Published : 30 Dec 2016 10:54 AM
Last Updated : 30 Dec 2016 10:54 AM

காதல் வழிச் சாலை 15: காதலில் ஜெயிக்க என்ன செய்யலாம்?

“அந்தப் பெண் என்ன ஆவாங்க?” - இப்படியொரு கேள்வி எதிர்முனையில் ஒலித்ததுமே நிமிர்ந்து உட்கார்ந்தேன்.

“ஏழெட்டு வருஷமா ரெண்டு பேரும் லவ் பண்றாங்க. இப்போ அந்தப் பொண்ணுக்கு வேற ஒருத்தருக்கு இரண்டாம்தாரமா கல்யாணம் பண்ணித்தர முடிவெடுத்திருக்காங்க. கல்யாணத்துல அந்தப் பொண்ணுக்கு சுத்தமா விருப்பமில்லை. நான் செத்துட்டேன்னு எல்லாரும் நினைச்சுக்கங்கன்னு விரக்தியா சொல்றாங்க. இந்தப் பெண்ணுக்கு அப்பா, அம்மா இல்லை. அண்ணனும் தாய் மாமனும் எப்படியோ தள்ளிவிட்டா போதும்னு நினைக்கிறாங்க. என்ன செய்யறதுன்னே தெரியலை,” என்றார் அந்த நண்பர்.

“மாப்பிள்ளையின் குடும்பம் சரியில்லையாம். கட்டுப்பெட்டியானவங்களாம். வாசலில் நிற்கக் கூடாது, செல்போன் பேசக் கூடாது, ஆறு மணிக்கு மேல் வெளியே போகக் கூடாதுன்னு ஆயிரம் பத்தாம்பசலித்தனமான கட்டுப்பாடுகளாம். மாப்பிள்ளைக்கும் நல்ல பேர் இல்லைன்னு, அவங்க தெருவில் சொல்றாங்க” என்று அடுக்கினார் நண்பர்.

“ரெண்டு பேருமே மேஜர். பதிவுத் திருமணம் செய்துகொள்ளலாமே?” என்று கேட்டேன். “அந்தப் பொண்ணு ரொம்பப் பயப்படறாங்க. அவங்க காதலனும் வேலை சரியாக அமையாமல் தன் வாழ்க்கையை ஓட்டவே தடுமாறிட்டு இருக்கார். ரெண்டு பேருமே நம்பிக்கையில்லாம பேசுறாங்க. என்ன செய்யறதுன்னு எங்களுக்குத் தெரியலை,” என்றார் குழப்பத்துடன்.

தன்னம்பிக்கை அவசியம்

காதலுக்கு முக்கியத் தேவையான தன்னம்பிக்கை இரண்டு பேருக்குமே இவ்வளவு குறைவாக இருந்தால் எப்படிச் சரிவரும்? எதிர்மறை எண்ணங்களோடு வாழ்க்கையைத் தொடங்குவது அவ்வளவு நல்லதில்லையே.

தன் காதலைத் துறந்த ஒரு பெண், வேறு ஆணைத் திருமணம் செய்தால் என்ன நடக்கும்? புகுந்த வீட்டில் ஒருவழியாகச் சமாளித்து கணவன், புகுந்த வீட்டாருடன் அனுசரித்துப் போய்விடுவார்கள். அல்லது அந்த மாற்றத்தைக் காலமே நிகழ்த்திவிடும். அதிலும் பட்டென்று ஒரு குழந்தையும் பிறந்துவிட்டால் பல விதங்களிலும் வாழ்க்கையைச் சமரசம் செய்துகொண்டு விடுவார்கள்.

ஒருவேளை பழைய உறவை மறக்க முடியாமல் மனதளவில் புகுந்த வீட்டில் ஒட்டவில்லை என்றால் அது கணவன், மனைவி இருவருக்குமே நஷ்டம்.

கசந்துபோன மண வாழ்க்கை

நான் சந்தித்த இன்னொரு காதல், பரிதாபமான முடிவைச் சந்தித்தது. வழக்கமான காதல். அதைத் தொடர்ந்த எதிர்ப்புகள். பெண்ணின் தந்தைக்கு இதில் துளியும் விருப்பமில்லை. “உன் காதலன் குறைவாகச் சம்பாதிக்கிறான். நான் பார்த்திருக்கும் மாப்பிள்ளைக்குச் சம்பளத்தைவிட கிம்பளம் அதிகம்” என்று சொல்லி ஒரு மாப்பிள்ளையின் கையில் பிடித்துக் கொடுத்தார்.

இரண்டே மாதங்களில் கசந்தது, அந்தப் பெண்ணின் வாழ்க்கை. போதைக்கு அடிமையான அந்த நபர் தெருவில் போவோர் வருவோருடன் எல்லாம் இணைத்துப் பேசி கொன்றிருக்கிறார். சந்தேக நோயாளியோடு வாழ முடியாமல், தந்தை வீட்டுக்கே திரும்பிவிட்டார். வாழாமல் வந்துவிட்ட தன் பெண்ணைப் பார்க்கப் பார்க்க தகப்பனுக்குக் குற்றஉணர்வு பிடுங்கித் தின்றிருக்கிறது. “நான்தானே உன் வாழ்க்கையைக் கெடுத்தேன். நானே சரி செய்கிறேன்” என்று சொல்லிவிட்டுத் தன் மகளின் காதலனிடம் சென்றார். நல்ல வேளை அந்த நபருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. ஏதோ வேலையாக இருந்தவர், பின்னர் அழைப்பதாகச் சொல்லி அனுப்பியிருக்கிறார்.

துயர் சூழ்ந்திருந்த அந்தப் பெண்ணின் முகத்தில் நம்பிக்கையின் கீற்று தென்பட, தந்தையும் ஆசுவாசமடைந்தார். ஆனால், நாட்கள் சில கடந்தும் பழைய காதலிரிடமிருந்து பதில் இல்லை. பொறுமையிழந்த பெண்ணின் தந்தை அந்த நபரை அழைக்க, அவர் என்ன பதில் சொன்னாரோ இடிந்து விழுந்தார். தன் வாழ்வில் இனி வசந்தமில்லை என்றதும் அந்தப் பெண் பூச்சிக்கொல்லியைக் குடித்துவிட்டார். இறக்கும் தறுவாயில் அந்தப் பெண் கேட்ட கேள்வி: “அப்பா, எனக்கு மட்டும் ஏம்ப்பா இப்படி?”

காதலே பொய்யா?

இந்தப் பெண்ணின் கதையில் யார் மீது தவறு? தன் மகளின் உண்மையான காதலின் ஆழத்தைப் பெற்றோர் புரிந்து கொள்ளவில்லையா? காதலிப்பவனின் வருமானத்தைவிட தான் பார்த்த மாப்பிள்ளைக்கு வரும்படி அதிகம்; தன் மகள் இன்னும் சுகமாக இருப்பாள் என்ற அந்தத் தந்தையின் அனுமானம் தவறா? சென்ற இடத்தில் கணவன் மனநோயாளியாக இருந்தது யாருடைய தவறு? அவளும் நானும் காதலித்தோம்… இப்படியொரு சூழ்நிலையில் அவளுக்குத் துணைநிற்க வேண்டுமே என்ற எண்ணம் இல்லாத காதலனின் முடிவு ஏற்புடையதா? இல்லை இந்தக் காதலே நிஜமில்லையா?

போராடினால்தான் வெற்றி

இந்த இரண்டு காதல் கதைகளில் இருந்து என்ன புரிகிறது? காதலில் வெற்றி பெற போராட வேண்டும். அதற்கு முன்பாக நம்முடைய காதலை நாமே கொஞ்சம் ஆராய்ந்து உணர வேண்டும். குறைந்தபட்சம் ஆண், பெண் இருவரில் ஒருவராவது துணிச்சலோடு முயல வேண்டும். இந்தக் காலத்தில் வேலை, வருமானம் போன்றவை ஜாதி மத பேதங்களைவிட முக்கியமானவை. பெற்றோர்தான் மாப்பிள்ளையின் வருமானம் போன்றவற்றைப் பார்க்கிறார்கள் என்று நினைக்க வேண்டாம்.

தேனிலவுக் காலம் முடியும்வரைதான் எல்லாம். பிறகு வேகம் குறைந்து, விவேகம் எட்டிப் பார்க்கத் தொடங்கிவிடும். ‘இல்லானை இல்லாளும் வேண்டாள்’ என்று முன்னோர்கள் சும்மா சொல்லிவிட்டுப் போகவில்லை. அன்பு, பாசம், காதல் எல்லாவற்றையும் தாண்டி வாழ்வின் நடைமுறைச் சிக்கல்களைச் சமாளித்து எழ பணம் வேண்டும். அதற்கு ஒரு வேலை வேண்டும். அப்போதைக்குத் தேவையான வசதிகள் மாத்திரம் முக்கியமல்ல… தொடர்ந்து வாழ்க்கையைக் கொண்டுசெல்லக் குறைந்தபட்ச உத்தரவாதத்துக்கு ஒரு வேலை தேவை. இதை ஏற்பாடு செய்துகொள்ளத் தவறிவிட்டதால், தன் காதலியைச் சோகத்துடன் வழியனுப்பி வைக்கிறார் ஒரு இளைஞன்.

கன்னியின் கடைக்கண் பார்வையே போதுமா? அந்தக் கண்ணில் என்றும் மலர்ச்சியையும் மகிழ்வையும் காண அடிப்படையான விஷயங்களை நிறைவேற்றிக்கொள்வதை எப்படி மறக்க முடியும்? காத்தல் என்பதே காதல் என்பதை எப்படி உணராமல் இருக்க முடியும்? காதலை எதிர்க்கும் பெற்றோர்கள் சொல்லும் பல்வேறு காரணங்களில் வேலையின்மையும் ஒன்று. வெறுமனே இலக்கில்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் வாலிபனைக் காட்டிலும், தனக்கென ஒரு துணையுடன் சுற்றிக்கொண்டிருக்கும் இளைஞனின் எண்ண ஓட்டம் எப்படி இருக்க வேண்டும்? அவள் எனக்கு வேண்டும்; அதற்கு நான் என்னவெல்லாம் செய்ய வேண்டும்? எப்படித் தயாராக வேண்டும் என்ற தொடர் சிந்தனை அவனை வெற்றியாளனாக ஆக்கிவிடாதா?

ஊக்கம் தரும் மாமருந்து

கல்லூரியில் இறுதித்தேர்வு வந்துவிட்டது. விடிய விடிய அம்மா காபி போட்டுக் கொடுப்பார். அப்பாவி அப்பாவோ சட்டையை அயர்ன் செய்து, வண்டியைத் துடைத்து, பாக்கெட் மணியைக் கொஞ்சம் சேர்த்துக்கொடுத்து அனுப்பி வைப்பார். இதையெல்லாம் தாண்டி இன்னொரு முக்கியமான ஆள் வருவார். “டேய்… பாத்துடா, நல்லா எழுது. இந்த எக்ஸாம்தான் நம்ம வாழ்க்கைக்கே ரொம்ப முக்கியம். இதுல ஜெயிச்சி, கேம்பஸ்ல செலக்ட் ஆகணும். முதல் மாசம் சம்பளம் வாங்கியதுமே, நம்ம கல்யாணப் பேச்சை நானே எங்க வீட்ல ஆரம்பிப்பேன்.

நீ வேலை மட்டும் வாங்கு. மாலையை எங்க அப்பாவை வாங்கி வைக்கச் சொல்றேன்,” என்று நம்பிக்கையோடு ஒரு பெண் வாழ்த்து சொல்லி அனுப்பிவைக்கிறாள் என்று வைத்துக்கொள்ளுங்கள். அந்தத் தேர்வில் அந்த இளைஞன் தோற்பானா என்ன? அவன் காதல் அவனைத் தோற்கவிடுமா? அந்தப் பெண்ணின் நம்பிக்கையும் காதலின் சக்தியும் அளவற்ற ஒரு உத்வேகத்தை அந்த இளைஞனுக்குக் கொடுக்கும். கொடுக்க வேண்டும்; அதுதான் காதல். அப்படி இருப்பது மட்டுமே காதல். விரயமாகாத காமமும் விலை மதிப்பில்லாத காதலும் ஒருங்கிணைக்கப்பட்டு ஒரே நோக்கத்தோடு செயல்படுத்தப்பட்டால் செயற்கறிய காரியங்களை யாரும் செய்யலாம்.

காதலின் சக்தியை வெற்றிக்கான ஊக்க மருந்தாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதைத்தான் Transmutation of sexual energy என்று குறிப்பிடுகிறார் நெப்போலியன் ஹில் (Napoleon Hill).

அவரது ஆகச் சிறந்த புத்தகமான Think and Grow rich என்ற புத்தகத்திலும் இதைத்தான் சொல்லியிருக்கிறார். வெற்றிபெற்ற எல்லா ஆண்களின் பின்னணியிலும் ஒரு பெண் இருப்பாள் என்பதன் இன்னொரு விளக்கம்தான் இது. காதலில் ஜெயிக்க, வாழ்க்கையிலும் ஜெயிக்க வேண்டும் என்பதைப் புரிந்துகொண்டாலே போதும், காதல் யார் துணையும் இல்லாமலே கைகூடும்.

(பயணிப்போம்)
கட்டுரையாளர், மனநல மருத்துவர்.
தொடர்புக்கு: drmohanv18@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x