Published : 04 May 2018 10:06 AM
Last Updated : 04 May 2018 10:06 AM

சாகசம்: மணற்கடலில் ஒரு திகில் பயணம்!

 

து

பாய் என்றவுடன் சட்டென்று நினைவுக்கு வருவது வானுயுர்ந்த கட்டிடங்களும் நிசப்தமான பாலைவனமும்தான். சித்த மருத்துவ கருத்தரங்குக்காக துபாய் சென்ற மருத்துவக் குழுவினருடன் பாலைவனத்தைத் தரிசிக்க முடிவு செய்தோம். பாலைவனப் பயணம் (Desert safari) மேற்கொள்ள நிறைய வாகன வசதிகள் அங்கு இருக்கின்றன. துபாயிலிருந்து ஒருமணி நேரப் பயணம். பாலைவனத்தை அடைந்தோம். பரந்துவிரிந்திருந்த பாலைவனத்தைப் பார்த்து மெய்மறந்தோம்.

மணற்கடல்

கண்களுக்கு மிகப் பெரிய கடலாகப் பாலைவனம் தெரிந்தது. தண்ணீருக்குப் பதிலாக மணல். மணற் கடலாகக் காட்சி அளித்த அரபு நாட்டுப் பாலைவனத்தின் அழகை விவரிக்க வார்த்தைகள் போதாது. நீர்க்கடலின் அக்கரையில், horizon மாயத் தோற்றம் உண்டாக்குவதைப் போல, மணற்கடலின் அக்கரையிலும் horizon, மாயையை உண்டாக்கியது; அக்கரை நோக்கி மணற் பாதையில் நடைப்பயணம் செல்லத் தூண்டியது. நீர்க்கடலில் அலைகள் உயிரோடு இருப்பதைப் போல, அந்தப் பாலைவனத்திலும் மணல் அலைகள் திடமாக இயற்கையால் வரையப்பட்டிருந்தன. புதுமையான திகில் அனுபவத்துக்காகக் காத்திருந்தோம். பாலைவனப் பயணத்துக்கே உரித்தான, அதிக அளவில் குதிரைசக்தி உடைய சொகுசு வாகனம், கூடவே ஐந்து வாகனங்கள் போட்டியாக அணிவகுத்தன.

அதிவேகப் பயணம்

‘டெசர்ட் சஃபாரி’ அதிவேகப் பயணமாக இருந்தது. மணல் தெறித்து, புழுதிப் படலம் உருவானது. வாகனத்தை மணல் சூழ்ந்தது. அருகிலிருந்த மற்ற வாகனங்கள் பார்வையில் படாத அளவுக்குப் பாலை மணல் கொதித்தெழுந்தது. இருப்பினும் வாகனம் விரைந்து முன்னேறியது. பாலைவனத்தில் ஒரு மேட்டுப் பகுதிக்கு வாகனம் மூச்சிரைக்காமல் ஏறியது. வாகனத்துக்கு முன்னே மிகப் பெரிய மணற்பள்ளம்.

வேறு வழியில் வாகனம் திரும்பும் என்ற எண்ணத்துக்கு மாறாக, அப்படியே பள்ளத்தில் நெட்டுக்குத்தாகச் சீறியது. அங்கிருந்த அழகான ஒற்றை மரத்தில் வாகனம் மோதிவிடும் என்று நினைத்து முடிப்பதற்குள், திசை திரும்பி, மணலைக் கிழித்துக்கொண்டு அடுத்த மேட்டுப் பகுதிக்கு வாகனம் ஏறத் தொடங்கியது.

திகில் திகில்

மேட்டிலும் இறக்கத்திலும் இரக்கம் காட்டாத வேகத்தில் வாகனம் பேரலையென நகர்ந்தது. கடல் அலைகளின் மேடு பள்ளங்களில் கப்பல் பயணிப்பதைப் போல, பாலை வனத்தின் மணல் அடுக்குகளில் பயணித்தது வாகனம், படுவேகமாக. துபாயிலேயே ‘ஸ்பீட் லிமிட்’ இல்லாத ஒரே பகுதி அந்தப் பாலைவனமாகத்தான் இருக்க முடியும். ஒரு வழியாக ஒளிப்படம் எடுக்க வாகனத்தை நிறுத்தியபோது, திகிலான அனுபவம் மணல் வடிவில் முட்டிப் பார்த்தது.

புதிய அனுபவம்

பாலைவனத்தின் நடுமையத்தில் சிறிது நேரம் இளைப்பாறினோம். அப்போது ஓரளவுக்கு இருட்டியிருந்தது. பாலைவன மணலில் சாய்ந்துகொண்டு வானத்தைப் பார்த்தபோது, மேலே வெள்ளி நிற நட்சத்திரங்கள் கண்சிமிட்டின. வாகனத்தில் முகப்பு விளக்கொளியில் பாலையைப் பார்த்தபோது மணல் துகள்கள், தங்க நிறத்தில் ஜொலித்தன.

அவ்வப்போது நீர்ச்சாரல்போல, மணற்சாரல் காற்றின் வலிமைக்கேற்ப தேகத்தைத் தீண்டியது. பாலை நிலம் நிறைய கற்பனையை ஓடவிட்டது. மணல் வீடு கட்ட வேண்டும் என்ற ஆசை அந்த மிகப் பெரிய மணல் பிரதேசத்தில் துளிர்விட்டது. ஆனால், அதற்கு முன்பாகவே அந்தப் பாலைவனத்தில் நிறைய மணற்வீடுகள், குன்றுகள் வடிவில் காணப்பட்டன.

பாரம்பரியப் பயணம்

அடுத்ததாக பாரம்பரிய உணவை ருசிப்பதற்காகவும் பாரம்பரிய நடனத்தை ரசிப்பதற்காகவும் இருபுறமும் பாலைவனம் சூழ்ந்த தார்ச்சாலையில் சறுக்கியது வாகனம். இருபது நிமிடப் பயணத்துக்குப் பிறகு, மணல் சூழ்ந்த வெட்டவெளியில் உருவாக்கப்பட்டிருந்த சிறு கிராமம் போன்ற இடத்தை அடைந்தோம்.

அங்கு அரேபிய இசை ஒலித்தது. வெவ்வேறு வகையான உணவை ருசித்தோம். நெருப்பு நடனம், விலங்கு நடனம் என பாரம்பரிய நடனங்கள் அரங்கேறின. பழக்கி வைக்கப்பட்ட ‘Falcon’ எனும் வல்லூறு இரைக்கொல்லிப் பறவையுடன் ஒளிப்படம் எடுப்பதற்காகக் கூட்டம் அலைமோதியது.

பின்னர் துபாயை நோக்கி வாகனம் புறப்பட்டது. பாலை மணல் பகுதி மெல்ல மறைந்தது. வித்தியாசமான பயண அனுபவத்தைக் கொடுத்த எங்கள் வாகனத்தின் ஓட்டுநர் பாகிஸ்தானைச் சேர்ந்தவர். அவருடன் கைகுலுக்கி, புதிய அனுபவம் தந்த அவருக்கு நன்றி தெரிவித்துவிட்டு விடைபெற்றோம்.

இந்த ஆறு மணி நேர பாலவனப் பயணத்துக்கு, இந்திய ரூபாய் மதிப்பில் 1800 முதல் 2000 வரை வசூலிக்கிறார்கள். பாலையும் இயற்கையின் அதிசயமே. அதில் சாகசப் பயணம் மேற்கொண்டது முற்றிலும் புதிய அனுபவம்

கட்டுரையாளர் தொடர்புக்கு: drvikramkumar86@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x