Published : 06 Apr 2018 12:16 PM
Last Updated : 06 Apr 2018 12:16 PM

‘வைரல்’ வீடியோ: என்னதான் இருக்கு?

ப்போதெல்லாம் தினசரிப் பத்திரிகைகளை வாசிக்கிறோமோ இல்லையோ யூடியூபில் வைரலாகும் வீடியோக்களைப் பார்க்க பலரும் தவறுவதேயில்லை. “அந்த சீன்ல கலக்கிடாங்கல மச்சி…”, “என்னமா டான்ஸ் ஆடுறாங்க அந்தப் பொண்ணுங்க” என்று வைரலான வீடியோவில் இடம்பெற்ற காட்சிகளைப் பற்றி நம்மைச் சுற்றிலும் இருப்பவர்கள் பேசிக்கொள்ளும்போது, இதுவரை அந்த வீடியோவைப் பார்க்காதிருப்பது தெய்வக் குற்றமாகிவிடுகிறது.

உடனடியாக அந்த வீடியோவைப் பார்த்துவிட்டுக் கையோடு இன்னும் பத்துப் பேரிடம் அது குறித்துப் பரப்பிவிடுவோம். இப்படியாக அந்தப் பதிவு மேலும் வைரலாக நம்மை அறியாமலேயே துணை போகிறோம். ஆனால், இதில் ஒன்றை யோசிக்க மறந்துவிடுகிறோம்.

அப்படி என்னதான் இருக்குது?

‘வொய் திஸ் கொலைவெறி’ பாடல் முதல், வெறுமனே 10 நொடிகளுக்கு புருவத்தைத் தூக்கிப் பார்த்துக் கண்ணடித்த பிரியா வாரியர் வரை குறிப்பிட்ட சில விஷயங்கள் எப்படி வைரலாகின்றன? இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தும் அளவுக்கு அவற்றில் என்ன இருக்கிறது? இது குறித்து தொடர்புடையவர்களிடம் கேட்டால், “எங்க வீடியோ வைரலாகும்னு கனவுலகூட எதிர்பார்க்கல” என்ற வழக்கமான பதிலைத்தான் சொல்கிறார்கள். அப்படியானால் ஏதோ மாய, மந்திரத்தில்தான் வைரலாவது நடக்கிறதா என்றால், இல்லை. இதில் சில சூட்சுமங்கள் கையாளப்படுகின்றன.

எதிர்பாராத திருப்பம்

‘What makes something go viral?’ என்ற வீடியோவை ‘டெட் டாக்ஸ்’ அலைவரிசை யூடியூபில் அண்மையில் வெளியிட்டது. இதில் தாங்கள் வெளியிடும் இணையச் செய்திகளை வைரலாக்கக் கையாளும் சில சூத்திரங்களை வெளிப்படுத்தி இருக்கிறார் அமெரிக்காவின் பிரபல இணையப் பத்திரிகையான ‘BuzzFeed’-ன் பதிப்பாசிரியர் டாவோ கூயன்.

ஃபேஸ்புக் நிறுவனத்தின் ‘Live stream experiment’ என்ற திட்டத்தோடு ஒப்பந்தம் செய்திருக்கிறது பஸ்ஃபீட் நிறுவனம். இதன் நிமித்தமாக, கடந்த ஆண்டு தங்களுடைய நிறுவன முதலாளியின் பிறந்த நாள் கொண்டாட்டத்தை நேரலையாக இணையத்தில் வெளியிட டாவோ முடிவெடுத்தார். ஆனால், இது குறித்து அவர் தன்னுடைய முதலாளிக்கு முன்கூட்டியே அறிவிக்கவில்லை. ஆச்சரியமூட்டும் பிறந்த நாள் பரிசை அளித்து அந்தத் தருணத்தை ஃபேஸ்புக்கில் நேரலையாக ஒளிபரப்ப தன் குழுவினருடன் திட்டமிட்டார்.

அதன்படி முதலாளியின் அலுவலக அறை முழுவதும் வைக்கோலைத் தூவி ஆடுகளை மேயவிட்டு, ஒரு குட்டி ஆட்டுப் பண்ணைபோல அதை மாற்றினார். தன் அறையில் நுழைந்ததும் முதலாளி அதிர்ச்சி அடையும் காணொலி நவீன அலுவலகங்கள் பற்றிய நகைச்சுவையாகப் பரபரப்பாகப் பரவும் என்று அவர் எதிர்பார்த்தார். ஆனால், எதிர்ப்பார்த்ததைவிடவும் 30 நிமிடங்களுக்கு மேல் நீண்ட அந்த நேரலையை 90 ஆயிரம் பேர் இடைவிடாது பார்த்துக்கொண்டே இருந்தனர்.

தோல்வியில் வெற்றி

அதன்பிறகு, “எதற்காக இந்தக் காணொலியை இத்தனை பேர் பார்த்தார்கள் என்பதைவிடவும் இதைப் பார்க்கும்போது பார்வையாளர்களின் மனநிலை எப்படி இருந்தது, அப்போது அவர்கள் என்ன யோசித்தார்கள், எப்படி உணர்ந்தார்கள் என்பதை என்னுடைய குழு ஆய்வுசெய்யத் தொடங்கியது” என்கிறார் டாவோ. காணொலி நேரலையானபோது அது குறித்துப் பதிவிடப்பட்ட 82 ஆயிரம் கருத்துகள் வாசிக்கப்பட்டன. அதைத் தொடர்ந்து பரிசோதனையாகச் சில காணொலிகளைப் பதிவேற்றி வெற்றிபெற்றார்கள். இதன் அடிப்படையில், ‘Cultural Cartography’ என்ற கருத்தாக்கத்தை வடிவமைத்தார்கள்.

அதன்படி உணவு குறித்த பதிவு, குறும்பாக ஏமாற்றி விளையாடும் பதிவு, அரசியல் நையாண்டிப் பதிவுகள் இப்படி எது மக்களுக்குப் பிடிக்கும் என்பதை ஆராயாமல், எந்தெந்த அம்சங்கள் மக்களின் மனதில் தாக்கம் ஏற்படுத்தக்கூடியவை என்று மக்களின் மனதை ஆராயும் வேலையைத் தொடங்கினார்கள்.

உதாரணத்துக்கு, ‘இங்குக் காட்டப்பட்டிருக்கும் காலணிகளில் உங்களுக்குரியதைத் தேர்ந்தெடுத்தால், உங்களுடைய சரியான வயதையும் உயரத்தையும் நாங்கள் கணித்துவிடுவோம்’ என்று பஸ்ஃபீட் ஒரு போஸ்ட் பதிவிட்டது. இதற்கு 1 கோடி பேர் பதிலளித்தனர். “இதில் அதிகப்படியாக 50 வயதுக்கு மேற்பட்ட பெண்கள்தான் பங்கேற்றனர். பெரும்பாலானோருக்கு தவறான பதிலைதான் எங்களால் அளிக்க முடிந்தது. ஆனாலும் இது வெற்றிகரமான விநாடி வினா என்று முடிவெடுத்தோம். ஏனென்றால் இதன்மூலம் ஏராளமானோரை எங்களால் பங்கேற்கச் செய்ய முடிந்தது. அதிலும் தவறான பதில்களைக் கண்டதும் ஒவ்வொருவரும் பதிவிட்ட கருத்துகளை வைத்து அவர்கள் மனதை ஆராய்ந்தோம். அடுத்தடுத்து எந்த விதமான பார்வையாளர்களுக்கு எத்தகைய தாக்கத்தை இது ஏற்படுத்துகிறது எனக் கண்காணிக்கிறோம்” என்கிறார் டாவோ.

நகைச்சுவை என்றால்கூட அதில் பலதரப்பட்ட ரசனைகள் இருக்கின்றன. சிலருக்கு மற்றவர்களைக் கேலிசெய்து சிரிப்பது பிடிக்கும், சிலருக்கு நகைச்சுவைத் துணுக்கைப் படித்துச் சிரிக்கப் பிடிக்கும், சிலருக்கோ யாரையும் புண்படுத்தாத நகைச்சுவைகள் பிடிக்கும். இப்படி ஒவ்வொருவரின் விருப்பத்தையும் நேரடியாக அல்லாமல் மறைமுகமாக நம் மனதைப் படித்துக்கொண்டே இருக்கிறார்கள் இந்த டிஜிட்டல் குலேபகாவலிகள்.

“அடடா! இது கேம்பிரிட்ஜ் அனலிடிகாபோல வேற விவகாரமான விஷயமாக இருக்கும்போலவே” என்று நீங்கள் யோசிப்பது சரிதான். இன்று டிஜிட்டல் ஊடகங்கள் நம்மைச் பரிசோதித்துக்கொண்டே இருக்கின்றன. நம் மனதில் நுழைவதற்கான வழிகளைக் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கின்றன.

இதில் உச்சகட்டம் என்னவென்றால், தங்களுடைய தொழில் ரகசியத்தை வெளியிட்டதால் பஸ்ஃபீட் நிறுவனப் பதிப்பாளரின் இந்த வீடியோவும் வைரலானது!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x