Published : 13 Mar 2019 10:27 AM
Last Updated : 13 Mar 2019 10:27 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 23: வானில் பறக்கும் விண் தந்த தனிமம்

பிப்பெட்: பொதுத் தேர்வெல்லாம் பரபரப்பா போயிக்கிட்டு இருக்கு பியூ.

பியூரெட்: ஆமா, உனக்கு எப்போ பரீட்சை?

பிப்.: நமக்கு இன்னும் பொதுத் தேர்வு எழுதுற வயசெல்லாம் வரலப்பா.

பியூ.: நான் அடுத்த வருசம் எழுதியாகணும். இந்தா நீ பரீட்சை எழுதுறதுக்கு, உனக்கு ஒரு புது மை பேனா.

பிப்.: ஹை! ரொம்ப நல்லா இருக்கே.

பியூ.: இப்பல்லாம் யாரு மை பேனால எழுதுறா? எல்லாம் பால்பாயின்ட்தான்.

பிப்.: ஆனாலும் மை பேனால எழுதுறது தனி அழகுதான்.

பியூ.: உண்மைதான், இந்த பார்க்கர் ஃபவுன்டென் பேனாவைப் பார்த்திருக்கியா?

பிப்.: அதெல்லாம் நம்மால வாங்க முடியுமா? யாராவது பரிசு தந்தா உண்டு.

பியூ.: அந்தப் பேனாவின் ‘நிப்' ரொம்ப விசேஷம். முன்னாடி இந்த ‘நிப்’பை இரிடியம் தனிமத்தைச் சேர்த்துத் தயாரிச்சாங்க. ஆனா இன்னைக்கு இரிடியம் சேர்க்கிறது இல்ல.

பிப்.: அப்ப எதை வெச்சுத் தயாரிக்கறாங்க?

பியூ.: ரூதேனியம், ஆஸ்மியம், டங்க்ஸ்டன் தனிமங்களை வெச்சு.

பிப்.: நாம இன்னைக்கு எந்தத் தனிமத்தைப் பத்திப் பேசப் போறோம்?

பியூ.: சொல்றேன். நைட்ரிக் அமிலமும் ஹைட்ரோகுளோரிக் அமிலமும் கலந்த ‘ராஜ திராவகம்’ எதையும் கரைச்சிடும்னு சொல்வாங்க.

பிப்.: நானும் கேள்விப்பட்டிருக்கேன்.

பியூ.: ஆங்கிலேய விஞ்ஞானி ஸ்மித்சன் டென்னன்ட் பொ.ஆ. 1803-ல் பிளாட்டினத்தை ராஜ திராவகத்துல கரைச்சார்.

பிப்.: அப்புறம் என்ன ஆச்சு?

பியூ.: அடர் நிற திரவம் கிடைச்சது. ராஜ திராவகத்திலேயே கரையாத சில எச்சங்களும் இருந்துச்சு.

பிப்.: அது என்ன?

பியூ.: அந்த எச்சத்துல ரெண்டு வேதிப்பொருட்கள் இருக்கிறத டென்னன்ட் கண்டறிஞ்சார். அந்த ரெண்டும்தான் ஆஸ்மியமும் இரிடியமும்.

பிப்.: இரிடியம்னு எதுக்கு அதுக்குப் பேரு வெச்சாரு?

பியூ.: கிரேக்கப் புராணப்படி வானவில்லுக்கான கடவுள் ஐரிஸ். இரிடியத்தின் உப்புகள் பிரகாசமான, பல்வேறுபட்ட நிறங்களோட இருந்துச்சு. ரெண்டுமே ஒத்துப்போனதால இரிடியம்னு அவர் பேரு வெச்சிட்டார்.

பிப்.: ம், சுவாரசியம்தான்.

பியூ.: இரிடியம் பல்வேறு ஆச்சரியங்களையும் சுவாரசியங்களையும் கொண்டது. ‘அனைத்துலக எடை, அளவீடுகளுக்கான அமைப்பு’ கிலோ கிராம் எடையைத் தீர்மானிப்பதற்கு 90 சதவீத பிளாட்டினம், 10 சதவீத இரிடியத்தைக் கலந்து பொ.ஆ. 1889-ல ஒரு எடைக்கல்லைத் தயாரிச்சு பாரிஸ்ல வெச்சது. அதுதான் கிலோகிராமுக்கான தரப்படுத்தப்பட்ட எடையா போன வருசம் வரைக்கும் இருந்துச்சு.

பிப்.: இரிடியத்தைப் பயன்படுத்த ஏதாவது சிறப்புக் காரணம் இருக்கா?

பியூ.: அது துருவே பிடிக்காது. 2000 டிகிரி செல்சியஸ்ல வெப்பப்படுத்தினாலும் இந்தத் தன்மையை இரிடியம் இழக்கிறதில்லை.

பிப்.: ஓ! இந்த ரெண்டும் ரொம்ப முக்கியமாச்சே.

பியூ.: இரு, இரு. அதோட உருகுநிலையும் அதிகம், உறுதித்தன்மையும் அதிகம். விமான ஸ்பார்க் பிளக் தயாரிப்புல இரிடியம் பயன்படுது.

பிப்.: அது என்ன ஸ்பார்க் பிளக்?

பியூ.: இருசக்கர வண்டி இன்ஜின் உருவாக்குற ஆற்றல் மின்சாரமா மாறி, வண்டியை இயக்க வைக்க உதவுற தொடர்புக் கண்ணிதான் ஸ்பார்க் பிளக்.

பிப்.: ம், இப்பப் புரியுது.

பியூ.: ஸ்பார்க் பிளக் மட்டுமில்ல, நீண்ட காலம் பயன்படுத்தக்கூடிய விமான இன்ஜின் பாகங்கள் இரிடியம் கலப்பு உலோகத்தாலதான் தயாரிக்கப்படுது.

பிப்.: இந்தப் பறக்கும் உலோகத்தோட பெருமைகள் முடிஞ்சிடுச்சா, இன்னும் இருக்கா?

பியூ.: இருக்கே. வாயேஜர், வைகிங், பயனீர், காசினி, கலிலியோ, நியூ ஹாரிசான்ஸ் போன்ற அமெரிக்காவின் ஆளற்ற விண்கலன்கள்ல பயன்படுத்தப்பட்ட ரோடியோஐசோடோப்பு தெர்மோஎலெக்டிரிக் ஜெனரேட்டர்கள்லயும் இரிடியம் பயன்பட்டிருக்கு.

பிப்.: ஆமா, இத்தனை பறக்குற விஷயங்கள்ல பயன்படுதே, ரொம்ப விலை அதிகமான தனிமமோ?

பியூ.: அப்புறம், பிளாட்டினம் குழுவைச் சேர்ந்ததாச்சே.

பிப்.: பிளாட்டினம் விண்கல்லுல இருந்து பூமிக்கு வந்ததா, எங்கோ படிச்ச ஞாபகம் இருக்கு.

பியூ.: நல்லாதான் ஞாபகம் வச்சிருக்க. இரிடியமும் அப்படி பூமிக்கு வந்ததுதான். 6 கோடி வருசத்துக்கு முன்னால டைனோசர் எல்லாம் பூண்டோடு அழிஞ்சு போனதுக்குப் புவி மேல மாபெரும் விண்கல் மோதினதுதான் காரணம்னு சொல்றாங்கல்ல...

பிப்.: ஆமா.

பியூ.: பூமியின் மேலோட்டுல உள்ள ஒரு வகை களிமண் அடுக்குல, மற்ற அடுக்குகளைவிட அதிகமாக இரிடியம் இருக்கு. அதுக்குக் காரணம் விண்கல் மோதல்தான். டைனோசர் அழிவுக்கும் இந்த விண்கல் மோதலுக்கும் இரிடியம்தான் முடிச்சுப் போட்டுச்சு.

பிப்.: விண்கல், விண்கலம், விமானம்னு பறக்குற விஷயங்களுக்கும் இரிடியத்துக்கும் ஏதோ நெருக்கமான தொடர்பு இருக்கு, பியூ.

பியூ.: நீ சொல்றதும் சரிதான் பிப்.

 

chemistry-2jpgright

இந்த வாரத் தனிமம் - இரிடியம்

குறியீடு: Ir

அணு எண்: 77

மிகவும் கடினமான, அதேநேரம் எளிதில் உடையக்கூடிய, மஞ்சள் தோய்ந்த வெள்ளி நிற உலோகம். ஆஸ்மியத்துக்கு அடுத்தபடியாக மிகவும் அடர்த்தியான உலோகம்.

அரிய உலோகமான இது பூமியின் மேலோட்டில் அதிகமில்லை என்றாலும், விண்கற்களில் குறிப்பிடத்தக்க அளவு உள்ளது. முக்கிய இரிடியம் சேர்மங்கள் குளோரின் உப்புகளாகவோ அமிலங்களாகவோ பயன்படுத்தப்படுகின்றன. இதன் கலப்பு உலோகங்களும் அதிகப் பயன்பாட்டில் உள்ளன.

கணினி நினைவுச் சில்லுகள், திடநிலை லேசர்களில் பயன்படுத்தப்படும் படிகங்களை உருவாக்குவதற்குத் தேவையான கடும் வெப்பத்தைத் தாங்கும் உருக்குக் கலங்கள் தயாரிப்பில் இரிடியம் பயன்படுகிறது.

நீருக்கு அடியில் துருப்பிடிக்காமல் இருப்பதற்கான குழாய்கள் இரிடியம்-டைட்டானியம் கலப்பு உலோகத்தால் தயாரிக்கப்படுகின்றன.

புற்றுநோய் சிகிச்சை முறைகளில் ஒன்றான பிராக்கிதெரபி சிகிச்சையில் காமா கதிர்களை உருவாக்க இரிடியம் 192 ஐசோடோப்பு பயன்படுகிறது.

 

கட்டுரையாளர் தொடர்புக்கு: valliappan.k@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x