Published : 22 Jun 2018 11:17 AM
Last Updated : 22 Jun 2018 11:17 AM

வீணையான கிடார்!

மி

யூசிக் அகாடமி அரங்கத்தில் ரசிகர்கள் நிறைந்திருந்தார்கள். கிடாருடன் மேடையில் அமர்ந்த சிறுவனுக்கு 14 வயதிருக்கும். அவருடன் சேர்ந்து இசைப்பதற்காக எம்பார் கண்ணன் (வயலின்), பாருபள்ளி ஃபால்கன் (மிருதங்கம்), கிரிதர் உடுபா (கடம்) ஆகியோர் தயாராக இருந்தனர். இன்றைக்குப் பிரபலமாக இருக்கும் பல கலைஞர்களுக்கு பக்கவாத்தியம் வாசிக்கும் கலைஞர்கள் இவர்கள். ஒரு சிறுவனுடன் இத்தனை பிரபலமான கலைஞர்கள் சேர்ந்து வாசிக்கிறார்கள் என்று தோன்றிய எண்ணம், அந்தச் சிறுவன் கிடாரை வாசிக்கத் தொடங்கிய நொடியில் மறைந்துவிட்டது. அந்தச் சிறுவன் கோகுல் ஷியாம் சுந்தர்.

ஸ்வர அருவி

மேற்கத்திய பாணியில் கிடாரை வாசிப்பதற்கும் கர்னாடக இசையில் வாய்ப்பாட்டுப் பயிற்சியும் பெற்றிருந்த கோகுல், கிடாரில் கர்னாடக இசையை வாசிப்பதற்குக் கற்றுக்கொண்டது கிடார் பிரசன்னாவிடம். 2015-ம் ஆண்டே தன்னுடைய குரு பிரசன்னாவுடன் சேர்ந்து மார்கழி இசை விழாவில் வாசித்திருக்கிறார் கோகுல். அதே ஆண்டில் ஷார்ஜா இசைத் திருவிழாவில் குருவுடன் சேர்ந்து கோகுல் வாசித்த ‘வாட்டர்ஃபால் ஸ்வராஸ்’ யூடியூபில் வைரல் வீடியோவானது. இதைப் பார்த்து வியந்த பிரிட்டிஷின் ஜாஸ் இசை விமர்சகர் ராப் கராட், அபுதாபியில் வெளியாகும் ‘தி நேஷனல்’ நாளிதழில் சிறப்புக் கட்டுரை எழுதிப் பாராட்டியிருக்கிறார்.

எவருக்கும் கிடைக்காத ஒரு பெருமை அன்றைய நிகழ்வில் கோகுலுக்குக் கிடைத்தது. பொதுவாக, சீடனின் முயற்சியைப் பற்றியும் இசையில் அவருக்கு இருக்கும் ஆழ்ந்த ஈடுபாட்டைப் பற்றியும் அவருக்குக் கற்றுத் தந்த குருதான் பாராட்டுவார்கள். ஆனால், கோகுலுக்கு அவருடைய குருவின் குருவான வயலின் மேதை கன்யாகுமாரியிடமிருந்தே பாராட்டுக் கிடைத்தது.

கிடாரில் கைவண்ணம்

கிடார் வாத்தியத்தில் வயலினை போன்றோ வீணையைப் போன்றோ கர்னாடக இசையை வாசிப்பது கடினம். ஆனால், அந்த நிகழ்ச்சியில் ஜி.என். பாலசுப்பிரமணியத்தின் வர்ணத்தையும், தியாகராஜர், முத்துசுவாமி தீட்சிதர், சியாமா சாஸ்திரி ஆகியோரின் கிருதிகளையும் கிடாரில் லாகவமாக வாசித்தார் கோகுல். ‘ஏறுமயில் ஏறி விளையாடும் முகம் ஒன்றே’ திருப்புகழ் பாடலையும் பாரதியாரின் ‘சின்னஞ்சிறு கிளியே’ பாடலையும் வீணையின் குழைவோடு கிடாரில் கோகுல் வாசித்தது சாமான்ய ரசிகர்களையும் ரசிக்கவைத்தது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x