Published : 13 Feb 2019 10:21 AM
Last Updated : 13 Feb 2019 10:21 AM

அன்றாட வாழ்வில் வேதியியல் 18: பலசாலி போரான்

பிப்பெட்: வணக்கம் பியூ. சிலிக்கான், எர்பியம்னு கணினி, இணையம் தொடர்பாவே ரெண்டு வாரமா பேசிட்டு இருக்கோம்.

பியூரெட்: ஆமா, நவீன அறிவியல்-தொழில்நுட்ப வளர்ச்சியில வேதியியலின் பங்கை இதன் மூலமா தெரிஞ்சுக்க முடியுது, இல்லையா?

பிப்.: ஆமா, அப்ப இந்த வாரம் என்ன தனிமத்தைப் பத்திப் பார்க்கப் போறோம்?

பியூ.: போரான்.

பிப்.: போரானுக்கும் கணினிக்கும் ஏதாவது தொடர்பு இருக்கா?

பியூ.: இல்ல. ஆனா, போரானுக்கும் சிலிக்கானுக்கும் தொடர்பு இருக்கு.

பிப்.: அது என்ன?

பியூ.: உலோகப்போலிகளில் இரண்டாவது அதிக உருகுநிலை, கொதிநிலையைக் கொண்டது சிலிக்கான்.

பிப்.: அதைத்தான் ஏற்கெனவே நீ சொல்லிட்டியே.

பியூ.: உலோகப்போலிகளில் அதிக உருகுநிலை, கொதிநிலையைக் கொண்டது போரான். அப்புறம் அது இல்லேன்னா, துணிகளும் தாவரங்களும் ரொம்பக் கஷ்டப்படும்.

பிப்.: ஏன்?

பியூ.: ஏன்னா சலவைத் தூள், சோப்புகளில் போரான் சேர்க்கப்படுது.

பிப்.: ஓஹோ, அப்ப தாவரங்கள்?

பியூ.: தாவர வளர்ச்சிக்குத் தேவையான அவசிய ஊட்டச்சத்து இது. தாவரங்களின் செல் சுவரை போரான் வலுப்படுத்துது. அதனால போரானை அடிப்படையா கொண்ட போராக்ஸும் போரிக் அமிலமும் உரங்களில் சேர்க்கப்படுகின்றன.

பிப்.: ஓ! போரான் பயிரை வளர்க்குதா.

பியூ.: அது மட்டுமில்ல, கணுக்காலிகளிடம் நச்சாகச் செயல்படுவதால், பயிர்களுக்கான பூச்சிக்கொல்லிகளிலும் போரான் சேர்க்கப்படுது.

பிப்.: ஒரு பக்கம் ஊட்டச்சத்து, இன்னொரு பக்கம் பூச்சிக்கொல்லி. அருமை.

பியூ.: அதேநேரம் போரானோட அளவு கூடிடக் கூடாது. அப்படி நடந்தா இலை நுனிகள் கருகி, தாவர வளர்ச்சி குறைஞ்சுகூட போயிடும்.

பிப்.: ம், எப்பவும் எதுவும் அளவோட இருக்கணும், அப்படித்தானே?

பியூ.: மனுசங்களுக்கும் போரான் உதவி பண்ணுது.

பிப்.: அதைப் பத்தி இன்னும் கொஞ்சம் சொல்லேன்.

பியூ.: ஆன்டிசெப்டிக், பூஞ்சைத் தடுப்பு, வைரஸ் தடுப்பு குணங்களை போரிக் அமிலம் கொண்டிருக்கு. அதனால, நீச்சல் குளங்கள்ல தண்ணீரைத் தூய்மைப்படுத்த இதைப் பயன்படுத்துறாங்க. இயற்கையாகவே நுண்ணுயிர் எதிர்ப்பு ஆற்றல் கொண்ட போரான் மருந்துகளும் உள்ளன.

பிப்.: போரானுக்கு மதிப்பு கூடிக்கிட்டே போகுது.

பியூ.: இன்னும் முடியல பிப். உலகத்துல உற்பத்தியாகும் போரானில் பாதிக்கு மேல் கண்ணாடி இழை (ஃபைபர் கிளாஸ்) உருவாக்கப் பயன்படுது. கட்டுமானப் பொருள் தயாரிப்பிலும் மின்கடத்தலைத் தடுக்குறதுக்கும் இந்தக் கண்ணாடி இழை பயன்படுது.

பிப்.: கண்ணாடியும் கண்ணாடி இழையும் வேற வேற தானே?

பியூ.: ஆமா, கண்ணாடி இழை தயாரிப்பிலும் போரான் பயன்படுது. கண்ணாடி தயாரிப்பிலும் பயன்படுது. சாதாரண கண்ணாடியைவிட போரோசிலிகேட் கண்ணாடி ரொம்ப வலுவானதாவும், வெப்ப-அதிர்ச்சி தாங்கியாவும் மேம்பட்டு இருக்கு.

பிப்.: பயங்கர பலசாலியா இருக்கும் போலிருக்கே.

பியூ.: பலசாலி மட்டுமில்ல, பளபளப்பும் தரும்.

பிப்.: அப்படி எதுக்கெல்லாம் தருது?

பியூ.: பைரெக்ஸ் கண்ணாடி, பீங்கானைப் பளபளப்பாக்க போரானைத்தான் பயன்படுத்துறாங்க. வெப்பத்தால் பாதிக்கப்படாத டைல்ஸ், சமையலறைப் பொருட்களை உருவாக்க இவை பயன்படுகின்றன.

பிப்.: மொத்தத்துல போரான் பயன்கள் சொல்லித் தீராது.

 

chemistry-2jpgright

இந்த வாரத் தனிமம்

போரான்

குறியீடு: B

அணு எண்: 5

ஜோசப் லூயி கே லுசாக், லூயி ழாக் தெனார்டு ஆகிய இருவரும் 1808-ல் போரானைக் கண்டறிந்தார்கள். புராக் என்ற அரபிச் சொல்லில் இருந்து போரான் என்ற பெயர் வந்தது. போராக்ஸ் என்ற கனிமத்தில் இருந்தே போரான் பிரித்தெடுக்கப்படுகிறது. இந்த போராக்ஸின் அரபிப் பெயர்தான் புராக்.

பூமியின் மேலோட்டிலும் சூரியக் குடும்பத்திலும் அதிகமில்லாத தனிமம் போரான். பொதுவாக போரேட் கனிமங்களாகவே இது கிடைக்கிறது, தனியாகக் கிடைப்பதில்லை. துருக்கியில்தான் போரான் சுரங்கங்கள் அதிகமுள்ளன. அந்த நாடே போரானை அதிக அளவில் உற்பத்தியும் செய்கிறது.


தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x