Published : 01 Jun 2018 11:33 AM
Last Updated : 01 Jun 2018 11:33 AM

உயிர்க் காக்கும் உன்னதக் கண்டுபிடிப்பு!

 

றிவியலும் தகவல் தொழில்நுட்பமும் பிரம்மாண்டமாக வளர்ச்சியை எட்டியிருக்கும் இந்தக் காலத்திலும் ‘மனிதக் கழிவுகளை மனிதனே அகற்றும்’ அவல நிலையும் உள்ளது. ‘பாதாளச் சாக்கடையைச் சுத்தம்செய்யும்போது விஷவாயு தாக்கி துப்புரவு தொழிலாளர்கள் பலி’ என்று அடிக்கடி காணும் செய்தியையும் எளிதில் கடந்துவிடுகிறோம். இந்த இழிநிலையை மாற்றவும் மலக்குழி மரணங்களைத் தவிர்க்கவும் தொடர்ந்து சமூக செயற்பாட்டாளர்கள் குரல் கொடுத்துவருகின்றனர். இந்தச் சூழ்நிலையில் விஷவாயு கண்டறியும் கருவியைக் கண்டுபிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த கென்னித் ராஜ்.  

மின்னியல் பொறியியல் பட்டதாரியான இவருக்கு ரோபோட்டிக்ஸில் அதீத ஆர்வம். இதுகுறித்த நுணுக்கங்களை யூடியூப் மூலமே கற்றிருக்கிறார். தனது பொறியியல் மூளையையும் ரோபோட்டிக்ஸ் நுணுக்கங்களையும் கொண்டு புதிய கண்டுபிடிப்புகளில் ஈடுபடத் தொடங்கினார். அதன் விளைவே, விஷவாயுவை கண்டுபிடிக்கும் கருவி.

இந்தக் கருவியைக் கண்டுபிடித்த நோக்கம் என்ன என்று அவரிடம் கேட்டபோது, “எந்தக் கண்டுபிடிப்பும் சமூகத்தின் விளிம்புநிலை மக்களுக்குப் பயன்பட வேண்டும் என்று நினைப்பேன். அந்த வகையில் மலக் குழி மரணங்களை தடுப்பதற்காக விஷவாயு கண்டுபிடிக்கும் கருவியை உருவாக்கினேன்” என்கிறார் கென்னித் ராஜ்.

இந்தக் கருவி எப்படிச் செயல்படும்? “துப்புரவுத் தொழிலாளர்கள் பாதாளச் சாக்கடைக்குள் இறங்கி சுத்தம் செய்யும் முன்பாக, இக்கருவியை உள்ளே செலுத்தினால் உயிரைப் பறிக்கக்கூடிய விஷவாயுக்களான ஹைட்ரஜன் சல்பைடு, கார்பன் மோனாக்சைடு, மீத்தேன் போன்ற வாயுக்கள் அதிக அளவு இருந்தால், எச்சரிக்கை மணி எழுப்பி உஷார் செய்யும். இதனால், சாக்கடைக்குள் இறங்காமல் உயிரிழப்புகளைத் தவிர்க்கலாம்” என்கிறார் கென்னித் ராஜ்.

இக்கருவியியை உருவாக்க மூன்று மாத காலம் எடுத்துக்கொண்ட இவர், அவ்வப்போது தனக்கு கிடைத்த வருமானத்தைக் கொண்டே இதை வடிவமைத்திருக்கிறார். இக்கருவியை வடிவமைக்க 14,000 ரூபாய் செலவானதாக சொல்லும் கென்னித் ராஜ், இன்னும் சில நுணுக்கங்களைப் புகுத்தி இறுதி வடிவத்தை 1000 ரூபாய்க்கும் குறைவாக தயாரிக்க முடியும் என்கிறார்.

kennith கென்னித் ராஜ்

“இக்கருவியை அரசு கவனத்துக்கு கொண்டு சேர்ப்பதன் மூலம் மக்களிடையே பரவலாக்க முடியும். தொண்டு நிறுவனங்கள் மூலமும் மக்களிடையே இக்கருவி குறித்த விழிப்புணர்வை நிச்சயம் ஏற்படுத்த முடியும். இந்தத் தொழில்நுட்பத்தைத் துப்பரவு தொழிலாளர்களுக்குக் கற்றுத் தரவும் தயாராக இருக்கிறேன்” என்கிறார் கென்னித் ராஜ்.  

இது மட்டுமல்ல பெண்கள், குழந்தைகள், மீனவர்களுக்கு பயன்படக்கூடிய வகையில் இணைய வசதி இல்லாமல் இருப்பிடத்தைக் கண்டுபிடிக்க உதவும் ஜி.பி.எஸ். கருவியையும் கண்டுபிடித்திருக்கிறார் கென்னித் ராஜ். நடுத்தர குடும்பத்தைச் சேர்ந்த இவருக்கு போதுமான பொருளாதார உதவிக் கிடைத்தால் இன்னும் நிறைய கண்டுபிடிப்புகளை நிகழ்த்திக்காட்டுவார் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை!

- ஜி.எஸ். சுரேஷ்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x