Last Updated : 09 Jan, 2015 12:56 PM

 

Published : 09 Jan 2015 12:56 PM
Last Updated : 09 Jan 2015 12:56 PM

ஷூ வேண்டுமா?

இளைஞர்களைக் கவர்ந்திழுக்கும் பொருள்கள் என்னவென்று கேட்டால் சட்டென்று நம் நினைவுக்கு வருபவை நவநாகரிக உடைகளும் லேட்டஸ்ட் மொபைல் போன்களும்தான். ஆனால் இவற்றைத் தவிரவும் எக்கச்சக்கமான விஷயங்கள் இளைஞர்களின் விருப்பப் பட்டியலில் இடம்பிடிக்கின்றன. அவற்றில் முக்கியமான ஒன்று விதவிதமான ஷூக்கள். அதிலும் சமீபகாலமாக நடைபாதையில் கடை விரித்து சீப் அண்ட் பெஸ்ட் பார்முலாவில் கலர் கலராக விற்கப்படும் ஷூக்கள் இளவட்டங்களைச் சுண்டி இழுக்கின்றன. இதுபோன்ற ஷூக்கள் பற்றி ஒரு சின்ன அலசல்.

கலர் கலரா போடுவோம்ல!

முன்பெல்லாம் ஷூ வாங்க வேண்டுமானால் பெரிய கடைகளுக்கும், ஏசி ஷோ ரூம்களுக்கும்தான் போக வேண்டியிருக்கும். ஆனால் இப்போது நடைபாதையிலேயே நல்ல தரமான ஷூக்கள் குறைந்த விலையில் கிடைக்கின்றன. அதனால்தான் அதை வாங்கி அணிய விரும்புவதாகச் சொல்லும் பலரில் தனியார் மொபைல் போன் நிறுவனத்தில் சேல்ஸ் மேனாக இருக்கும் துரை முருகனும் ஒருவர். ஆனால் ஓர் இளைஞனை ஈர்க்க இந்தக் காரணம் மட்டும் போதாதே! கொஞ்சம் உண்மை சொல்லுங்க பாஸ்! எனக் கேட்டபோது, “நான் மிடில் கிளாஸ்தாங்க. ஆனால் ஹை கிளாஸ் மாதிரிக் கெத்து காண்பிக்க இந்த மாதிரி ஷூக்கள் போடுறேன்.

அது மட்டுமில்லாமல் முன்பெல்லாம் பொண்ணுங்க மட்டும்தான் உடைக்கு ஏற்ற மாதிரிச் செருப்பு போடுவாங்க. ஆனால் இப்ப நாங்களும் பெண்களை இம்ப்ரஸ் பண்ண விதவிதமாக ஷூ போட ஆரம்பிச்சுட்டோம்ல!” எனக் குறும்பாகக் கெத்து காண்பிக்கிறார் துரை முருகன். அவரைவிடவும் பெரிய அப்பாடக்கராக இருக்கிறார் கல்லூரி மாணவர் கணேஷ். “இப்போது இருக்கும் டிரெண்டில பலர் பச்சை, சிவப்பு, மஞ்சள்னு கலர் கலராகப் பேண்ட் போடுறாங்க. அந்த மாதிரி பேண்ட்களுக்கு கேஷுவல் ஷூ போட்டால் தோரணையாக இருக்கும். அந்த மாதிரி ஷூ வாங்க பிளாட் ஃபார்ம் கடைகள்தான் பெஸ்ட் சாய்ஸ்” என்கிறார் ஸ்டைலாக.

யூத் சாய்ஸ் நாங்கதான்

சென்னை, மும்பை, பெங்களூரு போன்ற பெரு நகரங்களில் மட்டுமே காணப்பட்ட நடைபாதை ஷூ கடைகள் இப்போது எல்லா ஊர்களிலும் காணப்படுகின்றன. சென்னை சேப்பாக்கம் மைதானம் அருகில் நடைபாதையில் கேஷுவல், ஃபார்மல், ஸ்போர்ட்ஸ் ஷூ என விதவிதமான ஷூக்களை விற்கும் பைஜுல்லா பேசியபோது, “இப்போது இருக்கும் விலைவாசியில் ஒரு நல்ல செருப்பு வாங்கணும் என்றால் குறைந்தது 400 ரூபாய் செலவாகும். ஆனால் எங்ககிட்ட வெறும் 300 ரூபாய்க்கே நல்ல நல்ல ஷூக்கள் கிடைக்கும்” என்கிறார் தெம்பாக.

சரி, உங்களிடம் இருக்கும் ஷூக்களைப் பற்றிச் சொல்லிவிட்டீர்கள். ஆனால் இளைஞர்கள் விரும்பும் ஷூ எது எனக் கேட்டால், “கேஷுவல் ஷூ அதிலும் மேல் பாகம் கலர் கலராகவும் அதற்கு மேட்சிங்கான லேஸும் கொண்ட ஷூக்கள்தான் கல்லூரி மாணவர்களின் சாய்ஸ். இது மாதிரி ஷூக்களை நம்ம ஊர் பசங்க மட்டுமில்லாமல் இங்கே தங்கிப் படிக்கும் வட மாநிலங்களைச் சேர்ந்த கல்லூரி மாணவர்களும் அதிகம் விரும்பி வாங்குறாங்க” என்கிறார்.

இனிமேல் ஷூ வாங்கச் சென்றால் இதுபோன்ற டிசைன் டிசைனான ஷூக்களைக் கவனத்தில் கொண்டு டிரெண்டுக்குத் தக்க அழகான மாடல் ஷூவைத் தேர்ந்தெடுப்பீர்கள்தானே!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x