Published : 23 Jan 2015 02:51 PM
Last Updated : 23 Jan 2015 02:51 PM

ஷாரூக் கானை அசத்திய தமிழ் இளைஞர்கள்

சென்னையைச் சேர்ந்த இளைஞர் குழுவொன்று பாலிவுட் பாட்ஷா ஷாரூக் கானை மெர்சலாக்கியிருக்கிறது. அந்தக் குழுவுக்குத் தலைமை வகிப்பவர் ரமேஷ் தமிழ்மணி. 25 வயதே நிரம்பிய இவர் ஒரு ஆர்க்கிடெக். படித்து முடித்ததும் மாதச் சம்பளத்துக்கு வேலைக்குச் செல்ல விருப்பமில்லாமல் கட்டிட வரைபடங்களை வரைந்து தரும் டிசைன் ஸ்டூடியோவைச் சொந்தமாகத் தொடங்கியிருக்கிறார்.

தனது வரைபடத் தொழிலின் நிமித்தமாக ஓவியர்கள் பலரைச் சந்தித்த தமிழ்மணி தன் வயதையொத்த ரமேஷ் ஆச்சார்யாவைச் சந்தித்தபோது ஆச்சரியப்பட்டுப்போனார். கும்பகோணம் நுண்கலைக் கல்லூரியில் ஓராண்டு மட்டுமே பயின்று, படிப்பைப் பாதியில் விட்டு சென்னையை நம்பி வந்தவர் ஓவியர் ரமேஷ் ஆச்சார்யா.

அவர் வரைந்து வைத்திருந்த சில தொடர் ஓவியங்களைப் பார்த்து எதற்காக இந்த ஓவியங்கள் என்று தமிழ்மணி கேட்டிருக்கிறார். “ ஒரு நல்ல கதாசிரியர் கிடைத்தால், இதே பாணியில் வரைந்து காமிக் புத்தகமாக வெளியிடுவேன்” என்றார் ரமேஷ் ஆச்சார்யா.

தேடினேன் வந்தது!

ரமேஷ் தமிழ்மணிக்கோ பர்கர் சாப்பிடப் போன இடத்தில் இத்தாலியன் பிட்சா கிடைத்தமாதிரி ஆகிவிட்டது. ஏனெனில் தமிழ்மணி தன் வருமானத்தின் பெரும்பகுதியை காமிக் நாவல்கள் வாங்கி வாசிப்பதில் செலவழிக்கும் ஆசாமி. அவருக்கு அசலான இந்தியத் தன்மையுடன் ஒரு கிராபிக் நாவல்கூட வெளிவரவில்லையே என்ற ஏக்கம் இருந்ததது.

ரமேஷ் ஆச்சார்யாவின் அபாரத் திறமையைக் கண்டதும் அந்த நொடியே “உங்களுக்கான நாவலாசிரியர் கிடைத்துவிட்டார். அது வேறு யாருமல்ல நான்தான். இன்னும் சில தினங்களில் ஒரு நல்ல கதையுடன் உங்களைச் சந்திக்கிறேன்” என்று சொல்லிச் சென்றார் ரமேஷ் தமிழ்மணி.

அசரவைத்த அதர்வா

ஒரு நாள் ‘அதர்வா’என்ற கதையுடன் வந்தார் தமிழ்மணி. கதையைப் படித்துப் பார்த்த ஓவியர் ஆச்சாரியாவுக்கோ தலைகால் புரியவில்லை. காரணம் ஆச்சார்யா ஏற்கனவே வரைந்து வைத்திருந்த சில கதாபாத்திரங்கள் மற்றும் கதைக்களத்துக்கான நிலப்பரப்பு ஓவியங்களின் தாக்கத்துடன் கண்டங்கள் உருவாகும் முன் வாழ்ந்த ஒரு தமிழ் மன்னனின் கதையாக ‘ அதர்வா’ கதையை விரித்து எழுதியிருந்தார் தமிழ்மணி. அவ்வளவுதான். மளமளவெனக் கதையை வரைய ஆரம்பித்தார் ரமேஷ் ஆச்சாரியா.

கிராபிக் நாவல் குழு

கட்டிட வரைபடக்கலை தொழில் வழியே ஒன்றிணைந்த இவர்கள் தங்கள் கலைப்பசியையும் தீர்த்துக்கொள்ள கிராபிக் நாவல் உருவாக்கத்தில் ஈடுபடுவதைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இவர்களுடன் கைகோத்துக் கொண்டார்கள் சக நண்பர்களான வேல் மோகன், வின்சன்ட் அடைக்கலராஜ், சஞ்சய் ராகவன், ஜோலன் ஆகியோர்.

அவர்களது கலந்துரையாடலில் அடுத்த ஐடியா பிறந்தது. இந்த நாவலின் முதன்மைக் கதாபாத்திரத்தை உலகறிந்த ஒரு இந்திய நடிகரின் சாயலில் ஏன் மாற்றி அமைக்கக் கூடாது என்று கேட்டுக்கொண்டனர்.

தங்களது ஒரே தேர்வாக ஷாரூக் கானை அதர்வா கதாபாத்திரத்துக்குத் தேர்வு செய்தனர். இப்போது அதர்வா கதாபாத்திரத்தில் ஷாரூக் கானை வரைந்து தள்ளினார் ரமேஷ் ஆச்சாரியா.

அதிசயித்த ஷாரூக் கான்

ஷாரூக் கான் உள்ளே நுழைந்ததும் ஓவியங்களுக்கு நிஜமாகவே ஒரு காவியத் தன்மை கிடைத்ததை உணர்ந்த நண்பர்கள் குழு ஓவியங்களோடு ஷாரூக் கானை நேரில் சந்திக்க மும்பை பறந்தனர். ஓவியங்களைப் பார்த்து வியந்த ஷாரூக் கான் கதையையும் கேட்டு வியந்து அதர்வா கிராபிக் நாவலில் தன்னை மாடலாகப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி அளித்தார்.

தற்போது 3டி ஆங்கில கிராபிக் நாவலாக இதைப் பதிப்பித்து வெளியிட இருக்கும் இவர்கள் அடுத்து அதை அனிமேஷன் திரைப்படமாகவும் தயாரிக்கத் திட்டமிட்டிருக்கிறார்கள். அதற்குக் கண்டிப்பாக ஷாரூக் கான் குரல் நடிப்பைக் கொடுப்பார் என்று நம்புகிறார்கள். ஷாரூக் கான் அங்கீகரித்த அதர்வா கிராபிக் நாவலுக்கு ஒரு டிரைலரையும் தயாரித்து யூடியூப் இணையத்தில் வெளியிட்டிருக்கும் இந்த இளைஞர் பட்டாளத்திடம் அதர்வா நாவலின் கதையைக் கேட்டதும் ஒளிக்காமல் சொல்கிறார்கள்.

“புதியதோர் அத்துவான உலகில் அகண்ட தோள்களின் வலிமையில், சீர்கொண்ட பார்வையின் தேடலில் தன் எதிர்காலத்தை நோக்கிச் செல்லும் ஆதித்தமிழ் மன்னனின் கதை. அப்போது பூமியில் எல்லைக்கோடுகள் இல்லை. அதுதான்‘ அதர்வா – தி ஆரிஜின். விசித்திரமான பறவைகள் , விலங்குகள் , கொடிய அரக்க குணம் கொண்ட உயிரினங்கள் வாழும்

புராண காலத்து தீவு ஒன்றில் கதை நடக்கிறது. மன்னன் அதர்வாவாக ஷாரூக் பங்கேற்பது இந்த நாவலை உலகளாவிய சந்தைக்கு இட்டுச் செல்லும்” என்று எங்கள் குழு நம்புகிறது என்கிறார் ரமேஷ் தமிழ்மணி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x