Last Updated : 06 Apr, 2018 12:17 PM

 

Published : 06 Apr 2018 12:17 PM
Last Updated : 06 Apr 2018 12:17 PM

படிப்போம் பகிர்வோம்: புலிப் பாய்ச்சல் கதை!

ளைஞர்கள் விரும்பி படிக்கும் புத்தகங்கள் என்று பட்டியலிட்டால், அதில் ‘ஒயிட் டைகர்’ புத்தகமும் வந்துவிடுகிறது. இந்தப் புத்தகம் இளைஞர்களுக்கு ஏன் பிடிக்கிறது?

இந்தப் புத்தகத்தை எழுதிய அரவிந்த் அதிகா 2008 வரை எழுத்து உலகுக்கு ஓர் அந்நியர். ஆனால், அவர் எழுதிய ‘ஒயிட் டைகர்’ புத்தகத்துக்குக் கிடைத்த மேன் புக்கர் பரிசு, எழுத்துலக ஜாம்பவான்களுக்கு இணையான இடத்தை அவருக்குக் கொடுத்தது. முதலாவது புத்தகத்திலேயே எழுத்தில் புலிபோல் பாயப் போவதைக் குறிக்கும்விதமாகத் தனது புத்தகத்துக்கு ‘ஒயிட் டைகர்’ எனும் பெயர் வைத்திருப்பாரோ என்னவோ!

இந்தப் புத்தகத்தின் கதைக் கருவில் எந்தப் புதுமையும் இல்லை. சொல்லப்போனால் அவர் பெரிதாக அதற்கு மெனக்கெட்டதுபோலவும் தெரியவில்லை. தமிழ், தெலுங்கு, இந்தி உள்பட உலகில் வெளிவந்த அனைத்து மொழித் திரைப்படங்களிலும் அடித்துத் துவைத்துக் காயப் போட்ட கதைதான் அது. பழி வாங்கும் கதையோ என்றோ யோசிக்க வேண்டாம். வறுமையில் வாடும் ஏழை குடும்பத்துச் சிறுவன், அந்த இறுக்கமான சூழலுக்கு தன் வாழ்வு இரையாகாமல் இருக்க விரும்புகிறான். அங்கிருந்து விடுபட்டுப் பறக்கும்போது, மூச்சுகூட விட முடியாத அளவு தன் கழுத்தை நெறிக்கும் சமூகத்தின் கொடிய கரங்களை வெட்டி எறிந்து, தனக்குக் கனவில்கூடச் சாத்தியமற்ற வாழ்வை வடிவமைத்துக்கொள்வதுதான் கதைச் சுருக்கம்.

ஆனால், இந்தக் கதை நிகழும் களத்தில் ரத்தமும் சதையுமாக கதாபாத்திரங்களை உலவ விட்டிருக்கிறார். கதையில் வரும் மாந்தர்களுடைய வாழ்வை தத்ரூபமாக உண்மைக்கு மிக அருகிலிருந்து அவர் விவரித்த விதம் ஒரு தேர்ந்த எழுத்தாளரையும் பொறாமை கொள்ளவைக்கும். இந்தத் தன்மையும் புத்தகத்தின் ஒவ்வொரு பக்கத்திலும் தொனிக்கும் மொழி ஆளுமையும்தான் மேன் புக்கர் பரிசை அவருக்குப் பெற்றுக் கொடுத்திருக்க வேண்டும்.

உலகமயமாக்கலுக்குப் பிறகு அமெரிக்கர்களைப்போல் நம் நாட்டில் வாழ்வதற்குப் பலர் ஆசைப்படுகிறார்கள். நகரங்கள் எல்லாம் மேல்நாட்டு நகரங்களைப் போல் உலகத் தரமாக மாறுவதற்கு மனிதாபிமானமோ புரிதலோ இன்றிக் கிராமங்களைக் காவு வாங்கும் நிலை இன்றும் தொடர்கிறது.

இந்தக் கதையின் நாயகன் பல்ராமைப் போல் அனைவரும் அதிர்ஷ்டசாலிகளாக இருப்பதில்லை. அவர்களில் பெரும்பாலும், ஆசைப்படுவதற்குக்கூட வழியற்று ஒரு தீராத ஏக்கத்துடன் இருளில் வாழும் நிலைதான் நம் நாட்டில் உள்ளது. ஒரு வேளை அவர்கள் அங்கிருந்து தப்பித்து, துணிந்து வெளியே வந்தாலும், அசோக் மாதிரியான முதலாளிகளின் வஞ்சகக் கெஞ்சலுக்கு (வற்புறுத்தலுக்கு) ஆளாகி, செய்யாத குற்றத்தை ஒப்புக்கொண்டு சிறையில் அடைபட்டு, தங்கள் வாழ்நாள் முழுவதையும் இருளால் நிரப்ப வேண்டிய சூழ்நிலை ஏற்படும்.

இந்தியா எப்படி நடுத்தர வர்க்கம் என்ற ஒன்றே இல்லாத, விசித்திரமான நாடாக உருமாறிவருகிறது என்பதை நம் விழிகளுள் விரியச் செய்வதன்மூலம், நம் மனதின் அடி ஆழத்தில் புதைந்திருக்கும் நம்முடைய வேர்களுக்கான ஏக்கத்தை உணரவைக்கிறார். படித்துப் பாருங்கள், அது உங்களுக்கும் புரியலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x