Published : 27 Feb 2019 11:06 AM
Last Updated : 27 Feb 2019 11:06 AM

டிங்குவிடம் கேளுங்கள்: ‘பேய்’ கடற்கரை!

குஜராத் டுமாஸ் கடற்கரை மணல் மட்டும் ஏன் கறுப்பாக இருக்கிறது? பேய்கள் நடமாட்டம் அங்கு அதிகம் இருப்பதாகச் சொல்கிறார்களே உண்மையா, டிங்கு?

– எஸ். விஷால், 5-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

இந்தியாவில் உள்ள புகழ்பெற்ற கடற்கரைகளில் டுமாஸும் ஒன்று. இங்குள்ள மணலில் இரும்புத்தாது அதிக அளவில் இருப்பதால், கடற்கரை மணலும் கரைக்கு அருகில் இருக்கும் கடல் நீரும் கறுப்பாகக் காட்சியளிக்கின்றன. இந்தக் கடற்கரை ஒரு காலத்தில் இறந்தவர்களைப் புதைக்கவும் எரிக்கவும் கூடிய இடமாக இருந்திருக்கிறது என்பது உண்மை.

ஆனால், பேய்கள் நடமாட்டம் இருக்கிறது, விநோதமான குரல்கள் கேட்கின்றன, இரவில் கடற்கரைக்கு வரும் மனிதர்கள் மாயமாகியிருக்கிறார்கள், இந்தியாவிலேயே மிகவும் அமானுஷ்யமான மூன்றாவது கடற்கரை என்று சொல்வதில் எல்லாம் உண்மை இல்லை, விஷால். ]

நம் ஊர்களில் சொல்வதுபோல டுமாஸ் கடற்கரைக்கு அருகில் வசிக்கும் மக்கள் பேய் இருப்பதாக நம்புகிறார்கள், கதைகளைச் சொல்கிறார்கள். மற்றபடி யாரும் நேரில் பார்த்ததில்லை. யார் யாரெல்லாம் காணாமல் போயிருக்கிறார்கள் என்ற கேள்விக்கும் அவர்களால் பதில் அளிக்க முடியவில்லை. அந்தப் பகுதியில் பல ஆண்டுகளாக வசிக்கும் சிலர் பேய் இருப்பதை ஒப்புக்கொள்ளவில்லை.

ஆய்வு நோக்கில் சிலர் பகலிலும் இரவிலும் டுமாஸ் கடற்கரையில் தங்கி, கேமராக்களுடன் கண்காணித்திருக்கின்றனர். அவர்களிடம் எந்தப் பேயும் சிக்கவில்லை. அறிவியல் தொழில்நுட்பம் வளர வளர, இதுபோன்ற கட்டுக்கதைகள் மறைய வேண்டும். ஆனால், இல்லாத ஒன்றை, இருப்பதாக இணையதளங்களில் செய்தி பரப்புவது அநியாயம்.

அலைகளின் தொடர் ஓசையால் எந்தக் கடற்கரையும் இரவு நேரத்தில் தனியாக இருக்கும்போது கொஞ்சம் பயத்தைத் தரும். அப்படித்தான் டுமாஸ் கடற்கரையும்.

நம் உடலில் உயிர் எங்கே இருக்கிறது, டிங்கு?

– ரா. ஹாசினி, 4-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, நாதன்கோவில்.

நம் உயிர் மூளையில் இருக்கிறது, ஹாசினி. மூளை இறந்துவிட்ட பிறகு, இதயம் துடித்தாலும் அதனால் பலன் ஒன்றும் இல்லை. அதனால்தான் மூளைச்சாவு  அடைந்தவர்களிடமிருந்து உடல் பாகங்களை எடுத்து, தேவைப்படுபவர்களுக்குப் பொருத்துகிறார்கள்.

நிலவில் வெப்பம் இருக்குமா, டிங்கு?

– இ. மதினா, 4-ம் வகுப்பு, இந்து ஆரம்பப் பள்ளி, வடக்கு அழகு நாட்சியாபுரம், திருநெல்வேலி.

பகல் நேரத்தில் நிலவில் வெப்பம் மிக அதிகமாக இருக்கும். அதாவது 100 டிகிரி செல்சியஸ் அளவுக்கு வெப்பம் இருக்கும். நமக்கு 30 டிகிரி செல்சியஸுக்கு மேல் போனாலே வெப்பத்தைத் தாங்க முடிவதில்லை. இரவு நேரத்தில் நிலவில் மைனஸ் 173 டிகிரி செல்சியஸ் குளிர் இருக்கும்.

இதையும் நம்மால் தாங்க முடியாது. பூமியில் வளிமண்டலம் இருக்கிறது. அது பகல் நேரத்தில் அதிக வெப்பம் தாக்காமல் காக்கிறது. இரவில் இந்த வெப்பத்தைத் தக்கவைத்துக்கொள்வதால், குளிர் அதிகம் தாக்காமல் இருக்கிறது. ஆனால் நிலவில் வளிமண்டலம் இல்லாததால் வெப்பமும் அதிகமாக இருக்கிறது, குளிரும் அதிகமாக இருக்கிறது, மதினா.

ஆப்பிள் விதைகள் உடலுக்கு நல்லதா, டிங்கு?

– ஸ். கனி அமுது, 6-ம் வகுப்பு, வாலரை கேட் வித்யாலயம், திருச்செங்கோடு.

ஆப்பிள் பழத்தைச் சாப்பிடலாம். விதைகளைச் சாப்பிட வேண்டிய தில்லை. ஆப்பிள் விதைகளில் சயனைடு என்னும் நச்சுப் பொருள் சிறிதளவு இருக்கிறது. அதனால் விதைகளை அதிகமாகச் சாப்பிட்டால் உடலுக்குத் தீங்கு. ஆப்பிள் சாப்பிடும்போது, ஒன்றிரண்டு விதைகளைத் தெரியாமல் சாப்பிட்டுவிட்டால், கவலைப்பட வேண்டாம். அதனால் ஒன்றும் பிரச்சினை வராது, கனி அமுது.

எனக்கு வயது 15. சில காரணங்களால் 8-ம் வகுப்பு படித்துக்கொண்டிருக்கிறேன். அடுத்த ஆண்டு நான் 10-ம் வகுப்பு தேர்வு எழுத முடியுமா, டிங்கு?

– எச்.என். சதக் ரஹ்மி, 8-ம் வகுப்பு, மண்ணடி, சென்னை.

பள்ளியில் எழுத முடியாது. உங்களுக்கு 15 வயது ஆகிவிட்டதால், தனித்தேர்வு எழுத முடியும். 8-ம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். நீங்கள் சென்னையில் இருப்பதால், கல்விச் சான்றிதழ், பிறப்புச் சான்றிதழ், புகைப்படம் போன்றவற்றை எடுத்துக்கொண்டு நுங்கம்பாக்கத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்துக்குச் (Directorate of Government Examinations) செல்லுங்கள்.

‘தேசிய அறிவியல் நாள்’ சி.வி. ராமன் பிறந்தநாள் அன்று கொண்டாடப்படுகிறதா, டிங்கு?

– சி. தீபிகா, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

இல்லை, தீபிகா. ஒளி ஒரு பொருளின் வழியாகச் செல்லும்போது சிதறும் ஒளியலைகளில் ஏற்படும் அலைநீள மாற்றத்தை சி.வி. ராமன் கண்டுபிடித்தார். 1928-ம் ஆண்டு பிப்ரவரி 28 அன்று, இந்திய இயற்பியல் ஆய்வு இதழில் இதை வெளியிட்டார். இது ‘ராமன் விளைவு’ என்று அழைக்கப்படுகிறது. இந்தக் கண்டுபிடிப்பு பின்னர் நோபல் பரிசையும் பெற்றது. ஆய்வு இதழில் வெளியிடப்பட்ட ‘ராமன் விளைவு’ நாளைச் சிறப்பிக்கும் வகையில் 1987-ம் ஆண்டு முதல் இந்திய அரசால் பிப்ரவரி 28, தேசிய அறிவியல் நாளாகக் கொண்டாடப்பட்டுவருகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x