Published : 06 Mar 2019 10:26 AM
Last Updated : 06 Mar 2019 10:26 AM

கதை: இரு சகோதரர்கள்

ஓர் ஊரில் கதிரவன், சந்திரன் என்ற இரு சகோதரர்கள் வாழ்ந்து வந்தார்கள். இருவரும் ஒருவரை மற்றொருவர் நேசித்தார்கள். கதிரவன் வலதுகைப் பழக்கம் கொண்டவன். சந்திரன் இடதுகைப் பழக்கம் கொண்டவன். இருவரும் சிலநேரம் ஒருவரது கைப் பயன்பாட்டை மற்றொருவர் கேலி செய்வது உண்டு.

அதனால் கருத்து வேறுபாடும் ஏற்படும். வலதுகையைப் பயன்படுத்துவதுதான் சரியானது என்று கதிரவனும் இடதுகையைப் பயன்படுத்துவதுதான் சரியானது என்று சந்திரனும் வாக்குவாதமும் செய்வது உண்டு. சிலநேரம் அது மோதலிலும் முடியும்.

ஆனால், சண்டைச்சச்சரவு எல்லாம் கொஞ்ச நேரம்தான். பிறகு இருவரும் சேர்ந்து விளையாடவும் சிரித்துப் பேசவும் தொடங்கி விடுவார்கள்.

கதிரவனும் சந்திரனும் வளர்ந்து பெரியவர்களானபின், இருவரும் தாங்கள் வாழ்ந்த பகுதியின் தலைவர்கள் ஆனார்கள். இருவர் இடையேயும் அவ்வப்போது வாக்குவாதமும் சிறு சச்சரவுகளும் ஏற்படுவது உண்டு. அப்படிச் சண்டையிடும் போது வலதுகைப் பழக்கம் கொண்டவர்கள் கதிரவனுடனும், இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள் சந்திரனுடனும் சேர்ந்துகொள்வது வழக்கம். ஆனாலும்கூட, இருவரும் ஒருவரை மற்றொருவர் வெறுக்கவில்லை.

ஒருநாள் இருவரும் சிறு கைகலப்பில் இறங்கிவிட்டார்கள். சண்டை ஓயவில்லை. அப்போது மத்தியஸ்தம் செய்வதுபோல  ‘திமுதிமு’ என்ற பெயர் கொண்ட ஒருவர் அங்கே வந்தார். “நீங்கள் ஏன் எப்போது பார்த்தாலும் சண்டையிட்டுக்கொண்டே இருக்கிறீர்கள். நீங்கள் பிரிந்து வாழ்வதுதான் நல்லது” என்று மிகுந்த அக்கறை கொண்டவனைப்போலப் பேசினார். இரண்டு சகோதரர்களும் அவனுடைய பேச்சைக் கேட்டுத் தாங்கள் வாழ்ந்த பகுதியை இரண்டாகப் பிரித்து, இடையில் ஒரு தடுப்புச் சுவரையும் எழுப்பினார்கள்.

இருவரும் தனித்தனியாக வாழத் தொடங்கினார்கள். கதிரவன் வாழ்ந்த பகுதி பழையூர், சந்திரன் வாழ்ந்த பகுதி புதூர். பழையூரில் வலதுகைப் பழக்கம் கொண்டவர்களும், புதூரில் இடதுகைப் பழக்கம் கொண்டவர்களும் வாழ்ந்தார்கள். ஆனால், குழந்தைகளில் வலதுகை, இடதுகைப் பழக்கம் கொண்டவர்கள் இரு பக்கங்களிலுமே புதிதாகப் பிறந்ததுதான் இதில் சுவாரஸ்யமான அம்சம்.

சகோதரர்களைப் பிரிந்து வாழச்சொன்ன திமுதிமு, கதிரவனிடம் தனியாகச் சென்று, “உன் பாதுகாப்புக்காக வலது கையால் அடிக்கும் உண்டிவில் ஒன்றைத் தருகிறேன்” என்று பெரும் காசு வாங்கிக்கொண்டு விற்றார். பிறகு நேராகச் சந்திரனிடம் போய், “உன் பாதுகாப்புக்காக இடது கையால் அடிக்கும் உண்டிவில்லைத் தருகிறேன்” என்று அவரிடமும் அநியாய விலைக்கு விற்றார்.

உண்டிவில்லில் வலதுகையால் பயன்படுத்துவது, இடதுகையால் பயன்படுத்துவது என்று எந்த வேறுபாடும் கிடையாது. அதில் இரண்டுவகை இருப்பதாகக் கூறி திமுதிமு விற்றது, ஏமாற்று வேலை.

ஆனால், இதெல்லாம் சகோதரர்களுக்குப் புரியவில்லை. கையில் புதிதாகச் சிறு ஆயுதம் கிடைத்தவுடன் சகோதரர்கள் இருவரும் தடுப்புச் சுவருக்கு அருகேவந்து, தங்கள் கையில் இருந்த உண்டிவில்லை, பெருமையுடன் காட்டிக் கொண்டார்கள்.

இப்போது ‘குபுகுபு’ என்று இன்னொரு வியாபாரி வந்தார். இந்தச் சின்ன உண்டிவில்லை வைத்து குருவியைக்கூட அடிக்க முடியாது, சந்திரன் வாழும் பகுதியில் உள்ள வீடுகளைத் தாக்கும் உண்டிவில்லை உனக்குத் தருகிறேன் என்று மரம் அளவுக்கு உயரமாக இருந்த உண்டிவில்லை, கதிரவனிடம் அவர் விற்றார்.

இதைப் பார்த்து, நாம் பின்தங்கிவிட்டோமே என்று வருத்தப்பட்ட சந்திரன் திமுதிமுவிடம் சென்று, தான் என்ன செய்வது என்று கேட்டார். “கவலைப்படாதே, வீடுகளைத் தாக்கும் உண்டிவில்லை வைத்திருப்பது ஒன்றும் பெரிய விஷயமில்லை. உனக்கு நான் பீரங்கி தருகிறேன். அதில் குண்டை வைத்து வெடித்தால், கதிரவன் வாழும் பகுதியில் பெருமளவு சேதமடையும். ஆனால், செலவு அதிகமாகும்” என்றார். சந்திரன் யோசிக்காமல் அதை வாங்கினார்.

அந்தப் பீரங்கியைத் தடுப்புச் சுவருக்கு அருகே நிறுத்தி, “உண்டிவில்லை வைத்து நீ என்ன செய்யமுடியும்? இப்போது என்னிடம் பீரங்கியே இருக்கிறது” என்று கதிரவனுக்குக் கேட்கும்படி சந்திரன் கத்தினார்.

இப்போது குபுகுபுவிடம் போய் என்ன செய்வது என்று கதிரவன் கேட்டார். “சந்திரன் வைத்திருப்பதை விடப் பெரிய பீரங்கியைத் தருகிறேன். விலைதான் சற்று அதிகம் என்றார்” குபுகுபு. பரவாயில்லை என்று வாங்கி, அதைத் தடுப்புச் சுவருக்குப் பக்கத்தில் நிறுத்தினார் கதிரவன்.

சகோதரர்கள் இருவரும் வேறு வேறு கையால் வேலைகளைச் செய்தாலும், ஒரு காலத்தில் ஒருவரை மற்றொருவர் வெறுக்காமல் இருந்தார்கள், உளமாற நேசித்தார்கள். ஆனால், இப்போது வெறுப்பு மேலிட இருவரும் மாறிமாறிப் பெரிய பெரிய ஆயுதங்களை வாங்கிக் குவித்திருக்கிறார்கள். தடுப்புச் சுவரின் இரண்டு பக்கங்களிலும் பீரங்கிகள், துப்பாக்கிகள் பெருமளவு நிறுத்தப்பட்டன. இருபுறமும் ராணுவ வீரர்கள் காவல் காத்தனர்.

கதிரவன், சந்திரன் வாழ்ந்த பகுதிகளில் ஆயுதங்களுக்கான செலவு அதிகமானது. இதனால் இருவருமே பணத்தை இழந்து ஏழை ஆனார்கள். இவர்களிடம் ஆயுதம் விற்றுக் கொள்ளை லாபம் சம்பாதித்த திமுதிமுவும் குபுகுபுவும் பணக்காரர் ஆனார்கள்.

இதற்கிடையில் ஒருநாள் பழையூர், புதூரைப் பிரித்த தடுப்புச் சுவரின் ஒரு பகுதியில் சுவர் விரிசல்விட்டு, ஆட்கள் போய் வரும் அளவுக்கு ஓட்டை உருவாகியிருந்தது. பெரியவர்கள் கண்காணிக்காத நேரத்தில் அந்த வழிமூலம் அடுத்த பகுதிக்குச் சென்று குழந்தைகள் விளையாடிக் களித்தார்கள்.

ஆனால், இருபகுதிகளையும் சேர்ந்த பெரியவர்களோ திமுதிமு, குபுகுபுவிடம் போய் அடுத்த பகுதியை அழிக்கக்கூடிய வலுவான வெடிபொருட்கள், ஆயுதங்களை வாங்கினார்கள், தாங்களும் உற்பத்தி செய்யக் கற்றுக் கொண்டார்கள். ஆயுதங்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது? இருதரப்பினரும் போர்ப் பிரகடனம் செய்தார்கள். ஒருவர் மற்றொருவரை முற்றிலும் அழித்து விடுவோம் என்று தங்கள் நாட்டு மக்களிடம் வீராவேசமாகப் பேசினார்கள்.

பெரியவர்களின் இந்தச் செயல்பாடுகள் குழந்தைகளுக்குத் தெரியாது. ஏனென்றால், நடப்பது அவர்களுக்குப் புரியவில்லை. மாலை நேரத்தில் இரண்டு ஊர் குழந்தைகளும் வழக்கம் போல் தடுப்புச் சுவரில் உள்ள ஒட்டை வழியே சென்று விளையாடி மகிழ்ந்து கொண்டிருந்தார்கள்.

கொஞ்ச காலத்தில் பெரியவர்களின் செயல்பாடுகள் குழந்தைகளுக்குக் குழப்பத்தை ஏற்படுத்தின. ஒரு நாடு மற்றொரு நாட்டை அழித்தால், நாம் அனைவரும் அழிந்துவிடுவோம் என்று சற்றே வளர்ந்த சிறுமி ஒருத்தி மற்ற குழந்தைகளிடம் தெரிவித்தாள். “ஆமாம், நாமெல்லாம் இனி வாழ்வது கஷ்டம்தான். நான்கு நாட்களாக நான் ஒரு வாய்கூடச் சாப்பிடவில்லை” என்று சிறுவன் ஒருவன் சொன்னான்.

இப்படிக் குழந்தைகள் ஒன்றாகச் சேர்ந்து விளையாடுவதையும் பேசிக்கொண்டிருப்பதையும் கதிரவனும் சந்திரனும் தங்கள் வீட்டு ஜன்னல் வழியாகப் பார்க்க நேரிட்டது. சேர்ந்து விளையாடிய குழந்தைகளைப் பிடிக்க சில ராணுவ வீரர்கள் அப்போது ஓடினார்கள். கதிரவனும் சந்திரனும் ராணுவ வீரர்களைத் தடுத்து நிறுத்தினார்கள். தடுப்புச் சுவரின் உடைந்த பகுதி அருகே வந்து சகோதரர்கள் இருவரும் ஒருவரை மற்றொருவர் பார்த்தார்கள்.

பல ஆண்டுகளுக்குப் பிறகு இருவரும் முதன்முறையாக அன்றுதான் நேருக்கு நேராகப் பார்த்துக்கொள்கிறார்கள். இருவரும் ஒன்றாகப் பேசிச் சிரித்து, விளையாடி, வளர்ந்து, ஒருவரை ஒருவர் நேசித்த காலம் அப்போது அவர்களுக்கு நினைவுக்கு வந்தது. அதற்கு நேர்மாறாக எங்கெங்கும் வெறுப்பு பரவியுள்ள இன்றைய நிலையும் அவர்கள் மனதில் நிழலாடியது.

சகோதரர்களாக நேசித்து வாழ்ந்த நாம் இன்றைக்கு இப்படி சண்டைக்காரர்களாக மாறிவிட்டோமே. இது எவ்வளவு பெரிய தவறு என்று தோன்றியது. நிதர்சனத்தை உணர்ந்து இருவரும் ஒருவர் மற்றொருவரைத் தழுவிக்கொண்டார்கள்.

“இருவரிடையே தோன்றிய பெரும் வெறுப்புக்கு ஆயுதங்களே முதல் காரணம். அந்த ஆயுதங்களை அழித்துவிடுவோம்” என்றார் கதிரவன். “தடுப்புச் சுவரை உடைத்துவிடுவோம். முன்பு நாம் சேர்ந்து வாழ்ந்ததுபோல அமைதியாக, மகிழ்ச்சியாக வாழ்வோம்.” என்றார் சந்திரன்.

இதைக் கண்ட குழந்தைகளுக்குத் தாங்கள் பார்ப்பதையும் கேட்பதையும் நம்ப முடியவில்லை. எல்லாக் குழந்தைகளும் மகிழ்ச்சியில் சத்தமாகச் சிரிக்கத் தொடங்கினார்கள். குழந்தைகளோடு சேர்ந்து பெரியவர்களும் சிரித்தார்கள். குழந்தைகள் கைகளைக் கோத்துக்கொண்டு ஆடிப் பாடத் தொடங்கினார்கள். பெரியவர்களும் அவர்களோடு சேர்ந்து ஆடிப் பாடினார்கள். வெறுப்பு காணாமல் மறைந்து போனது, அன்பு மலர்ந்து சிரித்தது.

- டி .பி. சென்குப்தா, தமிழில்: சு.கி. ஜெயகரன்
கதைச் சுருக்கம்: நேயா | நன்றி: சர்வோதய இலக்கியப் பண்ணை, மதுரை-1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x