Last Updated : 18 Oct, 2018 03:03 PM

 

Published : 18 Oct 2018 03:03 PM
Last Updated : 18 Oct 2018 03:03 PM

திறந்திடு சீஸேம் 05: லிமாவின் பொக்கிஷங்கள்!

2016 ஏப்ரலில் கோஸ்டா ரிகா நாட்டின் கோகோஸ் தீவைப் புயல் ஒன்று தாக்கியது. கடலோரப் பகுதியில் ஆமைகள் முட்டையிட்டுக் குஞ்சு பொரிக்கும் காலம் அது. எனவே, ஆமைகள் பாதுகாப்பாக இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வனத்துறை அலுவலர்கள் சிலர் கடலோரமாக ரோந்து சென்றார்கள். அப்போது மண்ணில் பாதி புதைந்து கிடந்த சில மரப்பெட்டிகள் தென்பட்டன. சிரமப்பட்டு அதைத் திறந்து பார்த்தவர்கள் ஆச்சரியத்தில் திகைத்துப் போய் நின்றனர்.

பதினாறாம் நூற்றாண்டு முதலே பெரு தேசம், ஸ்பெயினின் காலனியாதிக்கத்தில் சிக்கியிருந்தது. பதினெட்டாம் நூற்றாண்டின் இறுதியில் ஸ்பெயினுக்கு எதிராக கிளர்ச்சிகள் எழுந்தன. 1820-ல் பெரு நாட்டின் தலைநகரான லிமாவை, புரட்சிப் படையினர் ஸ்பெயினிடமிருந்து மீட்டனர்.

அத்தனை காலம் பெருவில் சுரண்டிச் சேர்த்த செல்வங்களை எல்லாம் எங்கே பதுக்கி வைப்பது என்று ஸ்பானியர்கள் பதற்றத்துடன் யோசித்தனர். பெருவில் நியமிக்கப்பட்டிருந்த ஸ்பெயின் வைஸ்ராய் பெஸுவேலாவும், லிமாவின் தேவாலயத்தைச் சேர்ந்த தலைமை மதகுருவும் ரகசியக் கூட்டத்துக்கு ஏற்பாடு செய்தனர். லிமாவில் வாழ்ந்து கொண்டிருந்த ஸ்பெயினைச் சேர்ந்த செல்வந்தர்கள் எல்லாம் தமது செல்வங்களைச் சுமந்துகொண்டு தேவாலயத்தை அடைந்தனர். அந்தச் செல்வங்களுடன், தேவாலயத்துக்குச் சொந்தமான சில பொக்கிஷங்களும் சேர்க்கப்பட்டன. அவற்றை எல்லாம் கடல் வழியே மெக்சிகோவுக்குக் கொண்டு சென்று பத்திரப்படுத்த முடிவு செய்தார்கள்.

அப்போது துறைமுகத்தில் ஸ்பானியக் கப்பல்கள் எதுவும் இல்லை. மேரி டியர் என்ற கப்பல் மட்டும் புறப்படத் தயாராக இருந்தது. அதன் கேப்டன் பிரிட்டனைச் சேர்ந்த வில்லியம் தாம்ப்ஸன். மதகுரு, கேப்டன் தாம்ப்ஸனிடம் உதவி கேட்டார். விவரங்களைச் சொன்னார். தாம்ப்ஸன் ஒப்புக்கொண்டார். செல்வங்கள் கப்பலேறின. உடன் ஆறு ஸ்பானிய வீரர்களும், இரண்டு மதகுருமார்களும் கப்பலேறினர்.

கப்பல் ஆழ்கடலுக்கு வந்திருந்தது. கேப்டன் தாம்ப்ஸனின் மனத்தில் வில்லன் உருவானான். அடேங்கப்பா, இவ்வளவு செல்வங்களா! காலம் முழுக்க உழைத்தாலும் இவ்வளவு சம்பாதிக்க முடியாதே. தங்க நகைகள், நாணயங்கள், வைரக் கற்கள் பதிக்கப்பட்ட சிலுவைகள், மதிப்பு மிகுந்த பூஜைப் பொருள்கள், தங்கத்தாலான மெழுகுவத்தித் தாங்கிகள், அன்னை மேரியின் கையில் குழந்தை இயேசு இருப்பதுபோல இரண்டு சிலைகள், மேலும் பல அழகான சிலைகள், இன்னும் இன்னும்!

தாம்ப்ஸன் தன் குறுவாளை எடுத்தார். அவரது பணியாளர்களும் சேர்ந்துகொண்டார்கள். அடுத்த சில நிமிடங்களில் கப்பலிலிருந்த ஸ்பானிய வீரர்களும், மதகுருமார்களும் கொல்லப்பட்டுக் கடலில் வீசப்பட்டனர்.

சில நாட்கள் கழித்து மேரி டியர், கோகோஸ் தீவை அடைந்தது. வட, தென் அமெரிக்கக் கண்டங்களை இணைக்கும் வால் பகுதியான கோஸ்டா ரிகாவிலிருந்து சுமார் 340 மைல்கள் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் அமைந்துள்ள ஆளில்லாத தீவு அது. தற்சமயத்துக்கு லிமாவின் பொக்கிஷங்களை அங்கே புதைத்து வைத்துவிடலாம். பிறகு சந்தர்ப்பம் வாய்க்கும்போது, வந்து தோண்டி எடுத்துக்கொள்ளலாம் என்பது தாம்ப்ஸனின் திட்டம். பொக்கிஷங்கள் அங்கே புதைக்கப்பட்டன. அவற்றின் இன்றைய உத்தேச மதிப்பு 208 மில்லியன் டாலர்கள் வரை இருக்கலாம்.

கோகோஸ் தீவிலிருந்து மேரி டியர் கிளம்பியது. தாம்ப்ஸன் மீண்டும் கோகோஸ் தீவுக்கு வந்தாரா? புதையலை மீட்டாரா? அல்லது ஸ்பானியர்களிடமே அந்தப் புதையல் சிக்கிக் கொண்டதா? இதைச் சுற்றி சில கதைகளும், சம்பவங்களும் சொல்லப்படுவது உண்டு.

மேரி டியர் ஸ்பானியர்களிடம் சிக்கிக்கொண்டது. அவர்கள் மிரட்ட தாம்ப்ஸனும், அவரது கப்பலின் துணை கேப்டனும் புதையலைப் பதுக்கி வைத்திருக்கும் இடத்தைக் காட்டிக் கொடுக்க ஒப்புக்கொண்டனர். கோகோஸ் தீவுக்கு வந்தனர். அங்கே ஸ்பானிய வீரர்களை அலைக்கழித்த தாம்ப்ஸனும் துணை கேப்டனும் ஒரு கட்டத்தில் அடர்ந்த காட்டுக்குள் புகுந்து ஓடித் தப்பித்தனர். அதற்குப் பின் ஸ்பானியர்களால் தாம்ப்ஸனையும் லிமா பொக்கிஷங்களையும் கண்டுபிடிக்கவே முடியவில்லை. தாம்ப்ஸன் புதையலோடு அங்கிருந்து தப்பித்தாரா என்பது குறித்த எந்தத் தகவலும் கிடையாது.

கேப்டன் போக், கேப்டன் கீட்டிங் என்ற இருவர் லிமாவின் பொக்கிஷங்களை மீட்டுப் பெரிய படகு ஒன்றில் திரும்பும்போது, அது நடுக்கடலில் கவிழ்ந்தது. பொக்கிஷங்கள் கடலில் மூழ்கின என்றொரு சம்பவம் சொல்லப்படுவது உண்டு. 1889-ல் ஆகஸ்ட் கிஸ்லெர் என்ற ஜெர்மானியர் கோகோஸ் தீவுக்குப் புதையலைத் தேடிவந்தார். அங்கேயே 20 ஆண்டுகள் தங்கி, தேடினார். ஆனாலும் கிஸ்லெருக்குக் கிடைத்தது என்னவோ ஆறே ஆறு தங்க நாணயங்கள் மட்டுமே. 1908-ல் கிஸ்லெர் மனம் வெறுத்துக் கிளம்பினார்.

இதுவரை முந்நூறுக்கும் மேற்பட்டோர், கோகோஸ் தீவில் புதையல் வேட்டை நடத்தி தோல்வியை ருசித்துள்ளனர். 1978-ல் கோகோஸ் தீவில் புதையல் வேட்டை நடத்த கோஸ்டா ரிகா அரசு தடை விதித்தது.

‘நிறைய தங்க நாணயங்கள், வெள்ளி நாணயங்கள், அன்னை மேரி குழந்தை இயேசுவுடன் இருப்பதுபோல இரண்டு சிலைகள், தங்க மெழுவத்தித் தாங்கிகள், இன்னும் பல பொக்கிஷங்கள் இந்தப் பெட்டிகளில் இருக்கின்றன’ என்று அந்த வனத்துறை அலுவலர்கள் இருவரும் தங்கள் உயரதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தனர். அரசு அவற்றைக் கைப்பற்றியது. அவை கோஸ்டா ரிகாவின் சான் ஜோஸ் நகர அருங்காட்சியகத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.

2016-ல் வனத்துறையினரால் கண்டெடுக்கப்பட்டவைதான் லிமாவின் பொக்கிஷங்களா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கண்டெடுக்கப்படாத லிமாவின் பொக்கிஷங்கள் இன்னும் கோகோஸ் தீவுகளில் இருக்கின்றனவா என்ற கேள்விக்கும் பதில் தெரியவில்லை.

(பொக்கிஷங்களைத் தேடுவோம்!)
கட்டுரையாளர், எழுத்தாளர்
தொடர்புக்கு: mugil.siva@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x