Published : 10 Oct 2018 10:05 AM
Last Updated : 10 Oct 2018 10:05 AM

பறக்க முடியாத குருவி!

வினி சிட்டுக்குருவி எப்போதும் விநோதமான விஷயங்களைத்தான் செய்துகொண்டிருக்கும். ஒரு நாள் அதுக்கு மனிதர்களின் உணர்ச்சிகளைச் சேகரிக்க வேண்டும் என்று ஆசை வந்தது. உடனே பெரிய பையை எடுத்துக்கொண்டு கிளம்பியது.

ஒரு கடை வாசலில் போய் அமர்ந்தது. அங்கே கடைக்காரர் ஏமாற்றிவிட்டார் என்று ஒருவர் குற்றம் சுமத்திக்கொண்டிருந்தார். உடனே ஏமாற்றத்தை எடுத்துப் போட்டுக்கொண்டது. பிறகு அங்கே சிதறிக் கிடந்த தானியங்களைக் கொறித்தது.

மீண்டும் பறக்க ஆரம்பித்தது. பொறாமை, வெறுப்பு, சகிப்பின்மை, பழிவாங்கல் போன்ற உணர்ச்சிகளை எல்லாம் சேகரித்தபோது பை நிறைந்துவிட்டது.

ஓரிடத்தில் அமர்ந்து ஓய்வெடுத்தது.

‘அடடா! மனிதர்கள்தான் எவ்வளவு சுவாரசியமானவர்கள்! கோபம், ஏமாற்றம், சகிப்பின்மை, வெறுப்பு, பொறாமை என்று கலவையாக இருக்கிறார்கள்! விநோதமான மனிதர்கள்’ என்று நினைத்த சிட்டுக்குருவிக்குத் திடீரென்று கூடுக்குத் திரும்ப வேண்டும் என்று எண்ணம் வந்தது.

சிறகுகளைச் சிலுப்பிக்கொண்டது. பையை எடுத்துக்கொண்டு பறக்க முயன்றது. ஏனோ இடத்தை விட்டுக்குக்கூட அசைய முடியவில்லை. பறக்க முயன்று தோல்வியைச் சந்தித்துக்கொண்டிருந்தது. இறுதியில் களைப்படைந்து உட்கார்ந்துவிட்டது.

அப்போது சிட்டுக்குருவியின் நண்பனான கிளி வந்தது. “என்ன, ரொம்ப சோர்வா இருக்கே? உன் சுறுசுறுப்பையும் உற்சாகத்தையும் காணோம்” என்று வருத்தத்தோடு கேட்டது.

“கிளியே, என்னால் பறக்க முடியவில்லை. வேகமாகச் செயல்பட முடியவில்லை. எனது ஆற்றல் போய்விட்டதைப்போல உணர்கிறேன். காரணமும் புரியவில்லை.”

“ஐயோ… இது என்ன நோய்? நம்மால் பறக்காமல் உயிர் வாழ முடியுமா? அது என்ன பை?” என்று கேட்டது கிளி.

“அதுவா, மனிதர்களின் உணர்ச்சிகளைச் சேமித்து வைத்திருக்கிறேன்.”

“அட, அப்படியா? என்னென்ன உணர்ச்சிகள்?”

“ஏமாற்றம், பொறாமை, சோகம், கோபம், பேராசை போன்றவற்றை வைத்திருக்கிறேன்.”

“அப்படியா! இந்தப் பைதான் உன்னைப் பறக்க விடாமல் செய்கிறது. இதைக் கவிழ்த்துக் கொட்டிப் பாரேன்.”

“புரியாமல் பேசுகிறாயே, இது மிகவும் சிறிய பை.”

“உனக்குப் பறப்பது முக்கியமா, இல்லை இந்தப் பை முக்கியமா? ஒரு உணர்ச்சியை எடுத்து வெளியில் போட்டுப் பாரு” என்றது கிளி.

மனம் இல்லாமல் தன் பையிலிருந்து கோபத்தை எடுத்துக் கீழே போட்டது சிட்டுக்குருவி. உடனே சற்றுத் தூரம் பறக்க முடிந்தது. சிட்டுக்குருவிக்கு ஆச்சரியமாக இருந்தது. அடுத்து பொறாமையை எடுத்துப் போட்டது. இன்னும் வேகமாக அதிக தூரம் பறக்க முடிந்தது. இப்படி ஒவ்வோர் உணர்ச்சியையும் எடுத்துக் கீழே வீசியது. இறுதியில் பை முழுவதும் காலியாகிவிட்டது. வழக்கம்போல் உற்சாகமாகக் சிட்டுக்குருவியால் பறக்க முடிந்தது.

“கிளியே, அரிய உண்மையை எனக்கு நீ உணர்த்திவிட்டாய். இந்த எதிர்மறை உணர்ச்சிளைச் சேகரிக்கவே கூடாது. அவை மிகச் சிறியவைபோலத் தோற்றமளித்தாலும் அவற்றின் சக்தி பெரிது. என்னுடைய சக்தி முழுவதையும் அவை உறிஞ்சிவிட்டன. ஒவ்வொன்றாக அவற்றைக் கீழே வீசியபோது ஆற்றலும் வேகமும் முன்பைவிடப் பல மடங்குப் பெருகிவிட்டது, உனக்கு என்னுடைய நன்றி” என்றது குருவி.

“உனக்குப் புரிந்துவிட்டது. புரிய வேண்டிய மனிதர்களுக்கு இது புரிந்தால், அவர்கள் இன்னும் எவ்வளவோ முன்னேறுவார்கள். சரி, நான் வருகிறேன்” என்று பறந்து சென்றது கிளி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x