Last Updated : 13 Oct, 2017 10:42 AM

 

Published : 13 Oct 2017 10:42 AM
Last Updated : 13 Oct 2017 10:42 AM

ஒளிரும் கண்கள் 04: படங்களில் தங்கிவிட்ட ஈரம்

 

மு

ப்பது ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரியில் நான் படித்துக்கொண்டிருந்த காலகட்டம். கும்பகோணத்தில் அப்போது நான் பார்த்து மகிழ்ந்த இரண்டு குளங்கள் இன்றைக்கு இல்லை. அவை வறண்டுபோய் பெரிய குப்பைத் தொட்டிகளாகிவிட்டன.

நெய்வேலியிலிருந்து கும்பகோணத்துக்குப் பயணிக்கும்போது அணைக்கரையிலும் காவிரியிலும் கரைபுரண்டு நுரைதள்ளி ஓடிய தண்ணீரை இன்றைக்குக் கனவில்தான் பார்க்க முடிகிறது. வறண்ட அணைக்கரை ஆற்றில் கருவேல மரங்கள் வளர்ந்து ஆக்கிரமித்திருக்கின்றன. ஊரெங்கும் நெகிழிப் பைக் கழிவு நிரம்பி வழிகிறது.

நாம் வாழும் சுற்றுச்சூழல் சீர்கெட்டு வருகிறது. காடுகள் அழிக்கப்பட்டு, நிலத்தடி நீர்மட்டம் குறைந்து, வெப்பம் அதிகரித்து குளங்கள், ஆறுகள், நீர்நிலைகள் வற்றிப் போய்க்கொண்டிருக்கின்றன. வேளாண்மையை மெல்ல மெல்ல அழித்து விளை நிலங்கள் கான்கிரீட் காடுகளாக மாறிவருவதை நம் தலைமுறை குற்ற உணர்வின்றி பார்த்துவருகிறது. மற்றொருபுறம், மாநிலங்களுக்கிடையே தண்ணீர் பிரச்சினை தீர்ந்தபாடில்லை.

மானாவாரி நிலங்கள் மட்டுமல்லாமல், நஞ்சை நிலங்களில் வேளாண்மை செய்யவும் இன்றைக்கு மழை நீரே ஒரே நம்பிக்கையாக மாறிவிட்டது. கிராமங்கள், நகரங்களில் பெரும்பகுதி மக்கள் குடிநீருக்காக குடங்களுடன் குழாயடியிலும் லாரியின் வருகைக்காகவும் காத்துக்கிடக்கிறார்கள். வசதி வாய்ப்புள்ளவர்கள் குடிநீரை நெகிழிக் குப்பியில் காசு கொடுத்து வாங்கிப் பருகும் நிலைக்குத் தள்ளப்பட்டிருக்கிறார்கள்.

உலகம் முழுக்க நன்னீர் விகிதாச்சாரம் குறைந்துகொண்டேவருகிறது. மிச்ச சொச்சம் இருக்கும் தண்ணீரூம் நம் கண் முன்னாலேயே மாசுபட்டுக்கொண்டிருப்பதை தினசரி பார்த்துக்கொண்டிருக்கிறோம். அந்த வகையில் மூன்றாம் உலகப் போர் மூண்டால், அது தண்ணீருக்காகத்தான் இருக்கும் என ஆய்வாளர்கள் சொல்வது நிச்சயமான உண்மை என்றே தோன்றுகிறது. என் கேமரா கண்களில் சிக்கிய சில நன்னீர் நிலைகளும், அதனுடன் மனிதர்கள் கொண்டிருக்கும் உறவும் இங்கே காட்சிகளாக விரிகின்றன.

கட்டுரையாளர், ஓவியர் மற்றும் ஒளிப்படக் கலைஞர்
தொடர்புக்கு: selvan.natesan@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x