Last Updated : 19 Sep, 2018 11:15 AM

 

Published : 19 Sep 2018 11:15 AM
Last Updated : 19 Sep 2018 11:15 AM

கதை: வடை காய்க்கும் மரம்!

பச்சைமலைக் காட்டில் வசித்த குரங்கும் முயலும் நல்ல நண்பர்களாக இருந்தன. முயல் நல்ல உழைப்பாளி. ஆனால் குரங்கு சோம்பேறி.

அது எப்போதும் வேறு யாராவது உழைத்துக் கொண்டுவந்த உணவைத் திருடித் தின்றுவிட்டுத் தூங்கிக் கொண்டிருக்கும். அதுக்கு உலக அறிவும் மிகக் குறைவு.

குரங்கின் சோம்பேறித்தனம் முயலுக்குப் பிடிக்கவில்லை. ஆனாலும் அது நண்பனின் மீது அதிக அன்பு வைத்திருந்ததால்  வெறுப்புக் காட்டியதில்லை. தான் தேடிக் கொண்டுவந்த கிழங்குகளைக் குரங்குக்குக் கொடுக்கும்.

ஒருநாள் அந்தச் சோம்பேறி குரங்கு காட்டிலிருந்து வெளியேறி அருகிலுள்ள கிராமத்துக்குச் சென்றது. அங்கே ஒரு பாட்டி தன் வீட்டுக்கு முன்பு வடை சுட்டு விற்றுக்கொண்டிருந்தார்.

குரங்கு அந்தப் பாட்டிக்குத் தெரியாமல் ஒரு வடையைத் எடுத்து தின்றது. வடை சுவையாக இருந்ததால், ஒரு யோசனை வந்தது.

இந்த வடையை மண்ணில் நட்டு வைத்தால் அதிலிருந்து முளைக்கும் மரத்தில் நிறைய வடைகள் காய்க்கும்! நாம் தினமும் இந்தக் கிராமத்துக்கு நடந்து வந்து, வடையைச் சாப்பிட வேண்டிய அவசியம் இருக்காதே என்று நினைத்தது குரங்கு.

மீண்டும் பாட்டிக்குத் தெரியாமல் ஒரு வடையைத் எடுத்துக் கொண்டு, காட்டுக்கு ஓடியது. தான் குடியிருக்கும் மரத்தின் அருகிலேயே மண்ணைத் தோண்டி, அந்த வடையை நட்டு வைத்தது. குட்டைக்குச் சென்று தண்ணீர் கொண்டு வந்து ஊற்றியது.

தினமும் அந்தக் குரங்கு வடையைப் புதைத்து வைத்த இடத்தில் தண்ணீர் ஊற்றிச் சென்றது.

"நண்பா, என்ன ஆளே மாறிவிட்டாய். முன்பெல்லாம் எப்போதும் உறங்கிக் கொண்டிருப்பாய். சில நாட்களாக இந்த இடத்தில் தண்ணீர் கெரண்டு வந்து ஊற்றுகிறாய். என்ன காரணம்?" என்று குரங்கிடம் கேட்டது முயல்.

குரங்குக்கு முயலிடம் உண்மையைச் சொல்ல விருப்பம் இல்லை. "ஒன்றுமில்லை நண்பா. பொழுது போகவில்லை. இங்கிருக்கும் எறும்புகளுக்குக் குடிக்கத் தண்ணீர் தருகிறேன்" என்று பொய் செரன்னது குரங்கு. முயலும் பதில் ஏதும் சொல்லாமல் சென்றுவிட்டது.

நாட்கள் கழிந்தன. வடையை நட்டு வைத்த இடத்தில் ஒரு செடி முளைத்தது. அதைக் கண்டதும் குரங்குக்கு மகிழ்ச்சியாக இருந்தது.

‘ஆஹா! வடை முளைத்துவிட்டது. இன்னும் கொஞ்ச நாட்களில் பெரிய மரமாக வளர்ந்து, வடை காய்க்கத் தொடங்கிவிடும். நான் தினமும் வடைகளைத் தின்றுவிட்டு ஜாலியாகப் படுத்து உறங்கலாம்’ என்று நினைத்தது குரங்கு. வடை உண்ணும் ஆர்வத்தில் தினமும் அந்தச் செடிக்குத் தண்ணீர் ஊற்றியது. கூடவே எந்த விலங்கும் அந்தச் செடியைச் சேதம் செய்துவிடாதபடி  பாதுகாத்தது.

செடி பெரிதாக வளர்ந்து மரமாக மாறியது. பூக்கள் தோன்றின.

‘கொத்துக் கெரத்தாகப் பூத்துக் கிடக்கும் இந்தப் பூக்கள் எல்லாம் வடைகளாகக் காய்க்கத் தொடங்கினால் நூற்றுக்கணக்கில் வடைகள் காய்க்குமே! நான் தினமும் வயிறு நிறைய வடைகள் சாப்பிடலாமே’ என்று நினைத்து மகிழ்ச்சியில் குதித்தது குரங்கு.

பூக்கள் காய்க்கத் தொடங்கின. பச்சை நிறத்தில் கிடந்த காய்களைப் பார்த்த குரங்குக்குச்  சந்தேகம் வந்தது. ‘இதைப் பார்த்தால் வடைபோலத் தெரியவில்லையே. எதற்கும் இன்னும் சில நாட்கள் பொறுத்துப் பார்ப்போம்’ என்று நினைத்தது அது.

நாட்கள் கழிந்தன. அந்த மரத்தில் பெரிதாகப் பருக்கத் தொடங்கிய காய்களைப் பார்த்ததும் அவை வடை அல்ல, மாங்காய் என்று புரிந்தது.

‘என்ன இது? நான் வடையை நட்டு வைத்து தினமும் தண்ணீர் ஊற்றி வளர்த்தேன். வடை மரத்துக்குப் பதிலாக மாமரம் முளைத்திருக்கிறதே?’ என்று நினைத்த குரங்கு வருத்தத்தோடு அமர்ந்துவிட்டது.

முயல் அங்கே வந்தது.

"என்ன நண்பா! வருத்தத்தோடு அமர்ந்திருக்கிறாய்? என்ன காரணம்?"

"நண்பா, இந்த இடத்தில் ஒரு வடையை நட்டு வைத்து தினமும் தண்ணீர் ஊற்றினேன். ஆனால் வடை மரத்துக்குப் பதிலாக மாமரம் முளைத்திருக்கிறது!" என்று வருத்தத்தோடு சொன்னது குரங்கு.

விழுந்து விழுந்து சிரித்தது முயல்.

"நண்பா, அன்று நீ வடையை நட்டு வைப்பதை நானும் பார்த்தேன். வடை முளைக்குமா? நீ வடையை நட்டு வைத்ததற்கு உன் சோம்பலும் முட்டாள்த்தனமும்தான் காரணம். வேக வைத்த விதைகூட முளைக்காது. வடை எப்படி முளைக்கும்? குறைந்த உழைப்பில் தினமும் சுவையான வடையைச் சாப்பிடலாம் என்று நினைத்தாய். நீ வடையை நட்டு வைத்த இடத்தில் நான் மாங்கொட்டையை நட்டு வைத்தேன்.

அதை அறியாத நீ தினமும் தண்ணீர் ஊற்றினாய். இன்று அது மரமாகிவிட்டது. சீக்கிரமே  மாம்பழங்கள் கிடைக்கும். சுவையான மாம்பழங்களை நீயும் உண்ணலாம். பிறருக்கும் கொடுக்கலாம். இனியாவது சோம்பலின்றி உழைத்துச் சாப்பிடு" என்று சொன்னது முயல்.

"நண்பா, என் சோம்பலையும் அறியாமையையும் நீக்கிவிட்டாய். இன்று முதல் நான் உழைத்து உண்பேன். மற்றவர்களுக்கும் உதவுவேன்" என்றது குரங்கு.    

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x