Published : 20 Feb 2019 10:53 AM
Last Updated : 20 Feb 2019 10:53 AM

டிங்குவிடம் கேளுங்கள்: உலகையே மாற்றி அமைத்த கண்டுபிடிப்பு!

சென்ற வாரம் ரஷ்ய எழுத்தாளர் மாக்சிம் கார்க்கியைப் பற்றிப் படித்த பிறகு, அவர் மீது எல்லையற்ற அன்பும் மரியாதையும் பெருகிவிட்டது. அவர் எழுதியவற்றில் எதை நான் படிக்கலாம்? தமிழில் புத்தகம் வந்திருக்கிறதா, டிங்கு?

– செ. இளஞ்செழியன், 9-ம் வகுப்பு, அரசு மேல்நிலைப் பள்ளி, திண்டுக்கல்.

ஓர் எழுத்தாளரைப் பற்றிப் படித்துவிட்டு, அவரது எழுத்தையும் படிக்க வேண்டும் என்ற உங்கள் ஆர்வத்துக்குப் பாராட்டுகள், இளஞ்செழியன். கார்க்கி என்றாலே உலகம் முழுவதும் ‘தாய்’ நாவல்தான் நினைவுக்கு வரும். ரஷ்யப் புரட்சிக்கு முன்னர்,  ஜார் மன்னர்களின் ஆட்சி நடைபெற்று வந்தது. மிக மோசமான சூழலில் மக்கள் வாழ்ந்துவந்தனர்.

தொழிலாளர்கள் ஒரு நாளைக்கு 20 மணி நேரம் உழைத்தார்கள். ஆனால், அந்த உழைப்புக்கு ஏற்ற ஊதியம் வழங்கப்படவில்லை. தொழிலாளர்கள் அனைவரும் ஒன்று சேர்ந்து, தங்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைகளுக்கு எதிராகப் போராடினார்கள். அந்தப் போராட்டத்தில் இந்த நாவலுக்கு முக்கியப் பங்கு இருக்கிறது. உலகையே மாற்றி அமைத்த முக்கியமான புத்தகங்களில் இதுவும் ஒன்று.

tinku-3jpgமாக்சிம் கார்க்கி

‘தாய்’ நாவலைப் படிக்க ஆரம்பித்தால் பாவெலும் நீலவ்னாவும் உங்கள் வாழ்க்கையில் மறக்க முடியாதவர்களாக மாறிவிடுவார்கள். பல பதிப்பகங்கள் ‘தாய்’ நாவலைத் தமிழில் வெளியிட்டுள்ளன. படித்துப் பாருங்கள்.

உனக்குப் பிடித்த கண்டுபிடிப்பு எது, டிங்கு?

– மா. பாலகுரு, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி,  போடிநாயக்கனூர், தேனி.

ஒன்றா, இரண்டா… எவ்வளவு கண்டுபிடிப்புகள் இருக்கின்றன!  குறிப்பிட்டு ஒன்றைச் சொல்லித்தான் ஆக வேண்டும் என்றால், சக்கரம். உலகையே மாற்றி அமைத்த கண்டுபிடிப்பு. பொருட்களை ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்குக் கொண்டு செல்வதும் ஓரிடத்திலிருந்து இன்னோர் இடத்துக்கு மனிதர்கள் செல்வதும் சக்கரம் கண்டுபிடிக்கப்பட்ட பிறகே எளிதாகியிருக்கிறது.

சக்கரத்தைச் சுழற்றிதான் மண்பாண்டங்கள் இன்றுவரை செய்யப்படுகின்றன. உங்கள் கடிகாரத்தில்கூட சக்கரம் இருக்கிறது. தொழிற்சாலைகளில் உள்ள இயந்திரங்களில் சக்கரங்கள் இருக்கின்றன. வாகனங்களில் சக்கரங்கள் இருக்கின்றன. வீட்டு உபயோகப் பொருட்களில் சக்கரங்கள் இருக்கின்றன. இப்படிச் சக்கரங்களால்தான் நம் வாழ்க்கையே நகர்கிறது, பாலகுரு.    

வலிப்பு எப்படி ஏற்படுகிறது? வலிப்பு வந்தவர்களுக்கு ஏன் இரும்புப் பொருட்களைக் கொடுக்கிறார்கள் டிங்கு?

- முகமது இம்ரான், 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

வலிப்பு என்பது நோயல்ல. நோய்க்கான அறிகுறி. மூளை, நரம்பு செல்களில் தகவல் பரிமாற்றம் நடைபெறுவதற்கு அந்த செல்களிடையே மிகச் சிறிய அளவில் மின்சாரம் உற்பத்தியாகிறது. ஏதாவது காரணத்தால் மூளையில் அதிக அழுத்தம் உண்டாகும்போது, மின்சாரம் அதிகமாக உற்பத்தியாகிறது. அந்த மின்சாரம் நரம்புகள் வழியாக உடல் உறுப்புகளுக்குக் கடத்தப்படுகிறது.

அப்போது உடல் உறுப்புகளின் இயக்கத்தில் மாற்றம் ஏற்படுகிறது. இதனால் கை, கால்கள் இழுக்க ஆரம்பிக்கின்றன. இதைத்தான் வலிப்பு என்கிறோம். இப்படி வலிப்பு வரும்போது இரும்புப் பொருட்களைக் கொடுத்தால் வலிப்பு நின்றுவிடும் என்று நினைப்பது மூடநம்பிக்கை. இரும்புப் பொருட்களால் வலிப்பை நிறுத்த முடியாது. அவற்றால் ஆபத்துதான் நேரிடும், முகமது இம்ரான்.

செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஏன் நகமும் முடியும் வெட்டக் கூடாது என்று சொல்கிறார்கள், டிங்கு?

– அ. சுசி, 6-ம் வகுப்பு, அரசு உயர்நிலைப் பள்ளி, வெளியகரம்.

இரவு நேரத்தில் தலை சீவக் கூடாது, நகம் வெட்டக் கூடாது என்று சொல்வதைப் புரிந்துகொள்ள முடிகிறது. அந்தக் காலத்தில் மின் இணைப்பு கிடையாது. எண்ணெய் ஊற்றப்பட்ட விளக்கு வெளிச்சத்தில்தான் இரவு வேலைகளைச் செய்ய வேண்டும். தலை சீவும்போது பேனோ முடியோ கீழே உதிர்ந்தால் அந்த வெளிச்சத்தில் கண்டுபிடிக்க முடியாது. அதேபோல் நகங்களை வெட்டும்போது கீழே விழுந்தாலும் தெரியாது. நடக்கும்போது குத்தலாம்.

இதற்காக இரவில் தலை சீவக் கூடாது, நகம் வெட்டக் கூடாது என்று சொல்லியிருக்கிறார்கள். ஆனால், செவ்வாய், வெள்ளிக் கிழமைகளில் ஏன் வெட்டக் கூடாது என்பதற்கு அறிவியல் ரீதியான காரணம் இல்லை. சில ஊர்களில் முடி வெட்டும் கடைகளுக்கு செவ்வாய்  விடுமுறைகூட விட்டுவிடுகிறார்கள். இப்போது மின்விளக்கு இருக்கிறது. அதனால் இரவா பகலா, செவ்வாய் வெள்ளியா என்றெல்லாம் நவீன பார்லர்கள் பார்ப்பதில்லை. நகமும் முடியும் வளர்ந்துவிட்டால் எந்த நாள் என்றாலும் நானும் வெட்டி விடுவேன், சுசி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x