னமும் யூடியூப்தான் ராஜாவாக இருக்கிறது. எனவே, இப்போதுதான் அறிமுகமாகியிருக்கும் ஐஜிடிவியை, இத்துறை ஜாம்பவானான யூடியூப்புடன் ஒப்பிடுவது பொருத்தமாக இருக்காது. யூூடியூப்பில், உள்ளே நுழைந்ததுமே விதவிதமான தலைப்புகளில் சேனல்களைப் பார்க்கலாம். ஐஜிடிவி இதிலிருந்து முற்றிலும் மாறுபட்ட வடிவமைப்பைக் கொண்டுள்ளது. இது தரும் அனுபவம் வேறுவிதமானது.

ஐஜிடிவி செயலியை பிரத்யேக செயலி என்பதால் தனியே தரவிறக்கம் செய்து நிறுவ வேண்டும். ஆண்ட்ராய்டு மற்றும் ஐபோன்களுக்கான செயலியை நிறுவிக்கொள்ளலாம். இன்ஸ்டாகிராம் செயலியில் இருந்தேகூட ஐஜிடிவிக்கான இணைப்பைப் பயன்படுத்தலாம்.

உள்ளே நுழையும்போது, ஏற்கெனவே உள்ள இன்ஸ்டாகிராம் உறுப்பினர் கணக்கு மூலமே புதிய கணக்கையும் இயக்கிக்கொள்ளலாம். இதற்கான வழிமுறையும் எளிமையானது. செட்டிங் பகுதிக்குச்சென்று ‘புதிய சேனலை உருவாக்கவும்’ பகுதியை ‘கிளிக்’ செய்து, அதில் கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளைப் பின்பற்றினால், உங்களுக்கான சேனல் தயார். அதன் பிறகு, போனில் உள்ள வீடியோக்களை அல்லது புதிய வீடியோவை சேனலில் பதிவேற்றலாம். இந்தச் செயலிக்குள் வீடியோக்களைப் பார்ப்பது புதிய அனுபவமாக தான் இருக்கிறது.

முதல் கட்டமாக இடம்பெறும் வீடியோக்கள் ஒருவித இன்ஸ்டாகிராம் தன்மையுடன் இருக்கின்றன. பெரும்பாலும் பொழுதுபோக்கு மயமாக இருக்கிறது. இப்போதுதான் பிரபலங்கள் வரத் தொடங்கியிருக்கின்றனர். மேலும் உறுப்பினர்கள் இணைந்து, அவரவர் தங்கள் பாணியில் சேனல்களை உருவாக்கும்போதுதான் இன்ஸ்டாகிராம் வீடியோ செயலி எப்படி இருக்கிறது என்பதைத் தெளிவாக உணர முடியும்.

இதனிடையே இன்ஸ்டாகிராம் போட்டியை ஊகித்தோ என்னவோ, யூடியூப் தனது வாடிக்கையாளர்களுக்கான புதிய வசதிகளை அறிமுகம் செய்திருக்கிறது. ரசிகர்கள் தங்கள் அபிமான சேனல் படைப்பாளிகளை ஆதரிப்பதற்கான வசதி, சேனலில் மேலும் பரவலாக விளம்பர பொருட்களை இடம்பெறச்செய்யும் வசதி எதிர்வரும் வீடியோவுக்கான முன்னோட்ட வசதி ஆகியவை அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இதை இன்ஸ்டாகிராம்-யூடியூப் போட்டி என்பதைவிட இணையத்தில், அதிலும் குறிப்பாக ஸ்மார்ட்போனில் வீடியோ இன்னும் பெரிய விஷயமாக மாறிக்கொண்டிருக்கிறது என்பதுதான் கவனிக்க வேண்டிய செய்தி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x