Last Updated : 09 Jan, 2015 12:38 PM

 

Published : 09 Jan 2015 12:38 PM
Last Updated : 09 Jan 2015 12:38 PM

உலகக் கோப்பை வெல்ல நாங்க ரெடி!

நம் தேசிய விளையாட்டு ஹாக்கியாக இருந்தாலும், இந்தியாவுக்கு வெற்றி மேல் வெற்றிபெற்றுத் தரும் விளையாட்டுகளில் ஒன்று கபடி. அதிலும் தமிழகப் பெண்கள் கபடியில் தொடர்ந்து சாதித்துக் கொண்டிருக்கிறார்கள். 2015-ல் உலகக் கோப்பை கபடி போட்டி மதுரையில் நடைபெற உள்ள சூழ்நிலையில், இந்திய அணிக்குப் பலம் சேர்க்கும் வீராங்கனைகள் மதுரையிலேயே தயாராகிக் கொண்டிருக்கிறார்கள்.

மதுரை யாதவா கல்லூரி மகளிர் கபடி அணி என்றால், தென்மாவட்டக் கபடி ரசிகர்களுக்கு உற்சாகம்தான். எதிரணியினரின் பிடியிலிருந்து இவர்கள் லாவகமாகத் தப்பிக்கும் காட்சி, வலையில் இருந்து துள்ளிக்குதித்துத் தப்புகிற மீன்களை ஞாபகப்படுத்தும். பல்கலைக்கழக அளவில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளது இந்த அணி.

அதிரடி கபடி!

காமராசர் பல்கலைக்கழக அணியில் இக்கல்லூரியைச் சேர்ந்த என்.அனிதா, பி.கலையரசி, எஸ்.அந்தோணியம்மாள், ஜி.குருசுந்தரி, எஸ்.சூர்யா, எம்.தேவி, என்.பாக்கியலட்சுமி, ஆர்.சோபனா ஆகிய எட்டுப் பேர் இடம்பெற்றுள்ளனர். இவர்களில் ஏழு பேர் மதுரை மாவட்ட அணியிலும், நான்கு பேர் தமிழக அணியிலும் இடம்பிடித்துள்ளதோடு, அந்த அணிகளின் தொடர் வெற்றிக்கு முக்கியக் காரணமாகவும் இருந்திருக்கிறார்கள்.

பயிற்சியில் இருந்த மாணவிகளைக் கூர்ந்து கவனிக்கும்போது எல்லோருக்குமே கால் மூட்டில் காயமிருந்தது தெரிந்தது. கை மூட்டில் தழும்புகள் தென்படுகின்றன. கண் புருவத்திலும், நெற்றியிலும்கூட வெட்டுக்காயங்கள் இருக்கின்றன. அட! உண்மையிலேயே வீரர்கள்தான் எனத் தோன்றியது. இவர்களுடைய வெற்றிப் பட்டியல் இன்னும் அசத்தலாக இருக்கிறது. கேரளாவில் நடைபெற்ற தென்னிந்தியப் பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டி முதல் காஞ்சிபுரம், காரைக்குடி, தூத்துக்குடி, சிவகாசி ஆகிய ஊர்களில் நடந்த தேசிய அளவிலான போட்டிகள்வரை ஏராளமான போட்டிகளில் முதல் பரிசு வென்றுள்ளார்கள்.

உலக கோப்பை வெல்வோம்

தங்களது லட்சியம் குறித்துத் தமிழக வீராங்கனை என்.அனிதா கூறியபோது, “இந்தியா முழுக்க நாங்கள் ஆடாத மைதானம் கிடையாது. ஆனால் இந்திய அணியில் பங்கேற்று வெளிநாட்டு அணிகளுடன் சடுகுடு ஆடும் வாய்ப்பு இதுவரை கிடைக்கவில்லை. எங்களுக்கு அத்துப்படியான மதுரை மண்ணிலே இந்த வருடம் நடக்கப் போகும் உலகக் கோப்பை கபடிப் போட்டியில் எப்படி யாவது விளையாட வேண்டும் என்பதுதான் எங்கள் லட்சியம்” என்றார் உற்சாகமாக.

வெற்றிக்குப் பின்னால்

திறமையான கபடி வீராங்கனைகள் எல்லாம் ஒரே கல்லூரியில் எப்படிக் கூடினார்கள்? அணியில் இடம்பிடித்த எட்டுப் பேரில் குருசுந்தரி மட்டும்தான் மதுரையைச் சேர்ந்தவர். அனிதா உள்பட மற்ற ஏழு பேரும் அரியலூர், தஞ்சை, விழுப்புரம் போன்ற வெளிமாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்தான். வெளிமாவட்ட மாணவிகள் எல்லாம் இந்தக் கல்லூரியில் சங்கமிக்கக் காரணமாக இருக்கிறார்கள் யாதவா கல்லூரியைச் சேர்ந்த பயிற்சியாளர்களான ஆர்.ஜெனார்த்தனனும் தேவேந்திரபாண்டியனும். இவர்கள் பள்ளி மாணவிகளுக்கான கபடிப் போட்டிகளைப் பார்க்க ஆண்டுதோறும் செல்கிறார்கள்.

போட்டியில் திறமையாக விளையாடும் மாணவிகளின் பெற்றோரைச் சந்தித்து அவர்களுடைய மகள் விளையாட்டிலும், படிப்பிலும் சாதிக்கத் தேவையான ஊக்கம் மற்றும் பொருளாதார உதவியைக் கல்லூரி அளிக்கும் என்ற உறுதிமொழி கொடுக்கிறார்கள். அழைத்து வந்த மாணவிகளைச் சிறந்த விளையாட்டு வீராங்கனைகளாகப் பட்டை தீட்டி ஜொலிக்கச் செய்கிறார்கள். அப்படித் சேர்ந்த கபடி வீராங்கனைகளைத்தான் நாம் இப்போது வியந்து பார்த்துக்கொண்டிருக்கிறோம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x