Last Updated : 06 Apr, 2018 12:06 PM

 

Published : 06 Apr 2018 12:06 PM
Last Updated : 06 Apr 2018 12:06 PM

எங்கே இருக்கு இந்தப் பெரும் பாலம்?

லகிலேயே மிக உயரமான ரயில்வே பாலம் எங்கே இருக்கிறது? வெளிநாடுகளில் எங்கேயாவது இருக்கும் என்று நினைக்காதீர்கள். இந்தியாவில் அப்படி ஒரு பாலம் அமைய இருக்கிறது. அது ஒரு ரயில் பாலம். மலைகளுக்கு இடையே ஆர்ப்பரித்து ஓடும் ஆற்றின் மேலே பிரம்மாண்டமான வளைவுகளுடன் உருவாகிவருகிறது இந்தப் பாலம். விரைவில் புகழ் பெற இருக்கும் இந்தப் பாலம் காஷ்மீரில் கட்டப்பட்டு வருகிறது.

இந்தப் பாலத்தின் பெயர் சீனாப் பாலம். காஷ்மீரில் கவ்ரி - பத்கல் பகுதிகளை இணைக்கும் வகையில் கட்டப்பட்டு வருகிறது. முழுவதும் மலைகள் சூழ்ந்த பகுதி என்பதால், தரை மட்டத்திலிருந்து 359 மீட்டர் உயரத்தில், 1,315 மீட்டர் நீளத்தில் இந்த ரயில்வே பாலம் கட்டப்படுகிறது.

அதுவும் இந்தப் பாலம் கட்டப்படும் பகுதி அடிக்கடி நிலநடுக்கத்தால் பாதிக்கப்படும் பகுதி. சில நேரத்தில் இங்கு மணிக்கு நூறு கிலோ மீட்டர் வேகத்தில்கூடக் காற்று பலமாக வீசும். எனவே, இயற்கைச் சீற்றங்களால் பாலம் பாதிக்கப்படாமல் இருக்க, அதிநவீனத் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்திப் பாலத்தை அமைத்துவருகிறார்கள்.

இரு மலைகளுக்கு இடையே 480 மீட்டர் அகலத்தில் இரும்பு வளைவுகளுடன் பாலம் உருவாக்கப்பட்டுவருகிறது. டெல்லியில் உள்ள குதூப்மினாரைவிட இந்தப் பாலம் 5 மடங்கு உயரம் அதிகம். உலகிலேயே உயரமான பாலமாகக் கருதப்படும் பிரான்ஸ் நாட்டின் மில்லவ் பாலத்தைவிட இது 17 மீட்டர் உயரம் அதிகம். அடுத்த ஆண்டு முதல் இந்த மெகா ரயில் பாலத்தில் ரயில்கள் ஓடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x