Last Updated : 27 Feb, 2019 01:48 PM

 

Published : 27 Feb 2019 01:48 PM
Last Updated : 27 Feb 2019 01:48 PM

திறந்திடு சீஸேம் 22: ஜேக்கப் வைரத்தின் கதை!

ஒரு நாள் ஹைதராபாத்தின் சௌமஹல்லா அரண்மனையில் நிஜாம் உஸ்மான் அலிகான் சாவகாசமாக உலாவிக்கொண்டிருந்தார். அங்கே ஓர் அறையில் ஒரு ஜோடி செருப்பு கிடந்தது. அவை உஸ்மானின் தந்தையும், முன்னாள் நிஜாமுமான மெஹபூப் அலிகானின் பழைய செருப்புகள். இருக்கட்டுமே, தன் காலுக்குப் பொருந்தினால், தூசி தட்டிப் போட்டுக்கொள்ளலாமே என்று உஸ்மான் நினைத்தார். ஆம், பெரிய சமஸ்தானத்தின் நிஜாம் என்றாலும் மிகப்பெரிய கஞ்சர் அவர். ஒரு செருப்புக்குள் காலை நுழைத்தார். ஏதோ தட்டுப்பட்டது. என்னவென்று எடுத்துப் பார்த்தபோது அது ஒரு கல் என்று தெரிந்தது.

சாதாரணக் கல் அல்ல. உலகின் பெரிய வைரங்களில் ஒன்று. அதன் பெயர் ஜேக்கப் வைரம். எடை 184.5 காரட், அதாவது 36.9 கிராம். அதன் வரலாறு, ஆப்பிரிக்கக் கண்டத்தில் தொடங்குகிறது. அங்கே ஒரு சுரங்கத்தில் சுமார் 400 காரட் எடையில் அது கண்டெடுக்கப்பட்டது. பின் ஐரோப்பியக் கண்டத்துக்கு அனுப்பப்பட்டது. அங்கே பட்டைத் தீட்டப்பட்டது.

1891 கோடைக்காலம். ஹைதராபாத்தின் சௌமஹல்லா அரண்மனைக்கு வந்தார் அந்தத் துருக்கி நகை வியாபாரி. அவர் பெயர், அலெக்ஸாண்டர் மால்கன் ஜேக்கப். அப்போதைய ஹைதராபாத் நிஜாம் மெஹபூப் அலிகானுக்கு நகைகள் வாங்கிக் கொடுக்கும் ஏஜெண்டாகப் பணியாற்றினார். அன்றைக்கு அங்கே வந்த ஜேக்கப், தன் பாக்கெட்டிலிருந்து அந்த வைரக்கல்லை எடுத்து நிஜாமிடம் நீட்டினார்.

‘‘நிஜாம், இது மாதிரிக் கல்தான். உண்மையான வைரம் இங்கிலாந்தில் இருக்கிறது. தாங்கள் சரி என்று சொல்லிவிட்டால் வரவழைத்துவிடலாம். விலை ரூ.46 லட்சம்’’ என்றார். ‘‘முதலில் அசல் வைரக்கல்லை வரவழையுங்கள். பார்த்துவிட்டு, திருப்தியாக இருந்தால் பணம் கொடுக்கிறேன்’’ என்றார் நிஜாம்.

‘‘வியாபாரி இங்கிலாந்தில் இருக்கிறார். எனவே தொகையில் பாதியை நீங்கள் கட்டிவிட்டால், வைரக்கல்லை வரவழைப்பதில் பிரச்சினை இருக்காது” என்று ஜேக்கப் சொல்ல, மெஹபூப் அதற்குச் சம்மதித்தார். ஜேக்கப் அங்கிருந்து கிளம்பியதும், நிஜாமின் உதவியாளர் டெனிஸ் பிட்ஸ்பேட்ரிக் பேச ஆரம்பித்தார்.

‘‘நிஜாம், ஏற்கெனவே நம் கஜானாவில் நகைகள் குவிந்து கிடக்கின்றன. உலகிலேயே நீங்கள்தான் அதிக வைரக்கற்களை வைத்திருக்கிறீர்கள். எதற்காக மேலும் ஒன்றை அநாவசியமாக வாங்க வேண்டும்?” என்று அவர் கேட்க, சிறிது யோசித்த நிஜாம், ‘‘நீ சொல்வதும் சரிதான்” என்றபடி நகர்ந்தார்.

சில மாதங்கள் ஓடின. ஜேக்கப், நிஜாமின் வார்த்தைகளை நம்பி வைரக்கல்லை வரவழைத்திருந்தார். அதற்காகத் தன்னுடைய பணத்திலிருந்து ரூ. 23 லட்சத்தை இங்கிலாந்து வியாபாரியின் கணக்கில் கட்டியிருந்தார். மீண்டும் சௌமஹல்லா அரண்மனைக்குச் சென்று நிஜாம் மெஹபூபிடம் அசல் வைரக்கல்லை நீட்டினார். ஆர்வமே இல்லாமல் அதை வாங்கிப் பார்த்த அவர், ‘‘என்ன இது?’’ என்று கேட்டார்.

‘‘நிஜாம், சில மாதங்களுக்கு முன் காண்பித்தேனே. இது அசல் வைரக்கல்’’ என்று ஜேக்கப் விளக்கம் கொடுக்க, மெஹபூப் உதட்டைப் பிதுக்கினார். ‘‘இது, நீ காட்டிய மாதிரி வைரக்கல்லின் வடிவத்திலேயே இல்லையே. எனக்கு வேண்டாம்’’ என்று சுருக்கமாக முடித்துக்கொண்டார். ஜேக்கப் அதிர்ச்சியாகி நின்றார். நிஜாமிடம் அதற்கு மேல் பேச முடியவில்லை.

ஜேக்கப் வேறு வழியில்லாமல் இங்கிலாந்து வியாபாரியிடம் வைரத்தைத் திருப்பி அனுப்புவதாகவும், தன்னுடைய பணத்தைத் திரும்பத் தரும்படியும் கேட்டுக்கொண்டார். இங்கிலாந்து வியாபாரி ஒப்புக்கொள்ளவில்லை. ஜேக்கப், தன்னை ஏமாற்ற நினைப்பதாகப் புகார் கொடுத்துவிட்டார்.

1891, செப்டம்பர் 11 அன்று ஜேக்கப் கைது செய்யப்பட்டார். அவர்மீது மோசடி வழக்குகள் பதிவு செய்யப்பட்டன. அந்த வைரம் பறிமுதல் செய்யப்பட்டு, கல்கத்தாவிலுள்ள ஒரு வங்கியில் பாதுகாப்பாக வைக்கப்பட்டது. வழக்கு கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. நிஜாம் மெஹ்பூப் அலிகானும் விசாரணையில் ஒரு சாட்சியாக, கல்கத்தா வரவேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

நிஜாம், தனக்குப் பதிலாக தன் உதவியாளர் டெனிஸைக் கல்கத்தாவுக்கு அனுப்பினார். ‘‘மதிப்புக்குரிய நிஜாமின் வாக்குமூலம் வேண்டுமென்றால் ஹைதராபாத்துக்கு வந்து கேட்டுக்கொள்ளுங்கள்” என்று டெனிஸ் நீதிமன்றத்தில் கூறினார். அதன்படியே ஒரு சிறப்புக்குழு அமைக்கப்பட்டது. அவர்கள் ஹைதராபாத்துக்கே சென்று நிஜாமிடம் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுக்கொண்டனர். பின்பு வழக்கு மீண்டும் கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. பலர் விசாரிக்கப்பட்டனர். ஜேக்கப்பும் விசாரிக்கப்பட்டார்.

ஜேக்கப்பின் வக்கீல் திறமையாக வாதம்செய்து, எப்படியோ அவருக்கு விடுதலை பெற்றுத் தந்தார். ஆனால், வைரத்துக்கு அவர் செலுத்திய பாதிப் பணத்தை நிஜாமிடருந்து வசூலித்துத் தர முடியவில்லை. ஹைதராபாத்திலேயே ஊர்ப் பெரியவர்களை அழைத்து, பஞ்சாயத்து ஒன்றைக் கூட்டினார் நிஜாம். அதில் ஜேக்கப்பின் நீதிமன்றச் செலவுகளை மட்டும் நிஜாம் ஏற்றுக்கொள்வதாக அறிவிக்கப்பட்டது. வைரம்? அது நிஜாம் மெஹபூபுக்கே சொந்தம் என்று தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.

எப்படி? வைரத்தின் விலையில் பாதியான ரூ. 23 லட்சத்தை, நிஜாம் அந்த இங்கிலாந்து வியாபாரிக்குச் செலுத்தினார். வியாபாரியின் கைக்கு முழுப்பணம் சென்றுவிட்டதல்லவா! எனவே, வைரம் நிஜாமிடம் ஒப்படைக்கப்பட்டது.

ரூ. 23 லட்சம் நஷ்டத்தைக் கண்ட ஜேக்கப், அதற்குப் பிறகு வணிகம் செய்யவே இயலவில்லை. முற்றிலும் நொடித்து போனார். ஆனால், வரலாற்றில் அந்த வைரத்துக்கு ‘ஜேக்கப்’ என்ற பெயர்தான் சூட்டப்பட்டுள்ளது.

ஜேக்கப் வைரத்தைக் கையில் வாங்கிய நிஜாமுக்கு மனம் உறுத்தியது. தன் மீது வழக்குத் தொடுக்க வைத்த அந்த வைரம் ராசியற்றது என்று கருதிய அவர், இறுதிவரை தன் கஜானாவில் சேர்க்கவே இல்லை. பழைய துணியில் சுற்றி, அழுக்கடைந்த மேசை ஒன்றில் போட்டு வைத்தார். பிறகு கண்டுகொள்ளவே இல்லை.

அது எப்படி மெஹபூபின் செருப்புக்குள் சென்றது என்பதும் தெரியவில்லை. நிஜாம் உஸ்மான் செருப்பிலிருந்து எடுத்ததால், அதை வைரம் என்றே நினைக்கவில்லை. ஏதோ சாதாரணக் கல் என்று கருதி, தன் காலம் முழுக்க டேபிள் வெயிட்டாகத்தான் பயன்படுத்தினார்.

உலகின் பெரிய வைரங்களில் ஒன்றான ஜேக்கப் வைரத்தின் இன்றைய மதிப்பு ரூ. 400 கோடிக்கும் மேல். இப்போது இந்திய அரசின் வசம் உள்ளது.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x