Published : 04 Dec 2015 01:21 PM
Last Updated : 04 Dec 2015 01:21 PM

இனாமுல் ஹசன் எனும் ‘கடவுளின் குழந்தை!

‘குதாயீ கித்மத்கார்'(கடவுளின் குழந்தைகள்)!

எல்லை காந்தி கான் அப்துல் கஃபார் கான் உருவாக்கிய இந்த இயக்கம் மீண்டும் உயிர் பெற்றிருக்கிறது. அகிம்சை மட்டுமே அமைதிக்கான ஆயுதம் என்பதுதான் எல்லை காந்தியின் தத்துவம். இந்த மந்திரத்தை உரக்கச் சொல்லியபடி இந்தியாவின் இருபது மாநிலங்களைச் சேர்ந்த மூவாயிரம் இளைஞர்கள் கைகோத்திருக்கிறார்கள். இனம், மொழி, மதம், சாதிகளைக் கடந்து இவர்களை இணைத்தவர் புதுச்சேரி இளைஞர் இனாமுல் ஹசன்.

‘சர்வதேச ஒற்றுமை' என்ற தலைப்பிலான ஆராய்ச்சியில் ஈடுபட்டிருக்கும் இனாமுல் ஹசன், காஷ்மீர், ஹரியானா, உத்தரப் பிரதேசம், பிஹார், பஞ்சாப், அசாம் உள்ளிட்ட மாநிலங்களில் மத, இனக் கலவரங்களுக்கு எதிரான களப்பணியில் தன்னை முன்னிலைப்படுத்திக் கொண்டவர். அகிம்சைக்கு மிஞ்சிய ஆயுதம் கிடையாது என்பதை இவரும் இவரது சகாக்களும் களத்திலேயே தங்கி இருந்து போதித்து வருகிறார்கள்.

காஷ்மீரில் மட்டுமே இவர்கள் ஐந்தாண்டு காலம் களப்பணியாற்றி யிருக்கிறார்கள்.

டெல்லியில் உள்ளது பிர்லா ஹவுஸ். 'காந்தி ஸ்மிருதி' என்ற பெயரியிலும் அழைக்கப்படும் இந்த இடத்தில்தான் தனது இறுதி 144 நாட்களைக் கழித்தார் மகாத்மா காந்தி. நான்கு வருடங்களுக்கு முன்பு இங்குதான், காந்தியின் பேத்தி தாரா காந்தி பட்டாச்சாரியாவை சாட்சியாக வைத்து குதாயீ கித்மத்காருக்கு மீண்டும் உயிர் கொடுத்திருக்கிறார்கள் இனாமுல் ஹசனும் அவரது நண்பர்களும்.

இப்போது இந்த இயக்கத்தில் துடிப்புள்ள மூவாயிரம் இளைஞர்கள் இருக்கிறார்கள். இவர்களில் நூறு பேர் எந்த நேரத்திலும் பொது நோக்கத்திற்காகக் களத்திற்கு வர தயாராய் இருப்பவர்கள். இவர்களில் பாதிக்கு மேல் முஸ்லிம் இளைஞர்கள்!

“மேற்கு உத்தரப் பிரதேசம், பஞ்சாப், ஹரியானா உள்ளிட்ட மாநிலங்களில் ஆண‌வக் கொலைகள் அளவுக்கதிமாக நடந்துகொண்டிருந்த நேரத்தில் நாங்கள் அங்கே தங்கிப் பணி செய்தோம். ‘பெண் குழந்தைகளைப் பாதுகாப்போம்' என்ற முழக்கத்தை முன்னெடுத்து நாங்கள் செய்த பிரச்சாரங்களுக்கும் களப்பணிக்கும் நல்ல பலன் கிடைத்தது. பஞ்சாப்பில் 35 கிராமப் பஞ்சாயத்துத் தலைவர்களை, ‘இனிமேல் ஆண‌வக் கொலைகள் என்ற பெயரில் பெண்களைக் கொல்ல‌ மாட்டோம்' என பஞ்சாயத்தில் தீர்மானம் போட வைத்தது எங்களது அகிம்சைப் பிரச்சாரம்.

அசாமில் கோக்ரஜார், தூப்ரி மாவட்டங்களில் போடோ பழங்குடிகளுக்கும் முஸ்லிம்களுக்கும் இனக் கலவரம் ஏற்பட்ட‌போது ஆறு மாதங்கள் அங்கே தங்கி அமைதிப் பிரச்சாரங்கள் மேற்கொண்டு இருதரப்பினரிடமும் விழிப்புணர்வை ஏற்படுத்தினோம். இதேபோல், உ.பி-யில் ஜாட்களுக்கும் முஸ்லிம்களுக்கும் இடையில் கலவரம் ஏற்பட்ட‌போது, நாங்கள் மேற்கொண்ட 'இதயங்களை இணைப்போம்' யாத்திரை மக்கள் மத்தியில் மனமாற்றத்தை ஏற்படுத்தியது.

தமிழகத்தில் கலவரங்கள் இல்லை என்றாலும் இங்கே மது ஒரு பெரிய அழிவு சக்தியாக இருக்கிறது. மக்களிடம் இது குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக கடந்த ஆண்டு காந்தி ஜெயந்தி நாளில் குமரியிலிருந்து சென்னை நோக்கி 'மது போதைக்கு எதிரான மக்கள் இயக்க யாத்திரை'யை நடத்தினோம். இந்த ஆண்டும் காந்தி ஜெயந்தியின்போது சேலத்தில் சசிபெருமாள் நினைவிடத்திலிருந்து மது ஒழிப்பு யாத்திரை தொடங்கி ஈரோடு, திருப்பூர் உள்ளிட்ட 7 மாவட்டங்களில் தொடர்ந்து கொண்டிருக்கிறது" என்கிறார் இனாமுல் ஹசன்.

சின்னச் சின்ன நிகழ்வுகள்கூட அதன் உண்மைத் தன்மையைச் சோதிக்காமல் சமூக வலைதளங்கள் மூலம் பெரிதாகப் பிரகடனப்படுத்தப்படுகின்றன. பெரும் பகுதியான மத, இனக் கலவரங்களுக்கு இப்போது இவைதான் முக்கியக் காரணியாக உள்ளன. வதந்திகள் மூலம் வன்முறைகள் பரவாமல் தடுப்பதற்காக சென்னை, பெங்களூரு, ஹைதராபாத், புனே ஆகிய நகரங்களில் கட்டணமில்லா தொலைபேசிச் சேவையை அண்மையில் தொடங்கியிருக்கிறது குதாயீ கித்மத்கார் அமைப்பு.

தங்கள் பகுதியில் நடந்ததாக அறியப்படும் ஒரு சம்பவம் குறித்த உண்மைத் தன்மையை அறிய விரும்புப‌வர்கள் இந்த எண்ணிற்குத் தொடர்பு கொண்டால் நிஜத்தைத் தெரிந்துகொள்ளலாம். வதந்திகளைத் தடுக்கவும் இந்த எண்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும்.

"குறிப்பிட்ட இந்த நான்கு நகரங்களைச் சேர்ந்த இளைஞர்கள் ஐ.எஸ்.ஐ.எஸ். உள்ளிட்ட தீவிரவாத அமைப்புகளால் மூளைச் சலவை செய்யப்படுகிறார்கள் என்று மத்திய உளவுத் துறை அண்மையில் அறிக்கை தந்திருப்பதால் இப்போதைக்கு இங்கு மட்டும் இந்தச் சேவையைத் தொடங்கி இருக்கிறோம்" என்கிறார் குதாயீ கித்மத்கார் அமைப்பின் தேசியச் செயலாளராக இருக்கும் இனாமுல் ஹசன்.

2012-ல் அமைதிப் பேச்சு வார்த்தைகள் தொடர்பாக பாகிஸ்தானிலிருந்து நல்லிணக்கக் குழு ஒன்று இந்தியா வந்தது. அந்தக் குழுவிடம் பேசுவதற்காக இந்திய அரசின் சார்பில் அதிகாரப்பூர்வமாக அனுமதிக்கப்பட்டவர்களில் ஹசன் முக்கியமானவர். இதேபோல், ஆப்கானிஸ்தானின் பெண் எம்.பி.க்கள் இந்தியாவைப் பற்றிய ஒரு புரிதல் பயணமாக இங்கு வந்தபோதும் அவர்களோடு அமர்ந்து பேசவும் ஹசன் இந்திய அரசால் அனுமதிக்கப்பட்டார்.

“வெறும் பிரச்சாரத்தை மட்டும் செய்துவிட்டு நாங்கள் ஒதுங்கிவிடுவதில்லை. நாங்கள் என்ன பிரச்சாரம் செய்கிறோமோ அதுபோலவே மக்கள் மத்தியில் வாழ்கிறோம். அதனால், மக்கள் எங்கள் பிரச்சாரத்தை நம்புகிறார்கள். எப்போதும் தாடியும் தொப்பியுமாக தோற்றமளிக்கும் முஸ்லிம் நான் ராஜஸ்தான் சென்றால் அங்கே, மகிபால் சரஸ்வத் என்ற எனது நண்பர் வீட்டில்தான் தங்குகிறேன்.

தமிழகத்தில் பிராமணர்கள் எப்படியோ அத்தகைய ஆச்சாரம் கொண்டவர்கள்தான் மகிபால் சரஸ்வத் இனத்தினர். அப்படி இருந்தும் துவேசம் பார்க்காமல் அந்தக் குடும்பம் என்மீது அன்பு செலுத்துகிறது. அவர்களும் ராமேஸ்வரம், திருப்பதி செல்ல இங்கு வந்தால் புதுச்சேரியில் உள்ள எனது வீட்டில்தான் தங்குவார்கள். கடந்த ஆறு வருடங்களாக, பிஹாரில் உள்ள எனது நண்பரும் முன்னாள் ராணுவ வீரருமான பல்வன் சிங் யாதவ் எடுத்துத் தரும் புத்தாடையைத்தான் நான் ரம்ஜானுக்கு உடுத்துகிறேன்.

டென்னிஸ் வீரராக இருந்து ஹாலிவுட் ஃபிலிம் மேக்கராக மாறிய இந்தியரான அசோக் அமிர்தராஜுக்கு ‘ஈஸ்ட் லண்டன்' பல்கலைக்கழகம் சமீபத்தில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கியுள்ளது! பல புதிய திரைப்பட இயக்குநர்களை உலகம் முழுக்கக் கொண்டு சேர்த்ததற்காக இந்த கவுரவமாம்!

செம ‘சர்வீஸ்’!

தமிழகத்தில் பிராமணர்கள் எப்படியோ அத்தகைய ஆச்சாரம் கொண்டவர்கள்தான் மகிபால் சரஸ்வத் இனத்தினர். அப்படி இருந்தும் துவேசம் பார்க்காமல் அந்தக் குடும்பம் என்மீது அன்பு செலுத்துகிறது. அவர்களும் ராமேஸ்வரம், திருப்பதி செல்ல இங்கு வந்தால் புதுச்சேரியில் உள்ள எனது வீட்டில்தான் தங்குவார்கள். கடந்த ஆறு வருடங்களாக, பிஹாரில் உள்ள எனது நண்பரும் முன்னாள் ராணுவ வீரருமான பல்வன் சிங் யாதவ் எடுத்துத் தரும் புத்தாடையைத்தான் நான் ரம்ஜானுக்கு உடுத்துகிறேன்.

அகிம்சை போராட்டங்களின்போது பலமுறை கோயில்களிலும் சர்ச்களிலும் தங்கியிருக்கிறேன். யாரும் என்னை எந்தக் கேள்வியும் கேட்டதில்லை. காந்தியடிகள் நிஜத்தை மட்டுமே பேசினார். நிஜமாகவே வாழ்ந்தார். அப்படியில்லாமல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவதுதான் பல பிரச்சினைகளுக்குக் காரணமாகி விடுகிறது.

வாழும் உதாரணமாக இருந்தால்தான் நாம் நினைக்கும் மாற்றத்தைக் கொண்டுவர முடியும். ‘மக்களை நல்வழிப்படுத்துவதுதான் இஸ்லாத்தின் மார்க்கம்' என்றார் நபிகள் நாயகம். ‘அன்பு கொண்டு அரவணைத்தால்தான் ராமபிரானை அடைய முடியும்' என்கிறது இந்து தர்மம். இதைத்தான் நாங்களும் மக்களுக்குப் புரியும் மொழியில் போதித்துக் கொண்டிருக்கிறோம்” என்கிறார் இனாமுல் ஹசன் தன்னடக்கத்துடன்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x