Published : 11 Dec 2018 05:39 PM
Last Updated : 11 Dec 2018 05:39 PM

டிங்குவிடம் கேளுங்கள்: ரப்பர் பந்தைவிட இரும்புக் குண்டு அதிக உயரம் துள்ளுவது ஏன்?

இ-மெயில் முகவரியில் @ குறியீடு எதற்காகப் பயன்படுகிறது, டிங்கு?

– வி. திவ்யதர்ஷினி, 5-ம் வகுப்பு, ஸ்ரீ செளடாம்பிகா நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

இ-மெயில் முகவரி பொதுவாக இரண்டு பகுதிகளாக அமைக்கப்பட்டிருக்கிறது. முதல் பகுதியில் பயன்படுத்துபவரின் அடையாளமும் (user id) இரண்டாம் பகுதியில் இ-மெயில் அளிக்கும் நிறுவனத்தின் பெயரும் (domain name) இருக்குமாறு அமைக்கப்பட்டிருக்கிறது. @ குறியீடு பயன்படுத்துபவரின் அடையாளத்தையும் டொமைனின் பெயரையும் தனித் தனியாகப் பிரித்துக் காட்டுவதற்காகப் பயன்படுத்தப்படுகிறது.

userid@domain name என்றுதான் இ-மெயில் முகவரி இருக்கும். உதாரணமாக Tinku@gmail.com என்றால், என்னுடைய பெயர் முதலிலும் @-க்குப் பிறகு டொமைனின் பெயரும் இருக்கிறது அல்லவா, இவை இரண்டும் சேர்ந்தால்தான் இ-மெயில் முகவரி. முன்னால் இருக்கும் பெயரை மாற்றி இன்னொரு இ-மெயில் முகவரியை உருவாக்கிக்கொள்ள முடியும்.

ஆனால் பின்னால் இருக்கும் டொமைன் பெயரை மாற்ற இயலாது. சில வெப்சைட்கள் டொமைன் பெயரையும் நம் விருப்பப்படி மாற்றிக்கொள்ள அனுமதிக்கின்றன. அதாவது Tinku@Tinku.com, Mayabazaar@thehindutamil.co.in என்றெல்லாம் வைத்துக்கொள்ள அனுமதிக்கின்றன. ஆனாலும் @ குறியீடு இல்லாமல் இ-மெயில் முகவரி இல்லை, திவ்யதர்ஷினி.

(என் இ-மெயில் முகவரி என்று உதாரணத்துக்காகச் சொல்லியிருக்கிறேன். மாயாபஜார் இ-மெயில் முகவரிதான் எனக்கும்.)

உனக்குப் புத்தகம் பிடிக்குமா, தொலைக்காட்சி பிடிக்குமா டிங்கு?

– ஜே. லாரன்ஸ், உடுமலைப்பேட்டை.

புத்தகங்கள்தான் அதிகம் பிடிக்கும். படிக்கும்போதே அந்தக் காட்சியைக் கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுவேன். அதாவது கண்கள் படிக்கும், மூளை அதைத் திரைப்படம்போல் காட்டும். இதுதான் ரொம்ப சுவாரசியமாக இருக்கும். தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நம்முடைய பங்கு என்று ஒன்றும் இல்லை. அது காட்டுவதை அப்படியே நாம் பார்க்க வேண்டும்.

இதில் நம் கற்பனைக்கு வேலையும் இல்லை, அதற்கான நேரத்தையும் அது தராது. அதனால் புத்தகங்கள்தான் என்னுடைய தேர்வு. உங்களுக்கும் புத்தகங்களைத்தான் பரிந்துரை செய்வேன். அது சரி, இரண்டு வாரங்களுக்கு முன்பு (நவம்பர் 28), வெளியான ‘பாவம் பூதம்!’ கட்டுரையை நீங்கள் வாசிக்கவில்லையா? உடனே அதைத் தேடிப் படியுங்கள். அதற்குப் பிறகு நீங்களும் புத்தகங்களுக்கு மாறிவிடுவீர்கள், லாரன்ஸ்.

செல்ஃபி எடுக்க உனக்குப் பிடிக்குமா, டிங்கு?

– த. இன்பா, 8-ம் வகுப்பு, எஸ்.ஆர்.வி. பப்ளிக் பள்ளி, சமயபுரம்.

என்னுடைய பொழுது போக்குகளில் ஒன்று கேமராவில் படம் பிடிப்பது. பார்த்து ரசிக்க உலகில் எவ்வளவோ விஷயங்கள் இருக்கின்றன. அவற்றை நான் விரும்பும் கோணத்தில் படம் பிடிப்பதும் அதைப் பத்திரப்படுத்தி வைத்துக்கொண்டு, அடிக்கடி பார்த்து மகிழ்வதும் பிடிக்கும். ஆனால் நம்மை நாமே படம் எடுத்துப் பார்த்துக்கொள்வது பிடிக்காது. அதில் என்ன சுவாரசியம் இருக்கிறது, எல்லோரும் இப்படி செல்ஃபி எடுக்கிறார்களே என்று தோன்றும். இன்னொரு விஷயம் இன்பா, எனக்கு செல்ஃபி எடுக்கவும் தெரியாது. கற்றுக்கொள்ளவும் ஆர்வம் இல்லை.

ஏன் ரப்பர் பந்தைவிட இரும்புக் குண்டு உயரமாகத் துள்ளுகிறது, டிங்கு?

- எம்.எஸ். தேஜஸ்வின், 9-ம் வகுப்பு, மகரிஷி பள்ளி, ஓசூர்.

ஒரு பொருளின் நெகிழ்ச்சித் தன்மையைப் பொருத்தே, அது துள்ளும் உயரம் தீர்மானிக்கப்படுகிறது. இரும்புக் குண்டும் ரப்பர் பந்தும் ஒரே அளவாக இருந்தாலும் அவற்றின் அடர்த்தி வெவ்வேறானது. அடர்த்தி அதிகமான இரும்புக் குண்டில் நெகிழ்ச்சித் தன்மை குறைவாக இருக்கும்.

பந்தில் நெகிழ்ச்சித் தன்மை அதிகமாக இருக்கும். இருந்தாலும், இரும்புக் குண்டை நிலத்தில் தூக்கிப் போடும்போது குறைந்த அளவு ஆற்றலைச் செலவிட்டு, உயரமாகத் துள்ளுகிறது. நெகிழ்ச்சித் தன்மை அதிகம் இருந்தாலும் ரப்பர் பந்து, அதிக ஆற்றலைச் செலவிடுகிறது. அதனால் அது செல்லும் உயரம் குறைகிறது.

அதாவது ஆற்றலைக் குறைவாகச் செலவிடும் இரும்புக் குண்டு உயரமாகத் துள்ளுகிறது. ஆற்றலை அதிகமாகச் செலவிடும் ரப்பர் பந்தால் குறைவான உயரத்துக்கே துள்ளமுடிகிறது, தேஜஸ்வின்.

வாகனங்களுக்கு பெட்ரோல் போட்டு ஓட்டுகிறோம். கப்பல் எதில் ஓடுகிறது, டிங்கு?

– கி. ஆர்த்தி, 4-ம் வகுப்பு, பிச்சாண்டி நடுநிலைப் பள்ளி, போடிநாயக்கனூர், தேனி.

கப்பல்கள் பொதுவாக 3 விதமான எரிபொருட் களைப் பயன்படுத்துகின்றன. Heavy Fuel Oil, Low Sulfur Fuel Oil, Diesel Oil போன்றவை கப்பலுக்குப் பயன்படுகின்றன. நாடுகளின் எரிபொருள் பயன்பாடுக்கு ஏற்ப கப்பலின் எரிபொருளும் ஒவ்வொரு நாட்டுக்கும் மாறுபடும், ஆர்த்தி.டிங்குவிடம் கேளுங்கள்

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x