Published : 23 Jan 2019 12:13 PM
Last Updated : 23 Jan 2019 12:13 PM

டிங்குவிடம் கேளுங்கள்: மழைக்கும் மயிலுக்கும் தொடர்பு உண்டா?

ஆம்புலன்ஸில் ஏன் சைரன் ஒலிக்கிறது, டிங்கு?

– அ. சூரிய பிரகாஷ், 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, திருச்சி.

உயிருக்கு ஆபத்தான சூழலில் இருப்பவர்களைக் காப்பாற்றத்தான் ஆம்புலன்ஸ் பயன்படுத்தப்படுகிறது. போக்குவரத்து நெரிசல் மிக்க சாலைகளில் ஆம்புலன்ஸிலிருந்து வரும் சைரன் ஒலிக்கு ஏற்ப, வாகனங்கள் வழிவிடும். இதனால் ஆம்புலன்ஸ் எங்கும் நிற்காமல் வேகமாக மருத்துவமனையை அடைந்துவிடும். உயிரும் காப்பாற்றப்படும்.

ஆம்புலன்ஸ் வருவதற்கு முன்னே அதன் சைரன் ஒலி வந்துவிடும். இதனால் வழிவிடுவதில் ஏற்படும் தாமதம் தவிர்க்கப்படும். அதனால்தான் சைரனோடு ஆம்புலன்ஸ் செல்கிறது, சூரிய பிரகாஷ்.

ஒவ்வொருவருக்கும் உள்ளங்கை ரேகை தனித்தன்மையுடன் இருப்பதுபோல், வேறு ஏதாவது உறுப்பு தனித்தன்மையுடன் இருக்கிறதா, டிங்கு?

– முகமது ஷஃபி, 5-ம் வகுப்பு, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி, சுல்தான்பேட்டை, திருப்பூர்.

 மனித உடலில் தனித்தன்மையுடன் இருக்கும் மற்றோர் உறுப்பு நாக்கு. ஒருவருடைய நாக்கின் நுண்பகுதிகள்போல் இன்னொருவருடைய நாக்கின் நுண்பகுதிகள் இருப்பதில்லை. அதனால் கை ரேகையை வைத்து ஒரு குற்றவாளியைக் கண்டுபிடிப்பதுபோல், நாக்கை வைத்தும் கண்டுபிடித்துவிடலாம், முகமது ஷஃபி.

 

மழை வருவதற்கு முன் மயில் தோகை விரித்து ஆடுவது ஏன், டிங்கு?

– மு. ஜீவஹரிணி, 5-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

மழையை வரவேற்கவோ மழையை ரசித்தோ மயில் தோகையை விரித்து நடனம் ஆடுவதில்லை, ஜீவஹரிணி. பெண் மயிலைக் குடும்பம் நடத்துவதற்கு அழைப்பதற்காகவே, அழகான தன் தோகையை விரித்து நடனமாடுகிறது ஆண் மயில். ஏப்ரல் முதல் செப்டம்பர்வரை இனப்பெருக்கக் காலம் என்பதால், ஆண் மயில்கள் தோகை விரித்து ஆடுவதை இந்தக் காலத்தில் அதிகம் காணலாம்.

அப்பா என்னைத் தினமும் கிண்டல் செய்கிறார். என்ன செய்வது டிங்கு?

– செ. விஷால், 5-ம் வகுப்பு, வித்யாசாகர் குளோபல் பள்ளி, செங்கல்பட்டு.

எதற்காகக் கிண்டல் செய்கிறார் என்பதை நீங்கள் சொல்லவில்லை. தினமும் வெகு நேரம் தூங்குபவர்களைச் சிலர் கும்பகர்ணன் என்று கூப்பிடுவார்கள். இந்தக் கிண்டலுக்குக் காரணம், தூக்கத்தைக் குறைத்துக்கொண்டு சீக்கிரம் எழுந்துவிட வேண்டும் என்பதுதான். அதாவது உங்களின் செயலைச்  சரிசெய்வதற்கான முயற்சியாக இந்தக் கிண்டல் இருக்கும். சரிசெய்துகொண்டால் விட்டுவிடுவார்கள். உங்கள் அப்பாவும் இதுபோல் ஒரு காரணத்துக்காகக் கிண்டல் செய்கிறார் என்றால், அந்தச் செயலை நீங்கள் சரிசெய்துகொண்டால், விட்டுவிடுவார். இல்லை, காயப்படுத்தும் விதத்தில் உங்கள் அப்பா கிண்டல் செய்கிறார் என்றால், அவரிடம் நீங்கள் வருத்தப்படுகிறீர்கள் என்பதைச் சொல்லிவிடுங்கள். எந்த அப்பாவும் மகன் வருத்தப்படுவதை விரும்ப மாட்டார், விஷால்.

பாம்பு புற்றைக் கட்டுவது எப்படி, டிங்கு?

– அ.ரா. அன்புமதி, 5-ம் வகுப்பு, மைக்கேல் ஜாப் மெட்ரிக். மேல்நிலைப் பள்ளி, சூலூர், கோவை.

 பாம்புகள் புற்றுகளைக் கட்டுவதில்லை, அன்புமதி. பெரும்பாலான பாம்புகள் கறையான் புற்றுகள், கொறிவிலங்குகளின் வளைகள் போன்றவற்றில்தான் குடியிருக்கின்றன. சாண்ட்போவா போன்ற ஒரு சில பாம்புகள், தங்குவதற்கு இடம் கிடைக்காதபோது தாங்களாகவே வளையை உருவாக்கிக் கொள்கின்றன. கறையான் புற்று குளிர்க் காலத்தில் கதகதப்பாகவும் கோடைக்காலத்தில் குளிர்ச்சியாகவும் இருக்கும். அதனால் பாம்புகள் அழையா விருந்தாளிகளாக இந்தப் புற்றில் குடியேறிவிடுகின்றன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x