Last Updated : 20 Feb, 2019 10:54 AM

 

Published : 20 Feb 2019 10:54 AM
Last Updated : 20 Feb 2019 10:54 AM

இடம் பொருள் மனிதர் விலங்கு: பாரதியின் பூனைகள்

அந்த வீட்டில் ஒரு பூனை இருந்தது. பார்ப்பதற்கு அச்சு அசல் பஞ்சுபோலவே வெள்ளை வெளேர் என்று இருக்கும். பஞ்சு போலவே மிதந்து மிதந்து வரும். பாரதியைப் பொருத்தவரை பூனையும் பாடலும் ஒன்றுதான். இரண்டுமே எப்போது எங்கிருந்து வரும் என்பதைச் சொல்ல முடியாது. வந்துவிட்டால் அவ்வளவு சுலபத்தில் நகராது. ஏறி மடிமீது உட்கார்ந்துகொண்டுவிடும்.

ஒரு நாள் வெள்ளைப் பூனை, குட்டிப் போட்டது. ஒன்றல்ல, நான்கு குட்டிகள். பஞ்சு மெத்தையின் ஓரத்தில் ஒரு பஞ்சு தலையணையை வைத்ததுபோல் வெள்ளைப் பூனைக்கு அருகில் ஒரு குட்டி வெள்ளைப் பூனை. இரண்டாவது குட்டி, அடர்த்தியான கறுப்பு. மூன்றாவது, பழுப்பு. அதன் மினுமினுப்பு பாம்பை நினைவுபடுத்தியது. நான்காவது குட்டி சாம்பல் நிறத்தில் கண்களை இறுக்கமாக மூடிக்கொண்டு படுத்துக்கிடந்தது.

விரைவில் தாயோடு கூட்டுச் சேர்ந்து நான்கு குட்டிகளும் பாரதியை வம்பிழுக்க ஆரம்பித்துவிட்டன. ‘அச்சமில்லை அச்சமில்லை’ என்று பாரதி பாடினால், ’ஆமாம் எனக்கும்தான்’ என்று சாம்பல் தன் முன்னங்காலை உயர்த்திக் காட்டும். ‘வயிற்றுக்குச் சோறிட வேண்டும்’ என்று அவர் பாடினால், ‘சொன்னால் மட்டும் போதாது கவிஞரே. இளஞ்சூடா பால் கிடைக்குமா?’ என்று சாம்பல் தன் அத்தனை பற்களையும் காட்டி இளிக்கும். ‘அன்பென்று கொட்டு முரசே’ என்னும் பாரதியின் வரி தந்த துணிச்சலில் கறுப்பு அவர் தோளில் காலை வைத்து ஏறி முண்டாசில் உட்கார்ந்துகொள்ளும்!

‘வீணையடி நீ எனக்கு’ என்று பாரதி மெய்மறந்தால், ‘அது நானாக்கும்’ என்று வாலைப் பெருமையோடு உயர்த்தும் வெள்ளை. ‘நான்தானே இங்கே ஒரே பெண் குட்டி?’ என்று பொருள் காரணமும் சொல்லும். அது சரி, ஏன் இப்படி விறைப்பாக நடக்கிறாய் என்று கறுப்பு கேட்டால், ‘உனக்குத் தெரியாதா? இதுதான் நிமிர்ந்த நன்னடை, நேர்கொண்ட பார்வை’ என்று கர்வமும்கொள்ளும். தூக்கப் பிரியனான பழுப்பு, ‘உடலினை உறுதி செய்’ என்னும் குரல் கேட்டால் போதும், துள்ளிக் குதித்து எழுந்து நிற்கும்.

பாரதி வெளியில் போயிருக்கும்போது நான்கு குட்டிகளும் வீட்டை நான்காக்கிவிடும். பாத்திரங்கள் உருண்டோடும். கறுப்பும் சாம்பலும் மல்யுத்தம் நடத்தும். ‘விட்டு விடுதலையாகி நிற்பாய், இந்த வெள்ளைப் பூனையைப்போலே’ என்று பாடியபடி சமையலறையிலிருந்து ஒரு டப்பாவை எடுத்து திறக்கும் வெள்ளை. ‘அது சிட்டுக் குருவியைப்போலே’ என்று பழுப்பு பலமுறை திருத்தினாலும் பலனிருக்காது. ‘பாரதி சிட்டுக்குருவியை நீக்கிவிட்டு என் பெயரைப் போட்டுவிட்டார். நீ பார்க்கவில்லையா?’ என்று கேட்கும்.

ஒரு நாள் பாரதி கண் மூடி ஏதோ யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு குட்டி அவர் மடியில் ஏறிக்கொண்டது. கண்களைப் பிரிக்காமலே புன்னகையோடு அதன் காதுகளை வருடிக் கொடுத்தார் பாரதி. சட்டென்று அவருக்கு ஒரு சந்தேகம். இப்போது என் மடியில் படுத்திருக்கும் பூனையின் நிறம் என்னவாக இருக்கும்? என்னை அடிக்கடி சீண்டும் வெள்ளையாக இருக்குமா? அல்லது பழுப்பா? ஒருவேளை சாம்பலோ? சரி பார்த்துவிடலாம் என்று கண்களைத் திறந்தார்.

கொட்டாவி விட்டபடி அவரை நிமிர்ந்து பார்த்தது கறுப்பு.

பாரதி யோசனையில் ஆழ்ந்துவிட்டார். ஒவ்வொன்றும் ஒரு வண்ணத்தில் இருந்தாலும் நான்கு பூனைகளும் அடிப்படையில் ஒன்றுதான், இல்லையா? அவற்றுக்குள் எந்த வேறுபாடும் இல்லை. நான்கும் ஒரே மாதிரி ஓடுகின்றன, ஒரே மாதிரி மியாவ் என்கின்றன, ஒரே மாதிரி அட்டகாசம் செய்கின்றன.

நான் உன்னோடு சேரமாட்டேன் என்று வெள்ளை மற்ற குட்டிகளிடம் சொல்லுமா? அல்லது அம்மா பூனைதான் என்றாவது தன் குட்டிகளை நிறத்தை வைத்து இனம் பிரித்துப் பார்த்திருக்குமா? கறுப்புக்கு என் அன்பு கிடையாது. சாம்பலுக்குக் கொஞ்சம். பழுப்புக்கு இன்னும் கொஞ்சம். வெள்ளைதான் என் மனதுக்கு நெருக்கமானது என்று என்றாவது அது சொல்லுமா? எனக்கு எல்லாக் குட்டிகளும் ஒன்று என்றல்லவா தாய்ப் பூனை சொல்லும்? ஆக, கறுப்பும் வெள்ளையும் பழுப்பும் சாம்பலும் நிறங்கள் மட்டும்தான். பூனையின் குணங்கள் கிடையாது.

தவிரவும், ஆண், பெண் என்றும் பூனைகள் பேதம் பார்ப்பதில்லை. ”ஏய் வெள்ளைக் குட்டி, அடக்கமாக இரு. அண்ணன்களிடம் வாலாட்டாதே” என்று ஒரு முறையாவது அம்மா அதட்டியிருக்கும் என்றா நினைக்கிறீர்கள்? வாய்ப்பே இல்லை. நிறம், சாதி, மேல், கீழ், ஆண், பெண் என்று எந்த வேறுபாடும் இல்லாததால்தானே இந்தப் பூனைக்குட்டிகள் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் இருக்கின்றன? இவற்றைப்போல் நாமும் மாறிவிட்டால் எவ்வளவு நன்றாக இருக்கும்?

ஒரு காகிதத்தை எடுத்து ‘வெள்ளை நிறத்தொரு பூனை’ என்று பாடியபடியே எழுத ஆரம்பித்தார் பாரதி. சும்மாவே இந்தப் பூனைக் குட்டிகளைக் கையில் பிடிக்க முடியாது. இனி கேட்க வேண்டுமா? குயில், காக்கை, கிளி என்று கண்ணில் படும் உயிரினங்களை எல்லாம் நிறுத்தி வைத்து டமாரம் அடிக்க ஆரம்பித்துவிட்டன.

வழக்கம்போல் வெள்ளை கொஞ்சம் அதிகமாகவே பீற்றிக்கொண்டது. ‘உங்களைப் பற்றி மட்டும்தான் பாரதி பாடியிருக்கிறார் என்று இனியும் நீங்கள் ஊரில் சொல்லிக்கொள்ள முடியாது. நேற்று மாலை எங்களைப் பற்றி அட்டகாசமாக ஒரு பூனைப்பாட்டு எழுதியிருக்கிறார்.’ ஐயோ என்று பதறிய ஒரு சிட்டுக்குருவியை இழுத்து அதன் முதுகைத் தட்டிக்கொடுத்தது வெள்ளை. ‘பதறாதே, பாடலின் இறுதி வரிகளைக் கேள்’ என்று சொன்னதோடு தொண்டையைக் கனைத்துக்கொண்டு பாடியும் காட்டியது.

‘ஒன்றென்று கொட்டு முரசே - அன்பில்

ஓங்கென்று கொட்டு முரசே

நன்றென்று கொட்டு முரசே இந்த

நானில மாந்தருக் கெல்லாம்.’

கட்டுரையாளர், எழுத்தாளர்

கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x