Last Updated : 26 Sep, 2018 12:19 PM

 

Published : 26 Sep 2018 12:19 PM
Last Updated : 26 Sep 2018 12:19 PM

இடம் பொருள் மனிதர் விலங்கு: கபீர் சொல்கிறேன், கேளுங்கள்!

என் பெயர் கபீர். நான் ஒரு நெசவாளி. என்னிடம் ஒரு தறி உள்ளது. அதைக் கொண்டு நான் துணி நெய்கிறேன். ஒரு நூலை இன்னொரு நூலோடு கோப்பேன். அதை வேறொரு நூலோடு சேர்ப்பேன். அவ்வளவுதான் என் வேலை. அவ்வளவுதான் தெரியும் எனக்கு.

நான் எப்போதும் அமைதியாகவே இருப்பேன். ஆனால் என் தறி ஓயாமல் தாளமிட்டுக்கொண்டே இருக்கும். அந்தத் தாளம் எனக்குப் பிடிக்கும். ஒரு நாள் அந்தத் தாளத்துக்கு ஏற்றாற்போல் சில சொற்களை ஒன்றன் பின் ஒன்றாகச் சொல்லிப் பார்த்தேன். மீண்டும் மீண்டும் அவ்வாறு சொன்னபோது, அந்தச் சொற்கள் இணைந்து ஒரு பாடலாக மாறிவிட்டதை உணர்ந்தேன்.

கபீர் நீ எப்படி இவ்வளவு இனிமையாகப் பாடுகிறாய் என்று சிலர் கேட்கும்போது எனக்குக் கூச்சமாக இருக்கும். நான் அல்ல, என் தறியே பாடுகிறது என்று சொல்லிவிடுவேன். அவர்கள் சிரிப்பார்கள். அதென்ன தறி எப்படிப் பாடும் என்பார்கள். அது உண்மை என்பது அவர்களுக்குத் தெரியாது.

நீங்களே சொல்லுங்கள். தறி இல்லாவிட்டால் எனக்குத் தாளம் என்றால் என்னவென்று தெரியாமல் போயிருக்கும். தாளம் என்றால் என்னவென்று தெரியாவிட்டால் நான் எப்படிப் பாடலை உருவாக்கியிருப்பேன்?

பாடுவதற்கு மட்டுமல்ல, எப்படி வாழ வேண்டும் என்றும் அதைவிட முக்கியமாக எப்படி வாழக் கூடாது என்றும் தறியே எனக்குக் கற்றுக் கொடுத்தது. எப்படி என்று சொல்கிறேன், கேளுங்கள்.

போன வாரம் சந்தையில் ஒரு தகராறு. ஒரு பண்டிதரையும் ஓர் ஏழைப் பெண்ணையும் போட்டு ஒரு கூட்டம் அடித்துக்கொண்டிருந்தது. உள்ளே புகுந்து அவர்களைக் காப்பாற்றினேன். என் முதுகிலும் சில அடிகள் விழுந்தன. இவர்கள் செய்த தவறு என்ன? எதற்காக இந்தத் தாக்குதல்? “கபீர், இந்தப் பண்டிதருக்குத் தாகம் ஏற்பட்டிருக்கிறது. அதற்காகப் போயும் போயும் இந்தப் பெண்ணிடமிருந்தா தண்ணீர் வாங்கிக் குடிப்பது? அதான் அடிக்கிறோம்” என்றார்கள்.

எனக்குச் சிரிப்பு வந்தது. தண்ணீர் குடிப்பது ஒரு தவறா என்று கேட்டேன். “அப்படி இல்லை, கபீர். பண்டிதர் உயர் சாதியைச் சேர்ந்தவர். இந்தப் பெண்ணோ தாழ்ந்த சாதியைச் சேர்ந்தவர். இவரிடமிருந்து பண்டிதர் எப்படித் தண்ணீர் வாங்கிக் குடிக்கலாம்? இந்தப் பெண்ணுக்குதான் புத்தியில்லை என்றால் படித்த பண்டிதருக்கும்கூடவா புத்தி பேதலித்துவிட்டது? இப்படியா மரபுகளை மீறி நடந்துகொள்வது? இவர்களை உதைத்தால்தான் மற்றவர்களுக்கும் அறிவு வரும். இதில் நீ தலையிட வேண்டாம் கபீர். இல்லாவிட்டால் உனக்கும் சேர்த்து உதை விழும்!”

இரண்டு நாட்களுக்கு முன்பு இன்னொரு மோதல். ராமர் பெரியவரா, ரஹீம் பெரியவரா? யாருக்கு செல்வாக்கு அதிகம்? யாருக்கு சக்தி அதிகம்? யாரை வணங்கினால் நிறைய நன்மைகள் கிடைக்கும்? இரண்டு குழுக்கள் ஆளுக்கொரு பக்கமாகப் பிரிந்து நின்று சுடச்சுட வாதம் செய்துகொண்டிருந்தன. வெறுமனே வாய் சண்டையாக இருந்தால் பரவாயில்லை. நீயா, நானா பார்த்துவிடுவோம் என்று அடிதடியிலும் இறங்கிவிட்டார்கள். இத்தனைக்கும், அவர்களில் பலர் கற்றறிந்த அறிஞர்கள்!

இதற்கெல்லாம் கோபப்படுவதா அல்லது வருத்தப்படுவதா? கண்ணுக்குத் தெரியாத சாதியையும் மதத்தையும் வைத்துக்கொண்டு ஏன் அவர்கள் சண்டை போட்டுக்கொள்கிறார்கள்? பாமரர்களுக்கு எதுவும் தெரியாது, சரி. பண்டிதர்களுக்கும் அறிஞர்களுக்கும்கூடவா உண்மை தெரியாது? ஏன் அவர்கள் வீணாகச் சண்டையை வளர்க்கிறார்கள்? அவர்கள் படிக்காத நூல்களா?

எனக்கு ஓர் எழுத்துகூட எழுதவோ படிக்கவோ தெரியாது. எனக்குத் தெரிந்த ஒரே நூல், என் தறியில் உள்ள நூல் மட்டும்தான். அது எப்போதும் தூய்மையான வெள்ளை நிறத்தில் இருக்கும். அந்த நூலின்மீது உங்களுக்குத் தேவைப்படும் சாயத்தை நீங்கள் ஏற்றிக்கொள்ளலாம். நீங்கள் எந்தச் சாயத்தை ஏற்றினாலும் அது ஏற்றுக்கொள்ளும். அந்தச் சாயத்துக்கு ஏற்றாற்போல் தன் தோற்றத்தை அது மாற்றிக்கொள்ளும். பச்சை சாயம் பூசினால் நூலும் பச்சையாகிவிடும். நீலத்தை ஏற்றினால் நீலம். சிவப்பு வேண்டுமா, அதையும் ஏற்றுக்கொள்ளும்.

சிலருக்குச் சிவப்பு பிடிக்கும். சிலருக்கு வெள்ளை. சிலருக்கு நீலம். எனக்குப் பச்சை. ஒருவர் ராம், ராம் என்கிறார். இன்னொருவர் ரஹீம் என்கிறார். நான் இந்த இரண்டையும் கலந்துகொள்கிறேன் என்கிறார் இன்னொருவர். எனக்கு இந்த இரண்டும் வேண்டாம் என்கிறார் இன்னொருவர். உனக்கு ஏன் பச்சைப் பிடித்திருக்கிறது என்பீர்களா? இனி நீலம் போடாதே என்று சண்டையிடுவீர்களா? எல்லோரும் ஒரே வண்ண ஆடையைத்தான் அணிந்துகொள்ள வேண்டும் என்று வற்புறுத்துவீர்களா?

நான் நெய்து தரும் ஆடை கோயிலுக்கும் போகிறது, மசூதிக்கும் போகிறது. என் தறிக்கு மதம் தெரியாது. சாதி தெரியாது. படித்தவரா, பண்டிதரா, பாமரரா என்று அது பார்ப்பதில்லை. உனக்கொரு நூல், எனக்கொரு நூல், கடவுளுக்கு ஒரு நூல் என்று அது பேதம் பிரிப்பதில்லை. வெள்ளை உள்பட எல்லா நிறங்களையும் என்னுடைய தறி நேசிக்கிறது.

நான் என் தறியின் மாணவன். நான் ஆடைகளில் வண்ணங்களைப் பார்ப்பதில்லை. நூலை மட்டுமே பார்க்கிறேன். சாதிகளை, மதங்களைப் பார்ப்பதில்லை. மனிதனை மட்டுமே பார்க்கிறேன். ஒருபோதும் எதையும் பிரிக்காதே, இணைத்துக்கொண்டே இரு என்கிறது என் தறி. நூல்களை இணைத்து ஆடைகளையும் சொற்களை இணைத்து பாடல்களையும் உருவாக்கிக்கொண்ட இரு என்கிறது தறி. ஒரு மனிதர் இன்னொருவரோடு இணையும்வரை, அவர் வேறொருவரோடு இணையும்வரை பாடிக்கொண்ட இரு என்கிறது தறி.

எனவே நான் பாடுகிறேன். எனக்காகவோ உங்களுக்காகவோ அல்ல, நமக்காக.

(கபீர் பதினைந்தாம் நூற்றாண்டில் வாழ்ந்த கவிஞர். எளிய பாடல்கள் மூலம் மத ஒற்றுமையை வலியுறுத்தியவர்.)


கட்டுரையாளர், எழுத்தாளர்

தொடர்புக்கு: marudhan@gmail.com | ஓவியங்கள்: லலிதா

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x