Last Updated : 05 Oct, 2013 04:36 PM

 

Published : 05 Oct 2013 04:36 PM
Last Updated : 05 Oct 2013 04:36 PM

நீங்களே போடலாம் பிளான்!

‘முதல் கோணல்; முற்றிலும் கோணல்’ என்பது பழமொழி. வீடு கட்டவும் இந்தப் பழமொழி நிச்சயம் பொருந்தும். வீடு கட்ட முதல் படியே திட்டமிடல்தான். புதிதாக வீடு கட்டுபவர்கள், தங்கள் கனவு வீடு இப்படித்தான் அமைய வேண்டும் என்று பல்வேறு கனவுகளுடன் இருப்பார்கள். லட்சக்கணக்கில் செலவுசெய்து கட்டப் போகும் வீட்டுக்கு மிக முக்கியமானது, வடிவமைப்புத் திட்டம். திட்ட வரைப்படத்தைப் பொறியாளர் மூலம் வரைவதற்குப் பதிலாக நாமேகூட முயற்சிக்கலாம். அதற்கு ‘ஸ்மால் புளூ பிரிண்டர்’ என்ற இணையதளம் உதவுகிறது. அமெரிக்காவைச் சேர்ந்த டேவிட் டோல் என்பவர் இந்த இணையதளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த இணையதளத்தைப் பயன்படுத்தித் திட்ட வரைபடம் வரைவது எளிதுதான். இணையதளத்தின் முகப்புப் பக்கத்தில் Design, Isometric View, 3D Walk through மற்றும் Print ஆகிய இணைப்புகள் இருக்கும். முதலில், Designயை திறக்க வேண்டும். இதில் Blank Plan அல்லது Sample Plan என்பதில் ஏதாவது ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளவும். புளூ பிரிண்ட் பிளான் பற்றித் தெரியாது என்றால், Sample Planயை தேர்வு செய்வதே நல்லது.

வலதுபக்கம் இருக்கும், Add Wall இணைப்பைக் கிளிக்செய்து, எங்கெங்கு சுவர் வேண்டுமோ அங்கு அவற்றைக் கொண்டுவரலாம். அறைச் சுவர், வெளிச் சுவர், போர்டிகோ ஆகியவற்றை இந்த டூல் மூலம் அமைத்து விடலாம். அதேபோல் Add Door, Add Window இணைப்புகளை கிளிக் செய்து, எங்கு கதவு வேண்டும், எங்கு ஜன்னல் இருக்க வேண்டும் என அனைத்தையுமே எளிதாகப் பொருத்தலாம்.

பிறகு Transform என்ற இணைப்பைப் பயன்படுத்தி இதுவரையில் வடிவமைத்ததை மாற்றியமைக்கலாம் அல்லது நகர்த்திக்கொள்ளலாம். இறுதியாக, Isometric View மற்றும் 3D Walkthrough ஆகியவற்றில் பிடித்த வண்ணத்தைத் தேர்ந்தெடுக்க வேண்டும்.

இவை அனைத்தையும் செய்து முடித்த பிறகு, திட்டத்தைப் பார்வையிட்டு, பிளான் திருப்தி என்றால், பிரிண்ட் கொடுங்கள். இப்போது திட்ட வரைப்படம் தயார்.

இதே இணையதளத்தைப் பயன்படுத்தித் தோட்டம் மற்றும் தரைத்தள வடிவமைப்புக்கும் பிளான் போட முடியும். இந்தத் தளத்தைப் பயன்படுத்த உறுப்பினர் கணக்கு தேவையில்லை. தனியே எந்த மென்பொருளையும் பதிவிறக்கம் செய்ய வேண்டிய அவசியமும் இல்லை. புளூ பிரிண்ட் பிளான் பற்றி நன்கு அறிந்தவர்கள், இத்தளத்தில் பிளான் தயாரித்து, அப்ரூவல்கூட வாங்கலாம்.



FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x