Published : 18 Oct 2018 02:59 PM
Last Updated : 18 Oct 2018 02:59 PM

அன்றாட வாழ்வில் வேதியியல் 05: இது 5000 வருட நீலம்

பிப்பெட்: வணக்கம் பியூ. பொம்மைக் கொலுவுக்கு எல்லாம் போய்ட்டு வந்தியா?

பியூரெட்: எனக்குப் பிடித்த விதம்விதமான பொம்மைகளை எங்கே கொலு வைத்தாலும் நான் எப்படிப் போகாமல் இருப்பேன்? நானே ஒரு அறிவியல் கொலு வைச்சிருக்கேன், நீ ஏன் அதைப் பார்க்க வரல?

பிப்.: ஓ அப்படியா, வந்துட்டா போச்சு. சரி, இந்த வாரம் எந்த வேதிப்பொருளைப் பற்றிச் சொல்லப் போற?

பியூ.: வண்ணமடிக்க வரலாற்றில் நீண்டகாலமாகப் பயன்படுத்தப்பட்டு வரும் கோபால்ட் பத்தி இந்த வாரம் பார்க்கப் போறோம்.

பிப்.: கோபால்னு ஏதோ ஆளு பேரு மாதிரி இருக்கே.

பியூ.: கோபால் இல்லை, கோபால்ட். ‘ல்’லுக்கு அப்புறமா ஒரு ‘ட்’ இருக்கு, கவனிக்கலையா?

பிப்.: ஓ! கோபால்ட்டா. சரி சரி.

பியூ.: நீ ஓவியப் பயிற்சிக்குப் போயிருந்தீன்னா, கோபால்ட் பத்தித் தெரிஞ்சிருக்கும்.

பிப்.: நான் இன்னும் அந்த அளவுக்கு எல்லாம் போகலப்பா.

பியூ.: கோபால்ட் நீலத்தின் பல்வேறு வகைகள் ஓவியர்களிடையே புகழ்பெற்றிருக்கு.

பிப்.: அப்படியா, அதெல்லாம் என்ன?

பியூ.: கோபால்ட் நீலம், கோபால்ட் பச்சை, கோபால்ட் கருநீலம் என நீல நிறம் சார்ந்த பல்வேறு வகை வண்ணங்கள் கோபால்ட்டை அடிப்படையாகக் கொண்ட வண்ணங்கள். இவற்றை ஓவியர்கள் பல நூற்றாண்டுகளாகப் பயன்படுத்தி வந்திருக்காங்க.

பிப்.: அப்ப கோபால்ட்டுக்கு ஓவியர்கள் எல்லாம் சேர்ந்து பெரிய நன்றியே சொல்லணும்.

பியூ.: ஓவியத்துல மட்டுமில்ல, கண்ணாடிகள், ஜன்னல் கண்ணாடிகளில் நீல நிறத்தை ஏற்றுவதற்காக வெண்கலக் காலத்திலிருந்து கோபால்ட்டை பயன்படுத்திட்டு வர்றதா ஆராய்ச்சியாளர்கள் சொல்றாங்க.

பிப்.: வெண்கலக் காலமா, அது என்ன?

பியூ.: வெண்கல உலோகத்தை மனிதர்கள் பயன்படுத்த ஆரம்பித்த காலம்தான், வெண்கலக் காலம். அதாவது, இன்னைலேர்ந்து 3200 ஆண்டுகளுக்கு முன்பிருந்து 5000 ஆண்டுகளுக்கு முன்பு வரையிலான காலம்.

பிப்.: அவ்ளோ வருஷமா?

பியூ.: ஆமா, அப்ப நைல் நதிக்கரை நாகரிகத்தைச் சேர்ந்த எகிப்திய மக்கள் ஓவிய வண்ணங்களாகவும் நகைகளிலும் கோபால்ட்டை பயன்படுத்தியிருக்காங்க.

பிப்.: அப்ப அது கோபால்ட்னு தெரிஞ்சுதான் பயன்படுத்தினாங்களா?

பியூ.: இல்ல, ஸ்வீடன் வேதியியலாளர் ஜார்ஜ் பிராண்ட் 1735-ல் அதைத் தனியா பிரித்தெடுக்குற வரைக்கும், அது கோபால்ட்தான்னு யாருக்கும் தெரியலை.

பிப்.: அதானே பார்த்தேன்.

பியூ.: பிராண்ட் கண்டறிஞ்சு சொல்ற வரைக்கும் பிஸ்மத் தனிமத்தாலதான் நீல நிறம் கிடைக்கிறதா நம்பிட்டிருந்தாங்க. ஏன்னா இந்த இரண்டு தனிமங்களும் இயற்கை தாதுப் பொருளில் கலந்துதான் இருந்துச்சு.

பிப்.: எல்லா புகழும் விஞ்ஞானி பிராண்டைத்தானே சேரும்?

பியூ.: அப்படிச் சொல்ல முடியாது. 1802-ல் லூயி ழாக் தெனார்டு என்பவர்தான் கோபால்ட் அலுமினேட் என்ற கோபால்டின் சேர்மத்தைக் கண்டறிந்தார். அதுவே கோபால்ட் நீலம் என்ற வண்ணம்.

பிப்.: அப்ப ரெண்டு பேருக்கும் நன்றி சொல்வோம்.

பியூ.: வேதியியல் வரலாற்றில் கோபால்ட்டுக்கு ஒரு தனிச்சிறப்பு உண்டு.

பிப்.: அது என்ன?

பியூ.: வரலாற்றுக் காலத்துக்குப் பின்னால் கண்டறியப்பட்ட முதல் உலோகம் கோபால்ட். ஏனென்றால் இரும்பு, வெண்கலம், வெள்ளி, தங்கம், துத்தநாகம், பாதரசம், தகரம், காரீயம், பிஸ்மத் உள்ளிட்ட உலோகங்கள் வரலாற்றுக் காலத்துக்கு முன்பே கண்டறியப்பட்டுவிட்டன. அவற்றைக் கண்டறிந்த தனிமனிதர்கள் யாரென்று யாருக்கும் தெரியாது.

பிப்.: ம்ம்ம். சரி ஓவிய வண்ணங்கள், கண்ணாடிக்கு மட்டும்தான் கோபால்ட்டை பயன்படுத்தினாங்களா?

பியூ.: இல்லை, பீங்கான், மை, பெயின்ட், வார்னிஷ் போன்றவற்றில் அடர் நீல நிறத்தைக் கொடுக்கவும் கோபால்ட் பயன்படுது.

பிப்.: கோபால்ட் பயன்கள் பெருசுதான்.

பியூ.: இன்னும் முடியலை பிப். இயற்கையாக காந்த ஆற்றலைப் பெற்றுள்ள ஒரு சில உலோகங்கள் அதிக வெப்பநிலையில் காந்த ஆற்றலை இழந்துவிடுகின்றன. ஆனா, அந்த நிலையிலும்கூட கோபால்ட் காந்த ஆற்றலை இழக்கிறதில்லை.

பிப்.: இது ரொம்ப வித்தியாசமா
இருக்கே.

பியூ.: கடைசியா முக்கியமான விஷயம் ஒன்றைச் சொல்லி முடிக்கிறேன். உயிரினங்களின் உடலுக்கு அத்தியாவசியத் தேவைகளில் ஒன்றான கோபாலமின் என்ற வேதிப்பொருள், முக்கியமான துணைநொதியூக்கி. இதற்கு இன்னொரு பெயர் வைட்டமின் பி 12.

பிப்.: அப்போ மனுசங்க ஆரோக்கியமா வாழ்றதுக்கும் கோபால்ட் பயன்படுதுன்னு சொல்லு.

 

இந்த வாரத் தனிமம்

கோபால்ட்

குறியீடு: Co

அணு எண்: 27

கண்டறியப்பட்ட ஆண்டு: 1735

கண்டறிந்தவர்: ஸ்வீடன் வேதியியலாளர் ஜார்ஜ் பிராண்ட் - கோபால்ட் எளிதில் உடைந்துவிடக் கூடிய, ஓர் அரிய தனிமம். பார்ப்பதற்கு எஃகு, நிக்கலைப் போலிருந்தாலும், தூய்மையான வடிவத்தில் வெள்ளி நீல நிறத்துடன் பளபளவென்று காணப்படும். இந்தத் தனிமத்தை அதிகம் உற்பத்தி செய்வது ஆப்பிரிக்க நாடான காங்கோ. அங்கே இந்தத் தனிமத்தின் இயற்கைத் தாது அதிகம் கிடைக்கிறது.

தொடர்புக்கு: valliappan@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x