Last Updated : 14 Nov, 2018 03:56 PM

 

Published : 14 Nov 2018 03:56 PM
Last Updated : 14 Nov 2018 03:56 PM

திறந்திடு சீஸேம் 08: மயிலாசனத்தின் கதை

1150 கிலோ தங்கம் ஒதுக்கப்பட்டது. மரகதம், மாணிக்கம், நீலமணி, வைரம் உள்ளிட்ட விலை உயர்ந்த கற்கள் 230 கிலோ ஒதுக்கப்பட்டது. இதைச் செய்வதற்காக சையத் கிலானி என்ற பொற்கொல்லர் தலைமையில் குழு ஒன்று உருவாக்கப்பட்டது. அவர்கள் ஏழு வருடங்கள் உழைத்து இதனைப் படைத்தனர். மயிலாசனம், முகலாயப் பேரரசர் ஷாஜகானின் கனவு அரியணை!

ஷாஜகானின் ஆட்சிக்காலம்தான் முகலாயப் பேரரசின் பொற்காலம் என்கிறது வரலாறு. இன்றைய இந்தியாவின் பெரும்பகுதி ஷாஜகானின் கட்டுப்பாட்டில்தான் இருந்தது. பேரரசின் தலைநகரை ஆக்ராவிலிருந்து, தான் உருவாக்கிய புதிய நகரமான ஷாஜகான்பாத்துக்கு (இன்றைய பழைய டெல்லி) மாற்றினார் ஷாஜகான். அவையில் தான் அமர உலகிலேயே சிறந்த அரியாசனம் ஒன்றை உருவாக்க வேண்டும் என்று எண்ணினார். பூமியையும் சொர்க்கத்தையும் இணைக்கும் பொக்கிஷமாக அந்த அரியாசனம் இருக்க, அதில் அமர்ந்துகொண்டு மக்களின் குறைகளை இறைவனிடம் தெரிவிக்கும் தூதுவராக ஆட்சி செய்ய வேண்டும் என்று எண்ணினார். எனவே மயிலாசனத்தைப் பார்த்துப் பார்த்து உருவாக்கினார்.

இந்த ஆசனத்தில் இரண்டு மயில்கள் இருந்தன. அவற்றின் தோகையை அழகுபடுத்த விதவிதமான கற்கள் பதிக்கப்பட்டன. எனவே, இந்த அரியாசனத்துக்கு இந்தியில் ‘மயூராசனம்’ என்றும், தமிழில் ‘மயிலாசனம்’ என்றும் பெயர் வந்தது. முகலாய அவைக் குறிப்புகளின்படி இந்த ஆசனத்தின் பெயர், Takht-e-tavus. நான்கு அடி உயரத்தில் செவ்வக வடிவ மேடை, அழகிய கலைவேலைப்பாடுகள் கொண்ட கூரை, மேடையையும் மேற்கூரையையும் இணைக்கும்படி முத்துகளும், இதரக் கற்களும் பதிக்கப்பட்ட பன்னிரண்டு தூண்கள், ஏறுவதற்கு வெள்ளிப் படிக்கட்டுகள், அமர்வதற்குப் பட்டு மெத்தை போன்றவை அமைக்கப்பட்டிருந்தன.

ஷாஜகானின் அவையிலிருந்த கவிஞரான குவிட்ஸி, பேரரசரின் பெருமைகளைப் புகழ்ந்து பாடிய இருபது கவிதைகள், மரகத எழுத்துகளால் மயிலாசனத்தில் செதுக்கப்பட்டிருந்தன. 116 மரகதக்கற்கள் (ஷா, ஜஹாங்கீர் போன்ற புகழ்பெற்ற மரகதக்கற்களும் இதில் உண்டு), 108 மாணிக்கக்கற்கள் (தைமூர் என்ற மாணிக்கமும் இதில் உண்டு), பல்வேறு வைரக்கற்கள் மயிலாசனத்தில் பதிக்கப்பட்டிருந்தன. உலகப் புகழ்பெற்ற கோஹினூர் வைரமும் மயிலாசனத்தில் பதிக்கப்பட்டிருந்தது.

ஷாஜகானுக்குப் பின் மயிலாசனம், பேரரசர் ஔரங்கசீபின் வசம் சுமார் ஐம்பது ஆண்டுகள்வரை இருந்தது. ஔரங்கசீப் மயிலாசனத்தைக் கைப்பற்றியபோது, அதிலிருந்த ஷாஜகானின் புகழ்பாடும் கவிதைகளை நீக்கச் சொல்லி உத்தரவிட்டார். ஔரங்கசீபின் காலத்துக்குப் பிறகு முகலாயப் பேரரசின் வீழ்ச்சி ஆரம்பித்தது. மயிலாசனத்தைக் குறிவைத்து வாரிசுகள் நடத்திய அரசியலில் பேரரசு பலவீனம் அடைந்தது. எல்லைகள் சுருங்கிப் போயின.

பாரசீகப் பேரரசர் (இன்றைய ஈரான்) நாதிர் ஷா, இந்தியாவின் மீது படையெடுக்க முடிவெடுத்தார். முகலாயர்கள் சேர்த்து வைத்த செல்வங்கள், குறிப்பாக மயிலாசனம் அவரது ஆசையைத் தூண்டியது. கி.பி.1739-ல் முகலாயப் படைகளை எல்லாம் சுலபமாகச் சிதறடித்துவிட்டு, நாதிர் ஷா தன் படைகளோடு டெல்லியை அடைந்தார். அப்போது பெயருக்கு முகலாயப் பேரரசராக இருந்த முகம்மது ஷா, நாதிர் ஷாவிடம் அடிபணிந்தார். நாதிர் ஷா, தன்னை இந்தியாவின் பேரரசராக அறிவித்துக்கொண்டார்.

நாதிர் ஷா சுமார் இரண்டு மாதங்கள் டெல்லியில் இருந்தபோது, சுமார் 30,000 பேரை பாரசீக வீரர்கள் கொன்றதாக வரலாற்றாசிரியர்கள் குறிப்பிட்டிருக்கின்றனர். அந்தச் சமயத்தில் முடிந்தவரை அங்குள்ள செல்வங்களைக் கொள்ளையடிக்கச் சொல்லி தன் வீரர்களுக்கு நாதிர்ஷா உத்தரவிட்டிருந்தார். அப்படிக் கொள்ளையடித்த பணம் மட்டும் முப்பது கோடி இருக்கும். தவிர நகைகள், விலை உயர்ந்த உலோகங்கள், பொக்கிஷங்கள் தனி. கோஹினூர் வைரம், தர்யா-ஏ- நூர் வைரம் உள்ளிட்டவையும் பறிபோயின. அதுபோக நூறு யானைகள், 7 ஆயிரம் குதிரைகள், 10 ஆயிரம் ஒட்டகங்கள், சில நூறு அடிமைகள், எழுத்தாளர்கள், சிற்பிகள், கட்டிடக் கலைஞர்கள், தச்சர்கள் என்று நாதிர் ஷா அபகரித்த பட்டியல் நீளமானது. ஷாஜகான் உருவாக்கிய பொக்கிஷமான மயிலாசனத்தையும் பறித்துக்கொண்ட நாதிர் ஷா, டெல்லியிருந்து புறப்பட்டார்.

நாதிர் ஷாவுக்கும் ஏகப்பட்ட அரசியல் எதிரிகள் இருந்தார்கள். 1747-ல் தன்னைச் சுற்றி பின்னப்பட்ட சதிவலை ஒன்றில் வசமாகச் சிக்கிக்கொண்ட நாதிர் ஷா, கொல்லப்பட்டார். அவரிடமிருந்து பறிபோன மயிலாசனம் அதற்குப் பின் சிதைந்து போனது. அதில் உள்ள தங்கத்தையும், பிற விலை உயர்ந்த கற்களையும் பலரும் உடைத்து எடுத்துக்கொண்டனர். மயிலாசனம் துண்டு துண்டாக ஈரான் எங்கும் பரவியது. பத்தொன்பதாம் நூற்றாண்டில் பத் அலி ஷா காஜர் என்ற பாரசீக அரசரின் காலத்தில் நாதரி என்ற அரியாசனம் உருவாக்கப்பட்டது. அதில் மயிலாசனத்தின் பாகங்கள் பொருத்தப்பட்டதாக ஒரு தகவல் உண்டு. இது தவிர, மயிலாசனத்தின் பாகங்கள் வேறு வேறு இடங்களில் இருப்பதாக உறுதியற்ற தகவல்களும் உண்டு.

பிற்காலத்தில் மயிலாசனத்தை மாதிரியாகக்கொண்டு ஒரு சில அரியாசனங்களும் வேறு ராஜ்ஜியங்களில் வடிவமைக்கப்பட்டன. ஆனால், எது ஒன்றும் மயிலாசனத்துக்கு ஈடாகாது என்பதே உண்மை. மயிலாசனத்தை உருவாக்க ஷாஜகான் செலவு செய்த தொகையானது, தாஜ்மஹாலைக் கட்டுவதற்கு ஆன செலவைவிட இரண்டு மடங்கு அதிகம்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x