Last Updated : 13 Mar, 2019 10:52 AM

 

Published : 13 Mar 2019 10:52 AM
Last Updated : 13 Mar 2019 10:52 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: இன்று என்ன செய்தி?

‘‘மன்னா, நேற்று மாலை நான் வீட்டுக்குப் போய்க் கொண்டிருந்தேனா? அப்போது ஒரு பெரிய பூதம் எனக்கு முதுகைக் காட்டியபடி உட்கார்ந்து இன்னொரு பூதத்திடம் ரகசியம் பேசிக்கொண்டிருந்தது. எப்படியாவது விடிவதற்குள் பூதப்படையைத் திரட்டிக்கொண்டு போய் உங்கள் ஆட்சியைக் கைப்பற்றிவிட வேண்டுமாம்! தினமும் புலிப்பால் காபி குடிக்கும் எனக்கு எப்படி இருக்கும்? என் ரத்தம் அப்படியே வத்தக்குழம்புபோல் கொதிக்க ஆரம்பித்துவிட்டது.

இரு கைகளிலும் இரு வாள்களை உருவி, மின்னல் வேகத்தில் இரு பூதங்களின் தலையையும் சும்மா சீவி எறிந்துவிட்டேன், சீவி!’’

‘‘சபாஷ், உன் வீரத்தை மெச்சினோம்! உனக்கு நூறு பொற்காசுகளும் ‘பூதத்தலைச்சீவி’ எனும் பட்டமும் யாம் வழங்குகிறோம்” என்று அறிவித்து மகிழ்ந்தார் அந்தப் பாவப்பட்ட மன்னர். வேறு வழி? ஒற்றர், வீரர், அரண்மனை ஊழியர் என்று அவருக்கு நெருக்கமாக இருப்பவர்கள் வாயிலிருந்து என்ன வருகிறதோ அதுதான் அவருக்குக் கிடைக்கும் செய்தி. அதை அவர் நம்பித்தான் ஆகவேண்டும். பூதப்படை என்றொன்று இருக்கிறதா? இரு கைகளில் சீப்பு பிடித்து தலையே சீவ முடியாது. இவர் என்னடாவென்றால் இரு வாள்கள், இரு தலைகள் என்கிறாரே!

இப்படியே குழம்பித் தவிக்க வேண்டியதுதான். கிடைத்த செய்தி உண்மையா, பொய்யா என்பதை மன்னரால் கண்டுபிடிக்க முடியாது. என்னதான் பொன்னும் பொருளும் கொட்டிக்கிடந்தாலும் ஊர், உலகில் என்ன நடக்கிறது என்பது குறித்து நம்பகமான தகவல்களை அவர் பெறுவதற்கு வழியில்லை. பெறுவதில் மட்டுமல்ல, ஒரு செய்தியைப் பகிர்ந்துகொள்வதும்கூடக் கடினமானதுதான்.

உதாரணத்துக்கு ஒரு புதிய சட்டத்தைக் கொண்டுவந்தால் அதை மக்களுக்குத் தெரியப்படுத்துவதற்குள் போதும் போதுமென்றாகிவிடும். திசைக்கு ஓர் ஆளை அனுப்பி லொட்டு லொட்டு என்று தண்டோரா போட்டு, ‘‘இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்...’’ என்று ஊரைக் கூட்டி ஆர்ப்பாட்டம் செய்ய வேண்டும். அல்லது, மக்கள் நடமாடும் இடங்களில் உள்ள பாறைகளில் செய்தியைப் பொறிப்பார்கள்.

தன்னுடைய ஆட்சி நடைபெறும் பகுதியில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதையே ஒரு மன்னரால் முழுமையாகத் தெரிந்துகொள்ள முடியாது எனும்போது அடுத்த நாடு பற்றி எல்லாம் அவருக்கு என்ன தெரியும்? உலகில் என்னென்ன புதிய கண்டுபிடிப்புகள் நடந்திருக்கின்றன என்பதை அவர் எப்படித் தெரிந்துகொள்வார்?

என்னென்ன நாடுகள் இருக்கின்றன, அவற்றில் எத்தகைய ஆட்சிமுறை நடக்கிறது, அங்கு எப்படிப்பட்ட மக்கள் வசிக்கிறார்கள், அவர்கள் என்ன உண்கிறார்கள், எப்படிச் சிந்திக்கிறார்கள், என்ன மொழி பேசுகிறார்கள் என்று எதையும் அவரால் தெரிந்துகொள்ள முடியாது. யாராவது பயணிகளோ வணிகர்களோ வெளிநாடுகளிலிருந்து வந்தால், அவர்களிடமிருந்து செய்திகளைக் கேட்டுத் தெரிந்துகொள்வது ஒன்றுதான் வழி.

மக்களின் நிலை இன்னமும் மோசம். சில நேரம் மாதத்துக்கு ஒருமுறைதான் செய்தி என்ற ஒன்றே கிடைக்கும். அதுவும் எப்படிப்பட்ட செய்தி? ‘நேற்று நம் மாமன்னர் வேட்டையின்போது எகிறிக் குதித்து எண்பது யானைகளைத் தாக்கினார்’ என்று யாராவது சொன்னால், ‘அடடா! நம் மன்னரின் வீரமே வீரம்!’ என்று மெச்சிக்கொள்ளலாம்.

அல்லது, கோயில் சுவரில் ஏதாவது செய்திகள் எழுதப்பட்டிருந்தால் படித்துக்கொள்ளலாம். அல்லது, லொங்கு லொங்கு என்று பல மைல்கள் நடந்து சென்று பாறைகளில் பொறிக்கப்பட்டுள்ள செய்திகளைத் தெரிந்துகொள்ளலாம்.

idam-2jpg

மற்ற நாடுகளிலுள்ள மன்னர்களின் கதையும் கிட்டத்தட்ட இதுதான். அரசர்கள், மக்கள் என்று வேறுபாடில்லாமல் அனைவருடைய கனவும் ஒன்றுதான். நமக்குத் தேவைப்படும் எல்லாச் செய்திகளும் ஒரே இடத்தில், அதுவும் நம்பகமான இடத்தில் இருந்து, தொடர்ச்சியாகக் கிடைத்துக்கொண்டிருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

இந்தக் கனவு நிறைவேற ஆரம்பித்தது ஐரோப்பாவில். இத்தாலியில் 1566-ம் ஆண்டு சுவரொட்டிகள் மூலம் செய்திகளை அறிவிக்கும் முறை அறிமுகப்படுத்தப்பட்டது. என்னென்ன சொல்ல வேண்டுமோ அதை ஒரு பெரிய காகிதத்தில் அச்சடித்து பொதுஇடங்களில் ஒட்டிவிடுவார்கள். கடந்து போகும் அனைவரும் வாசிக்கலாம்.

சில தினங்களில் பழைய சுவரொட்டியைக் கிழித்துவிட்டுப் புதிதாக ஒன்று ஒட்டுவார்கள். ஓ, இன்று புதிய செய்தி வந்திருக்கிறது போலிருக்கிறது என்று மக்களும் மகிழ்ச்சியோடு கூடி நின்று படிப்பார்கள். சில இடங்களில், ஆட்களை நியமித்து, மக்களை வரிசையாக நிற்க வைத்து, கொஞ்சம் காசும் வாங்கிக்கொண்டு செய்திகளைப் படித்துக்கொள்ள அனுமதித்தார்கள்.

இது எல்லோருக்கும் பிடித்துப் போனது. புதிது புதிதாகச் செய்திகள் வந்துகொண்டே இருந்தன. அதைவிட முக்கியம், பக்கத்து ஊர், அதற்கும் பக்கத்து ஊர் என்று ‘வெகு தூரத்தில்’ என்ன நடக்கிறது என்பதையும் தெரிந்துகொள்ள முடிந்தது. அச்சு இயந்திரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகு, மாபெரும் பாய்ச்சல் நடந்தது.

சுவரொட்டிக்குப் பதிலாகக் காகிதத்தில் செய்திகளை அச்சடித்து விற்க ஆரம்பித்தனர். செய்தித்தாள் பிறந்தது இப்படித்தான். இந்தியாவின் முதல் செய்தித்தாளான ‘தி பெங்கால் கெஜெட்’, ஜேம்ஸ் அகஸ்டஸ் ஹிக்கி என்பவரால் 1780-ம் ஆண்டு ஜனவரி 29 அன்று வெளியிடப்பட்டது. இரண்டு பக்கங்களில் ஏராளமான விளம்பரங்களோடு இது வெளிவந்தது.

அதற்குப் பிறகு நடந்தது நமக்குத் தெரியும். ‘ஆமா, இந்த அமெரிக்காவில் ஒரே ஐஸ் மழையாமே!’ என்பதில் தொடங்கி ‘அண்டார்டிகாவில் ஒரு கரடி நேற்று மாலை குட்டி போட்டிருக்கிறதாம், கேள்விப்பட்டீர்களா?’ என்பதுவரை உலகம் முழுக்க எந்த மூலையில், என்ன நடந்தாலும் நமக்கு உடனுக்குடன் தெரிந்துவிடுகிறது.

மன்னர் இன்று இருந்திருந்தால் வீரரை ஒரு வழி செய்திருப்பார். ‘‘வீரா, நான் செய்தித்தாள் படிப்பதில்லை என்று நினைத்து வாயில் வந்ததைப் பிதற்றுகிறாயா? யாரங்கே, இவரை உடனே புலியிடம் கொண்டுசென்று, ஒரு கோப்பை புலிப்பால் காபி தயாரித்துக்கொண்டு வரச் சொல்லுங்கள்!”

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியம்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x