Published : 13 Mar 2019 10:50 AM
Last Updated : 13 Mar 2019 10:50 AM

டிங்குவிடம் கேளுங்கள்: நிறத்தை மாற்ற முடியுமா?

ஒரு திரைப்படத்தில் காட்டியதுபோல், காற்று அடைத்த பலூன்களைப் பிடித்துக்கொண்டு மேலே பறக்க முடியுமா, டிங்கு?

– அ.ரா. அன்புமதி, மைக்கேல் ஜாப் மெட்ரிக். பள்ளி, சூலூர், கோவை.

காற்று அடைத்த சாதாரண பலூன்களைப் பிடித்துக்கொண்டு பறக்க முடியாது, அன்புமதி. ஹீலியம் வாயு நிரப்பப்பட்ட பலூனில் மிக உயரத்துக்குச் செல்ல முடியும். ஆனால், மேலே செல்லச் செல்ல காற்றின் அடர்த்தி குறையும். குளிர் அதிகரிக்கும்.

9,100 மீட்டர் உயரத்தில் ஒரு நிமிடத்தில் நினைவு போய்விடும். உடலுக்குத் தேவையான ஆக்சிஜன் கிடைக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும். தகுந்த பாதுகாப்புக் கவசங்களை அணிந்துகொண்டு, ஆலன் யுஸ்டாஸ் என்பவர் 41 கிலோ மீட்டர் உயரம்வரை சென்று, பத்திரமாகத் திரும்பியிருக்கிறார்.

வண்ண சோப்புகளின் நுரை ஏன் வெள்ளையாக இருக்கிறது, டிங்கு?

– கே. பாண்டீஸ்வரி, 7-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

தண்ணீரில் வண்ண சோப்புகளைத் தேய்க்கும்போது நுரை உண்டாகிறது. இந்த நுரையில் சோப்பைவிட காற்றின் பங்கு அதிகமாக இருக்கிறது. இயற்கையான வெளிச்சம் வெண்மையாக இருப்பதால், அது நுரையில் பிரதிபலிக்கிறது. அதனால்தான் சோப்பு வண்ணமாக இருந்தாலும், நுரை வெண்மையாக இருக்கிறது. ஓர் அறையில் சிவப்பு, பச்சை, மஞ்சள் விளக்கு ஒளிக்குக் கீழ் சோப் நுரையைக் கொண்டு சென்றால், அந்த விளக்கின் ஒளியால் நுரை வண்ணமாகத் தெரியும், பாண்டீஸ்வரி.

மனிதன் எந்த வயதில் அதிகம் கற்றுக்கொள்கிறான், டிங்கு?

– வெ. ஸ்ரீராம், 5-ம் வகுப்பு, சி.ஆர்.ஆர். மெட்ரிக். பள்ளி, ஒண்டிப்புதூர், கோவை.

மனிதன் பிறந்து ஒரு வயதுக்குள் கற்றுக்கொள்வதைப்போல் வாழ்நாளில் வேறு எப்போதும் கற்றுக்கொள்வதில்லை என்கிறார்கள் விஞ்ஞானிகள், ஸ்ரீராம்.

என் பாட்டியைப்போல் கறுப்பாகப் பிறந்திருக்கிறேன். என் அண்ணனும் தங்கையும் சிவப்பாக இருக்கிறார்கள். நாங்கள் குடும்பத்தோடு வெளியே செல்லும்போது, ’உங்களுக்கு எப்படி இப்படி ஒரு குழந்தை?’ என்று என் பெற்றோரிடம் கேட்காதவர்களே இல்லை. அம்மாவும் அப்பாவும் என்னை இதுவரை பாரபட்சமாக நடத்தியதில்லை. ஆனால், எல்லோருமே ஏதோ ஒருவிதத்தில் என் நிறத்தைச் சொல்லிதான் கிண்டல் செய்வார்கள். பொதுவாக இந்தக் கிண்டல்களை நான் பொருட்படுத்துவதில்லை. ஆனாலும் சில நேரம் என்னை இது காயப்படுத்திவிடுகிறது. நானும் ஏதேதோ செய்து பார்த்துவிட்டேன். எதுவும் நிறத்தை மாற்றவில்லை. என் நிறம் மாறுவதற்கு ஏதாவது வழி சொல்ல முடியுமா, டிங்கு?

– யாழினி, 10-ம் வகுப்பு, தர்மபுரி.

கறுப்பு நிறத்தவர்கள் அதிகம் வாழும் நாட்டில்தான் நீங்கள் பிறந்திருக்கிறீர்கள். நமக்கு வெள்ளை நிறத்தின் மீது சமூக மனோபாவம் காரணமாகவோ வியாபார நிறுவனங்கள் மூலமாகவோ அதுதான் உயர்ந்தது என்ற எண்ணம் உண்டாகியிருக்கிறது. இயற்கையான நிறத்தை மாற்றக்கூடிய மருந்துகளோ க்ரீம்களோ இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.

அதனால், நிறத்தை மாற்ற முடியாது; உங்கள் எண்ணத்தைதான் மாற்றிக்கொள்ள வேண்டும், யாழினி. நீங்கள் என்பது உங்கள் நிறம் அல்ல. நிறத்தின் மீது வைக்கும் நம்பிக்கையை உங்கள் திறமை, சிந்தனை, செயல் போன்றவற்றில் வையுங்கள். மிக உயரத்துக்குச் சென்றுவிடுவீர்கள். நீங்கள் சிவப்பாக நினைக்கும் உங்கள் குடும்பத்தினர்கூட, ஐரோப்பிய, அமெரிக்க நாட்டவரைப் பொறுத்தவரை கறுப்பர்களே.

அந்த நாடுகளில் எவ்வளவு இந்தியர்கள் வாழ்ந்துகொண்டிருக்கிறார்கள் தெரியுமா? அவர்கள் எல்லாம் அமெரிக்கரையும் ஐரோப்பியரையும் பார்த்துக் கவலைப்பட்டுக்கொண்டா இருக்கிறார்கள்?

உங்களுக்கு லுபிடா நியோங்கோ பற்றிச் சொல்கிறேன். கென்ய நாட்டைச் சேர்ந்தவர். கென்யர்களின் இயற்கை நிறம் வசீகரிக்கும் அடர் கறுப்பு. ஆனால், அவர் உங்கள் வயதில் தினமும் கடவுளிடம் தன் நிறத்தை மாற்றிவிடும்படி மனம் உருகப் பிரார்த்தனை செய்வார். அதிகாலை எழுந்து நம்பிக்கையோடு கண்ணாடி முன் நிற்பார்.

நிறம் மாறாதது கண்டு மனம் உடைவார். அவரது அம்மாதான் லுபிடாவிடம், “கண்ணே, நாம் ஆப்பிரிக்கர்கள். நம் அடையாளமே இந்த அடர் கறுப்புதான். இதை நினைத்து நாம் தாழ்வு மனப்பான்மைகொள்ளத் தேவை இல்லை. எந்த நிறமாக இருந்தாலும் எந்தத் துறையிலும் உன் திறமையால் சாதிக்க முடியும்” என்று சொன்னார்.

தன்னுடைய தாழ்வு மனப்பான்மையை மாற்றிக்கொண்ட லுபிடா, இன்று ஹாலிவுட் திரைப்பட நடிகையாக இருக்கிறார். முதல் படத்திலேயே ஆஸ்கர் விருதை வென்றிருக்கிறார். உலகப் புகழ்பெற்ற ஃபேஷன் இதழ்களின் அட்டைகளை அலங்கரித்துக்கொண்டிருக்கிறார். பல்வேறு சமூக சேவைகளில் ஈடுபட்டுவருகிறார். மக்களால் உலகின் சிறந்த அழகியாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்.

இப்போது சொல்லுங்கள் யாழினி, நீங்கள் என்பது உங்கள் நிறமா? உங்களிடம் பாரபட்சம் காட்டாத நல்ல பெற்றோரிடம், நிறம் குறித்து கிண்டல் செய்வது என்னைக் கஷ்டப்படுத்துக்கிறது என்று சொல்லிவிடுங்கள். அதுக்குப் பிறகு உங்களை யாரும் கிண்டல் செய்ய மாட்டார்கள். வேறு யாராவது ஏதாவது சொன்னால், ‘ஆமாம், கறுப்புதான். அதனால் என்ன? இது இந்த மண்ணின் நிறம். உழைப்பின் நிறம்’ என்று கம்பீரமாகச் சொல்லுங்கள், யாழினி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x